Last Updated : 08 Aug, 2014 01:43 PM

 

Published : 08 Aug 2014 01:43 PM
Last Updated : 08 Aug 2014 01:43 PM

அன்று வந்ததும் அதே நிலா: நான் கடைசி சீடன்

விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகைச்சுவையில் கடைசிவரை ஆபாசத்திற்கு இடம் கொடுக்காமல் தூய்மையைக் கடைபிடித்தார் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். அவரது வழியை அப்படியே பின்பற்றியதால்தான் குலதெய்வம் ராஜகோபாலை ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டம் தேடி வந்தது. 1961-ல் மதுரை ரசிகர்கள் அவருக்கு இந்தப்பட்டத்தை வழங்கினார்கள்.

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்டராமாணிக்கம் என்ற சிற்றூரில் பிறந்து,சிறு வயது முதலே தெருக்கூத்துக்களில் நடிக்க ஆரம்பித்தார். லோகிதாசனாகவும் பாலமுருகனாகவும் நடித்துப் புகழ்பெற்ற ராஜகோபால் பிறகு 12 வயதில் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார்.

பிறகு 16 வயதில் ஸ்த்ரீ பார்ட்டுகளை ஏற்று நடிப்பதிலும் தேர்ச்சி பெற்று மதுரையில் பிரபலமான நாடகக் குழுவாக இருந்த கலைமணி நாடகக்குழுவில் சேர்ந்தார். மதுரையிலிருந்து ஒருமுறை சேலத்தில் நாடகம் நடிக்கச் சென்றிருந்தபோது முதல்முறையாகக் கலைவாணரைச் சந்திக்கிறார்.

ராஜகோபாலின் நடிப்புத் திறனும் நகைச்சுவை உணர்வும் கலைவாணருக்குப் பிடித்துப்போக “எனது கம்பெனியில் நடிக்க விரும்பினால் வாங்க மைனர்!” என்று கலைவானார் அழைப்பு விடுகிறார். இதைவிடச் சிறந்த வாய்ப்பு அமையுமா என்ன? கலைவாணரின் நாடகக் குழுவில் சிறப்பு மற்றும் சிரிப்பு நடிகராக மாறினார் ராஜகோபால். பிறகு கலைவாணர் திரைப்படங்களுக்கு இடம்பெயர்ந்தபோது, ஒரே படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அப்போதெல்லாம் கலைவாணர் தான் நடித்த படங்களிலேயே அவருக்குப் பரிந்துரை செய்தார்.

கலைவாணரும் எம்.கே.டியும் நண்பர்களாக இருந்ததால் எம்.கே.டி. நடித்த ‘புதுவாழ்வு’ என்ற படத்தில் ராஜகோபாலுக்கு முதல் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அந்தப்படத்தை முந்திக்கொண்டு, ராஜகோபால் இரண்டாவதாக நடித்த ‘நல்ல காலம்’(1954) முதலில் வெளியாகிவிடுகிறது. அதன் பிறகு வரிசையாகப் படங்கள் கிடைக்க ராஜகோபால் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவரது ‘டைமிங்சென்ஸை’ ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவர் கிசு கிசு குரலில் பேசுவதை வெகுவாக ரசித்தனர். இதனால் இரண்டே ஆண்டுகளில் விறுவிறுவென்று வளர்ந்த ராஜகோபாலின் பெயருக்கு முன்னால் ‘குலதெய்வம்’ என்ற படத்தின் பெயர் சேர்ந்து கொண்டது 1956-ம் வருடம்.

ஏ.வி.எம். கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘குலதெய்வம்’ படத்தில் மொத்தம் நான்கு கதாநாயகர்கள். அதில் கடைக்குட்டி இவர்தான். அந்தப் படத்தில் நகைச்சுவை குணச்சித்திரம் இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து நடித்த ராஜகோபால் அதன் பிறகு நகைச்சுவை குணச்சித்திர வேடங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார். பல படங்களில் மனைவியிடம் இவர் மாட்டிக்கொண்டு விழிப்பது அன்றைய 60களின் சம்சாரிகள் வாழ்வில் இருந்த தினப்பாட்டின் ஆதங்கமாக இருந்ததால் ராஜகோபால் வரும் காட்சிகளுக்கு அப்ளாஸ் விழுந்தது.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டே தனது சொந்த நாடகக் குழுவையும் தொடங்கி, பட்டி தொட்டியெங்கும் பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்தி வந்தார்.நல்ல பக்திமானாக விளங்கிய இவர், கலைவாணரைப் போலச் சிறந்த ‘வில்லுப்பாட்டு’ கலைஞராகவும் பெயர்பெற்றார். ‘ஐயப்பன் சரித்திரம்’, ‘முருகன் பெருமை’, ‘ஐயனார் கதை’, ‘நல்லத்தங்காள்’, ‘ஆறு அண்ணன்மார் அருக்காணி தங்கை’, ஆகிய வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளைத் தனது குழுவினருடன் தமிழகமெங்கும் இசைத்தார். தனது ஆசானுக்கு நன்றி பாராட்டும் விதமாக ‘கலைவாணர் வாழ்க்கை வரலாற்றையும்’ வில்லுப்பாட்டாக இசைத்தார்.

யார் கண் பட்டதோ, ஊர் ஊராகச் சென்று கலை வளர்த்து ஈட்டிய செல்வத்தை சொந்தப் படம் தயாரிக்க முதலீடு செய்துசெய்து பெரும் இழைப்பை சந்தித்தார். சுமார் 15 ஆண்டுகாலம் திரைப்படத் துறையிலிருந்து விலகியிருந்தவரை கே. பாக்கியராஜ் தனது படங்களில் மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தார்.

பாக்கியராஜின் இயக்கத்தில் அவரது அப்பாவாகவும் இன்னும் பல குணச்சித்திரங்களிலும் நடித்த குலதெய்வம் ராஜகோபால் தன்னை கலைவாணரின் கடைசி சீடன் எனத் துணிச்சலாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அது மறுக்க முடியாத உண்மை.

படங்கள்: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x