Published : 18 May 2018 10:53 AM
Last Updated : 18 May 2018 10:53 AM
அது 1988-ம் வருடம். ‘நாயகன்’ வெளிவந்து கொண்டாடப்பட்டு ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தன. அந்தப் படத்துக்கு உரையாடல் எழுதியிருந்த பாலகுமாரனிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். நான் அவரை “ பாலா சார்” என்றுதான் அழைப்பேன். எழுத்தாளர் என்பதைத் தாண்டி உணர்வுபூர்வமான படங்களை இயக்க வேண்டும் என்பதே அவர் ஆவலாக இருந்தது. திரைப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பது, அதன் நுண் இயல்புகளை உணர்வது, படிப்பது என்று தன்னைத் தயாரித்துக்கொண்டிருந்தார்.
ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் எழுதிய நாவல்களில் ஒன்று ‘நோ ஆர்சிட்ஸ் ஃபார் மிஸ் பிளாண்டிஷ்’ (No archids for miss Blandish). அதை கமல்ஹாசனுக்காக மலையாள இயக்குநர் சிபிமலயில் இயக்கவிருந்தார். இதற்கான திரைக்கதை விவாதம் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்தது. சிபிமலயிலுக்குத் தமிழ் தெரியாது என்பதால் பாலகுமாரன் அந்த விவாதத்தில் பங்குகொண்டார்.
சித் பீல்ட் எழுதிய திரைக்கதைப் புத்தகங்கள் மெத்தையில் இரைந்து கிடந்தன. சிபிமலயிலுடன் சாப்ஜானும் இன்னும் சிலரும் தட்டச்சு இயந்திரத்துடன் கூடவே இருந்தார்கள். சிபிமலயில் அப்போது சில சிறந்த படங்களை மலையாளத்தில் இயக்கியிருந்தார். அவர் அப்போதும் படித்துக் கொண்டிருந்தது பாலகுமாரனுக்குப் பிடித்திருந்தது.
நான் அடிச்சா நீ செத்துடுவே...
எது வசனம், ஏன் வசனம், எது சிறந்த வசனம் என்று பேச்சு எழுந்தது. விஷுவலாக எதைச் சொல்ல முடியாதோ, அங்கு வசனம் தேவை என்றார் சாப்ஜான். சாப்ளின் நினைத்தவற்றையெல்லாம் மவுனமொழியில் செய்து காட்டியிருக்கிறார் என்றார் சிபிமலயில். சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த பாலகுமாரன், அதை ஆஷ்ட்ரேயில் நசுக்கிப் பொசுக்கியபடி, “ஒரு சாமானியனை கதாநாயகன் ஆக்க வசனம் எழுதித்தான் ஆக வேண்டும்” என்றார். “ எப்படி?” என்றார் சிபிமலயில். அடிபட்டு உதடு கிழிந்து கிடக்கும் சாமானியனிடம் அவனை அடித்த போலீஸ்காரர், “ என்னடா அடிப்பியா?” எனக் கேட்கிறார்.
“நா அடிச்சா நீ செத்துடுவே” என்று அந்தக் கதாபாத்திரம் சொல்லும்போது நாயகன் ஆகிவிடுகிறான்” என்று பாலகுமாரன் சொன்னார். சபை அமைதியானது. அந்தப் படம் எடுக்கப்படவில்லை. ஆனால், அது பின்னர் ‘குணா’வாக மாறியது. சிபிமலயில் விலகிக்கொண்டார். தன்னையே ‘குணா’வாக பாலகுமாரன் மாற்றினார். “என் முகம் அசிங்கம், அசிங்கம். என் அப்பன் மூஞ்சிய அழிக்கணும்.” என்பது போன்ற வலுவான ‘குணா’ பட வசனங்களில் பாலகுமாரனின் வாழ்க்கையும் அவரது அனுபவமும் உண்டு.
ஒருதடவ சொன்னா…
ஒண்ணு சொன்னாலும் நச்சுனு சொல்லணும். சொல்லாததச் சொல்லணும். குறைச்சு சொல்லணும். பேசறதுக்கு முன்னால பின்னால அமைதி வேணும். ஒரு வசனம் அதிர்வை ஏற்படுத்த வேண்டும். பார்வையாளனை உறைய வைக்க வேண்டும் என்பார் பாலகுமாரன். ‘நாயகன்’, ‘குணா’, ‘பாட்ஷா’ மற்றும் அவர் பெயர் வந்த, வராத படங்களில் எல்லாம் இந்த அம்சம் உண்டு. ‘இந்தியன்’ படத்துக்கு வசனம் சுஜாதா என்றாலும் அதன் திரைக்கதையில் பாலகுமாரனின் பங்கும் உண்டு.
“போற வழி சாக்கடையா இருந்தாலும் சேர்ற இடம் கோவிலா இருக்கணும்”, “சத்திரியனா இருக்காதே சாணக்கியனா இரு” என ‘ஜென்டில்மே’னில் வரும் வசனங்கள் இன்னும் மறக்க இயலாதவை. ‘பாட்சா’வில், “ஒருதடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” மட்டுமல்ல, நக்மா, தன் காதலைச் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றபின், தேவன் பேசுவார். “இன்னிக்கு எழுந்த காலை புதுசு. அவ சிரிப்பு புதுசு, அவ போறது புதுசு” என்ற வசனமும் மிக முக்கியமானது. கதையின் உச்சத்தை நோக்கி இழுத்துச் செல்வது.
‘புதுப்பேட்டை’யில் பாலாசிங், “அவ சொல்லிக் கொடுத்தாளா, மடியில போட்டுத் தொட்டுத் தடவிக்கிட்டே சொல்லிக் கொடுத்தாளா?” என்பது போன்ற வசனங்களும், ‘காதல்கொண்டே’னில் “அவன் என்ன தொடறதும் நீ என்ன தொடறதும் வேற வேற” என்று தனுஷிடம் சொல்வார் நாயகி திவ்யா. சாலையில் நடந்துகொண்டே திவ்யாவாக வரும் சோனியா, தனுஷிடம் பேசுவதும் காட்சியைத் தாண்டி நம் காதுகளைத் தீட்டிக் கேட்க வைத்த காட்சிகள்.
நிறைய விவரணைகளோடு கதைகளை எழுதிய அவரால் கூர்முனை வசனங்களையும் எழுத முடிந்தது, திரை மொழியில் அவர் தேர்ச்சிபெற்றவர் என்பதற்கான சாட்சிகள். மனம் அசைபோட உதடு மூடியிருக்க மவுனத்திலிருந்து பிறக்கும் வார்த்தைகள் வலுவானவை என அவர் நம்பினார்.
என்ன வேண்டும் கேள்!
“நீங்க நல்லவரா கெட்டவரா தாத்தா” குழந்தை கேட்கும்போது “தெரியலியேப்பா”- என்று ‘நாயகன்’ கமல் உதடு பிதுக்கும்போது நாமும் மவுனித்து நிற்கிறோம். “எது நியாயமோ அதுவே நியாயம்” என்பார். “காதலில் நல்ல காதல், கள்ளக் காதல் என்று இல்லை. எல்லாமே காதல்” என்பார். ‘ஜென்டில்மே’னில் குறி தவறிச் சுடும் மகன் சரண்ராஜிடம் இலக்கை சரியாகச் சுட்டுவிட்டு இது “செட்டில் ஆன மனசு. நீ அன்செட்டில்ட்” என்று சொல்லி சரண்ராஜுக்குத் திருமணத்தின் அவசியத்தை உணர்த்துவார் அவருடைய அப்பா.
ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் ஒரே நேரத்தில் அவரால் சொல்ல முடியும். அவரது திறனைக் கூர்ந்து கவனித்துப் பொருத்தமானதை எடுத்துக் கோத்துக் கொண்ட இயக்குநர்களின் படங்களிலெல்லாம் அவர் வசனங்கள் சிறப்பாக வந்திருக்கும்.
“உனக்கு என்ன வேண்டும் கேள். நான் தருகிறேன். நானாக ஒன்றை எழுதித் தந்தால், நீ எதிர்பார்த்த மாதிரி இல்லாமல், அது வேறொன்றாக இருக்கும்” என்று இயக்குநர்களிடம் சொல்வார். ‘உல்லாசம்’, ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களில் அவரது மொழியின் வீச்சை வசனங்களில் காண முடியும். ‘ஜீன்ஸ்’ படத்தில் ராதிகாவின் வசனங்கள்தாம் உயிர்நாடி. அவர் எழுதிய படங்களைவிட அவர் வேண்டாம் என்று ஒதுக்கிய படங்கள் அதிகம். இது நான் கண்ட உண்மை. தனது கதைகள், கதை மாந்தர்கள் மூலம் மட்டுமல்ல; திரைவெளியில் இன்னும் உயிர்ப்புடன் வலம் வந்துகொண்டிருக்கும் வசனங்கள் வழியாகவும் அவர் வாழ்கிறார்!
தொடர்புக்கு: jaganathanvr4@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT