Published : 04 May 2018 10:01 AM
Last Updated : 04 May 2018 10:01 AM
கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! ஆண்களின் கைப்பாவையாக இருக்கும் தமிழ் சினிமாவில் அங்கொங்கொன்றும் இங்கொன்றுமாக முகம் காட்டி வந்த பெண் மையப் படங்கள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. முதல் பெண் கதாசிரியர், முதல் பெண் இயக்குநர், முதல் பாடலாசிரியர், முதல் ஒளிப்பதிவாளர் என்று கோடம்பாக்கத்தின் சினிமா வரலாற்றில் விரல்விட்டு சுட்டிக்காட்டப்படும் அளவிலேயே சுருக்கப்பட்ட பெண்கள், நடிப்பு என்று வருகிறபோது கதாநாயக பிம்பத்தைக் காப்பாற்றும் கறிவேப்பிலைக் கதாபாத்திரங்களில் மட்டுமே அதிகமும் எடுத்தாளப்பட்டிருக்கிறார்கள்.
கதாநாயகனுக்காக ஏங்கி அவனைக் காதலிப்பது, மணந்துகொண்டு பிள்ளைகள் பெற்றுத்தருவது அல்லது அவனுக்காக உயிர்த்தியாகம் செய்வது, கதை நிகழும் நிலப்பரப்புக்கு வெளியே காதல் பாடல்களில் அவனுடன் குறைந்த ஆடைகளில் ஆடிக்கொண்டிருப்பது என நடிகைகளைக் காட்சிப் பொருளாக்கிய சினிமா, அவ்வளவு சீக்கிரம் மாறிவிடும் என்று நம்ப முடியாது. திரை இயக்கம், எழுத்து ஆகிய துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து, தங்களின் பார்வையில் பெண் மையக் கதாபாத்திரங்களை அவர்கள் படைக்கும்வரை இது தொடரவே செய்யும்.
தற்போது கோடம்பாக்கத்தில் ஆண்களால் உருவாக்கப்படும் பெண் மையப் படங்களின் எண்ணிக்கை பெருகியிருக்கும் நிலையில் அவற்றின் கதை, கதாபாத்திரப் பின்னணியை நோட்டம் விட்டால் சில உண்மைகள் புலப்படுகின்றன. கதாநாயகர்களின் பின்னால் சுற்றிவரும் கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருந்த நயன்தாராவை ‘மாயா’ லேடி சூப்பர் ஸ்டார் ஆக்கியது. ஆனால், அதில் பெண்ணின் கோபம் பேயாகவே வெளிப்பட்டது. இன்றைய திகில் படங்களில் பெரும்பாலானவை பெண் மையப் படங்களே. அவற்றில் பேயாகவும் பேயின் பின்னணிக் கதையோடும் அதிகமும் தொடர்புடையவளாகப் பெண்ணே சித்திரிக்கப்படுகிறாள். கதாநாயகனிடமிருந்து தப்பித்து பேயிடம் அவள் சிக்கிக்கொண்டிருக்கிறாள். சமீபத்தில் வெளியான ‘தியா’, பெண் கருக்கொலையைப் பேசியது என்றாலும், அது சராசரிப் பேய்ப்படமாகவே நின்றுவிட்டது.
பெண் என்றால்...
அரவிந்தசாமியுடன் ‘வணங்காமுடி’, ‘தரணிதரன் இயக்கத்தில் ‘ராஜா ரங்குஸ்கி’ உட்பட எட்டுப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சாந்தினி முதல்முறையாகப் பெண் மையக் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். ‘ஐல என்கிற ஐஸ்வர்ய லட்சுமி’ என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஆர்.வி.சுரேஷ் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிப்பது பற்றி சாந்தினியிடம் பேசியபோது பளிச்சென்று ஒன்றைக் குறிப்பிட்டார்.
“பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். ஆனால் பெண் என்பவள் பேயாக வந்தால் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கிறது. ஆண் பேய்களை ஏனோ அவர்களுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. இரண்டு படங்களில் நடித்த அனுபவத்துடன் இதில் நடிக்கிறேன். கிராமத்துப் பேயா, நகரத்துப் பேயா என்பதை இப்போது கூறமுடியாது” என்கிறார்.
பேய்ப் பின்னணி என்ற இடத்திலிருந்து த்ரில்லர் பின்னணியில் வில்லன்களோடு மோதும் பெண்ணும் தற்போது கோடம்பாக்கத்தில் தட்டுப்படுகிறாள். ‘தரமணி’ படத்தைத் தொடர்ந்து, பெண் மையக் கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்தும் கதைகளுக்குப் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் ஆண்ட்ரியா. நாஞ்சில் என்பவர் இயக்கிவரும் ‘கா’ என்ற படத்தில் கானுயிர் ஒளிப்படக் கலைஞர் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். “ ‘கா’ என்றால் கானகம். சுற்றுச்சூழலுக்கு எதிரிகளாக இருப்பவர்கள்தாம் இந்தப் படத்தில் எனக்கு எதிரிகள்” எனும் ஆண்ட்ரியா, காட்டின் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தில் பேய் வில்லனோடு மோதினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
சிவப்பு ரோஜாக்கள்
இப்படிப் பேய், த்ரில்லர் படங்களில் முதன்மைப்படுத்தப்படும் பெண் கதாபாத்திரங்கள் மீண்டும் வணிகப் பொருளாகவே தேங்கி நிற்கின்றன. இந்தப் போதாமையை மேலும் அதிகரிக்க, பெண் எதிர்கொண்டுவரும் பாலியல் வன்முறைச் சம்பவங்களைப் படமாக்கி அவற்றைப் பெண் மையப்படங்கள் என்று வியாபாரம் செய்வதும் இங்கே தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது தயாராகிவரும் ‘ஏஞ்சலினா’ என்ற படம் இப்படியொரு வகைதான் எனத் தெரிகிறது.
இவற்றுக்கு மத்தியில் மரபு மீறும் பெண் மையக் கதாபாத்திரங்கள் பல படங்களில் பாலியல் சுதந்திரம் நாடி நிற்பவையாகச் சுருக்கப்பட்டுவிடுகின்றன. ‘அறம்’ படத்தில் அதிகார வர்க்கத்தின் அலட்சியத்துக்கும் ஆட்சிப்பணிக்கான நிர்வாகச் சுதந்திரத்துக்கும் இடையில் ஊசலாடும் மாவட்ட ஆட்சியர் மதிவதனி கதாபாத்திரம், இறுதியில் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க ஆட்சிப்பணியிலிருந்து வெளியேறுவதுபோல் சித்தரிக்கப்பட்டதில் வணிக சினிமாவின் முகமே எட்டிப்பார்த்தது.
எனது முதல் படம்!
பெண் மையப் படங்களின் இவ்வகை ஊசலாட்டம் அனைத்திலிருந்தும் சற்று ஆறுதல் அளிக்கக்கூடியவை வாழ்க்கை வரலாறு கூறும் ‘பயோ பிக்’ மற்றும் விளையாட்டு வீராங்கனைகளை முன்னிலைப்படுத்தும் படங்கள். தென்னகம் கொண்டாடிய சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு எனக் கூறப்படும் ‘நடிகையர் திலகம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் நாக் அஷ்வின் இயக்கியிருக்கிறார்.
“ இந்தப் படம்தான் என்னுடைய முதல் படம் என்று கூறுவேன். இதில் நடிக்க நான் கஷ்டப்பட்டதுபோல் இதுவரை வேறு எந்தப் படத்துக்கும் கஷ்டப்பட்டதில்லை! அந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் நூற்றுக்கும் அதிகமான காஸ்ட்யூம்கள், கறுப்பு- வெள்ளை காட்சிகளுக்கென்றே பிரத்தியேக மேக் அப் என்று இந்தப் படத்தில் நடித்ததை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது” என்று நெகிழ்ந்துபோகும் கீர்த்தி சுரேஷ், தான் ஏற்று நடித்திருக்கும் சாவித்திரி கதாபாத்திரம் பற்றிய புரிதல் ஏற்பட்ட பிறகே அதில் நடித்ததாகத் தெரிவிக்கிறார்.
கொஞ்சம் விதிவிலக்காக “கதாநாயகன் செய்யும் வேலையை நான் கையில் எடுத்திருக்கிறேன்” என்கிறார் ’வெல்வெட் நகரம்’ என்ற பெண் மையப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் வரலட்சுமி சரத்குமார். “இதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிகையாளர் வேடம் எனக்கு. கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழுப் பின்னணியைப் பற்றியும் துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறேன். அதன் பிறகு ஆக்ஷன் கதாநாயகியாக மாறிப்போகிறேன்” என்கிறார். கோலிவுட்டின் அடுத்த பெண் மைய கதாபாத்திர முகம் அதிகபட்சமாய் ‘சூப்பர் ஹீரோ’வாக இருக்கலாம். ஹாலிவுட் குப்பைகளைக் காப்பி செய்பவர்கள் அதை இங்கே விரைவில் செய்துவிடக் கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT