Last Updated : 13 Apr, 2018 10:47 AM

 

Published : 13 Apr 2018 10:47 AM
Last Updated : 13 Apr 2018 10:47 AM

சி(ரி)த்ராலயா 13: ஸ்ரீதரின் கற்பனைக்கு முதல் வெட்டு!

 

ரதக் கலைக்குத் தன் நாட்டியத் திறமையால் பேரொளி ஊட்டியவர் பத்மினி. மதுரம் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஸ்ரீதர் இயக்கிய இந்த முக்கோணக் காதல் கதையான ‘மீண்ட சொர்க்கம்’ படத்தில் ஜெமினிக்கும் நடிக்க நல்ல வாய்ப்பு அமைந்தது என்றாலும் படத்தைத் தோளில் சுமந்த கதாபாத்திரம் என்றால் அது பத்மினியுடையதுதான். அந்த அளவுக்கு அவருக்காகவே வடிக்கப்பட்ட பெண் மையப் படமாக அது அமைந்தது. படத்தில் இடம்பெற்ற ‘ஆடும் அருட்பெருஞ்சோதி’ பாடல் காட்சியில் தனது நடனத் திறமை அனைத்தையும் கொட்டியிருந்தார் பத்மினி. அந்தப் பாடல் காட்சி படப்பிடிப்பின்போது ஒவ்வொரு ஷாட்டும் ஓகே ஆகும்போது ஸ்ரீதர் மனம்விட்டு பத்மினியைப் பாராட்டினார். அப்படிப்பட்ட ஸ்ரீதரையே டீலில் விட்டுவிட்டார் நம் நாட்டியத் தாரகை. என்ன காரணத்தாலோ ஒரு முறை படப்பிடிப்புக்குத் தாமதமாக வந்தார். இரண்டாம்முறையும் ஸ்ரீதர் கண்டுகொள்ளவில்லை. படப்பிடிப்பு மேலாளர் அழுத்தம் திருத்தமாக நட்சத்திரங்களுக்கு ‘புரோகிராம்’ சொல்லிவிடுவார். அப்படிக் கூறியும் பத்மினி மீண்டும் மீண்டும் தாமதமாக வர, ஸ்ரீதர் இதைச் சரிசெய்ய முடிவுசெய்தார்.

கோலி விளையாட்டு!

அன்று படப்பிடிப்பில் பத்மினியின் வருகைக்காக அனைவரும் காத்திருந்தார்கள். அப்போது ஸ்ரீதர் உதவியாளரை அழைத்து பெட்டிக்கடையிலிருந்து கோலிகளை வாங்கிவரச் சொன்னார்.

பத்மினி வரும் நேரமாகப் பார்த்து, “கோபு! வா கோலி விளையாடலாம்” என்று ஸ்ரீதர் அழைக்க, கோபு, சி.வி.ராஜேந்திரன், சுந்தரம், திருச்சி அருணாசலம் ஆகிய அனைவரும் கோலி விளையாடத் தொடங்கினர். பத்மினி வழக்கம்போல் தாமதமாக வந்து, மேக்-அப் போட்டுக்கொண்டு அரங்கில் வந்து நின்ற பத்மினி, இயக்குநர் ஸ்ரீதரைப் பார்த்து, “சார், நான் ரெடி!” என்றார். “இரும்மா…இப்பதான் விளையாட ஆரம்பிச்சிருக்கோம்” என்றார் ஸ்ரீதர். “ஷூட்டிங் நேரத்துல கோலி ஆடினா எப்படி?” என்று பத்மினி படபடக்க, “வேற என்ன செய்யறது பப்பிம்மா? காலையிலேர்ந்து எல்லாரும் சும்மா உக்கார்ந்திருக்கோம்” என்று ஸ்ரீதர் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றினார். கற்பூரம்போல் புரிந்துகொண்டு விட்ட பத்மினி மறுநாள் முதல் காலை 8 மணிக்கெல்லாம் முதல் ஷாட்டுக்குத் தயாராக வந்து நின்றார். திரையுலகில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் சித்ராலயா குழுவுக்கு அக்கறையில்லை. தொழில் சுத்தம்தான் முக்கியம் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். ஸ்ரீதர் தொடங்கி கார் ஓட்டுநர், ஆபீஸ் பாய் வரை அனைவருமே இந்தத் தொழில் சுத்தத்தைக் கடைப்பிடித்தனர்.

தணிக்கையில் சிக்கிய கண்ணீர்

இந்தப் படத்தின் கதைப்படி, காதல் தோல்வி தந்த ஏமாற்றத்தில், நாட்டியம் ஆடுவதையே நிறுத்திவிடப்போவதாக முடிவெடுக்கிறார் பத்மினி. கடைசியாக ஒரு முறை ஆடலரசன் நடராஜப் பெருமான் சிலைமுன்பு வெறிபிடித்தவரைப் போன்று நாட்டியமாடுவார். அதைக் கண்டு நடராஜர் கண்ணீர் சிந்துவதுபோல் சிம்பாலிக்காக ஒரு காட்சியை எடுத்திருந்தார். அதாவது பத்மினி அதிவேகமாகச் சுழன்று ஆடும்போது அவரது கால் சலங்கையில் இருந்து ஒரு மணி தெறித்துச் சென்று, நடராஜர் சிலை அருகே தொங்கிக்கொண்டிருக்கும் சர விளக்கின்மேல் படுகிறது. அது பட்ட வேகத்தில் விளக்கு அசைந்தாடும்போது அதிலிருந்து விசிறியடிக்கப்படும் எண்ணெய் சொட்டுகளில் ஒன்று, நடராஜர் சிலையின் கண்களில் விழுந்து வழிய, பத்மினிக்காகப் பரதக் கடவுள் கண்ணீர் வடிப்பது போன்ற காட்சியைக் கற்பனை செய்திருந்தார் ஸ்ரீதர்.

இயக்குநருக்கான முத்திரை பளிச்சிட்ட இந்தக் காட்சியை கிராஃபிக்ஸ் இல்லாத அந்தக் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு 20-க்கும் அதிகமான ரீடேக்குகள் மூலம் அந்தக் காட்சியைப் படம் பிடித்திருந்தார் ஸ்ரீதர். படம் முடிந்து தணிக்கைக் குழுவுக்கு அனுப்பும் முன்பு, படத்தின் வியாபாரத்துக்காக விநியோகஸ்தர்களுக்கு ஒரு காட்சி திரையிடப்பட்டது. நடராஜர் கண்ணீர் சிந்தும் காட்சி வந்தபோது விநியோகஸ்தர்கள் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியிருந்தனர். ஆனால், தணிக்கையில் ஸ்ரீதருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தணிக்கைக் குழு உறுப்பினர்களுடன் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரி, நடராஜரின் சிலை சிம்பாலிக்காகக் கண்ணீர் வடிப்பதுபோன்ற காட்சியை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

‘மனிதக் காலில் இருந்து புறப்பட்டுச் செல்லும் மணியால் தெய்வத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது’போன்ற சித்தரிப்பு, தெய்வநிந்தனை போல உள்ளதாகக் காரணம் கூறினார்கள். அந்தக் காட்சியை நீக்கிய பிறகே ‘மீண்ட சொர்க்கம்’ தணிக்கையிடமிருந்து மீண்டது. ‘மீண்ட சொர்க்கம்’ படம் வெளியானபிறகு ‘ஸ்ரீதர் யூனிட் என்றால் தி பெஸ்ட் டெக்னிஷியன்ஸ்’ என்று பட உலகினரும் பத்திரிகைகளும் புகழ்ந்து பாராட்டினார்கள். வெட்டுப்பட்ட காட்சியும் படத்தில் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று ஸ்ரீதர் கோபுவிடம் நீண்டகாலம் புலம்பிக்கொண்டிருந்தார்.

சிவாஜியின் நிபந்தனை

‘மீண்ட சொர்க்கம்’ வெளியான சில நாட்களிலேயே கோபுவை அழைத்தார் ஸ்ரீதர். “சிவாஜி அண்ணன் பேசினார். அவருடைய பிரபுராம் நிறுவனத்திற்காக ஒரு படம் செய்துதரும்படி கேட்கிறார்” என்றார். “ கதைக்காக உடனே உட்காரலாம்” என்றார் கோபு. நல்ல தலைப்பு தேவை. ‘விடிவெள்ளி’ என்ற தலைப்பை வைத்துப் படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டுக் கதை விவாதம் செய்ய, சிவாஜி கணேசனின் தம்பி வி.சி.சண்முகம், ஸ்ரீதர், கோபு, ஒப்பனையாளர் ஹரிபாபு, அவர் மகன் நாணு ஆகிய ஐந்துபேரும் பெங்களூரு உட்லண்ட்ஸ் ஹோட்டலில் அறை எடுத்து கதையை விவாதிக்கத் தொடங்கினார்கள். விவாதம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்ட வி.சி.சண்முகம், “முழுக்கதையும் தயாரானவுடன் அண்ணனிடம் சொல்லுங்கள்.

அவருக்குக் கதை பிடித்துவிட்டால் உடனே படத்தைத் தொடங்கிவிடுவார் எனக் கனவு காணாதீர்கள். அவர் ஒரு நிபந்தனை வைத்திருக்கிறார். அதற்கு உங்கள் டீம் ஒப்புக்கொண்டால்தான் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும்” என்று பஞ்ச் வைத்தார். நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் விவாதத்துக்கு நடுவே இவரென்ன நந்தியைப் போல சிவாஜி நிபந்தனை விதிப்பார் என்கிறார் என்று நினைத்தகோபு, “அது என்ன நிபந்தனை என்று இப்போதே கூறிவிடுங்கள்” என்றார். ஆனால் சண்முகம் பிடிகொடுக்கவில்லை. “அது என்ன நிபந்தனை என்பது எனக்கே தெரியாது” என்று சஸ்பென்ஸ் வைத்தார் சண்முகம். இதைக் கேட்டு சின்னதாகப் புன்முறுவல் பூத்தார் ஸ்ரீதர்…

சிரிப்பு தொடரும்…

படங்கள் உதவி: ஞானம்

தொடர்புக்கு: tanthehindu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x