Published : 05 Jul 2024 06:20 AM
Last Updated : 05 Jul 2024 06:20 AM
கடந்த வாரம் வெளியான ‘உள் ளொழுக்கு’ என்கிற மலையாளப் படத்தை ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டிருக்கும்போதே, அதைப் பின்னுக்குத் தள்ள வந்துவிட்டது ‘ககனாச்சாரி’. இத் தலைப்புக்கு விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்தி ருக்கும் ஓர் உயிர் என்பது பொருள்.
‘சாஜன் பேக்கரி’, ‘சாயன்ன வார்த் தைகள்’ (மாலைச் செய்திகள்) ஆகிய படங்களின் மூலம் அறியப்படும் அருண் சந்துவின் மூன்றாவது படம்.
எண்ணெய்க்கான போர், பெரு வெள்ளம், பெருமழை ஆகியவற்றால் வாழிடங்கள் நிலைகுலைந்து கிடக்கும் ‘போஸ்ட் அப்போகலிப்டிக்’ நிலையிலுள்ள 2043ஆம் ஆண்டு கேரளத்தில் கதை நடக்கிறது. பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள் தீர்ந்த நிலையில், பெட்ரோல் வாகனங்கள் அரசால் தடை செய்யப்பட் டிருக்கின்றன. அனைத்துக் குடிமக்களும் அரசால் தீவிரமாகக் கண்காணிக்கப்படு கிறார்கள்.
எதிர்க்கலாச்சாரம் என்று வலதுசாரிகளால் வெறுக்கப்படும் ஹிப்பி கலாச்சாரம் பெருகிக் கிடக்கிறது. திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. குறிப்பாக வேற்று கிரகவாசிகள் தங்கள் வானூர்தியில் பூமியை நோக்கி வந்து, சில ஆயிரம் அடிகளுக்கு மேலே வானூர்தியை நிறுத்திவிட்டு இங்கே தலைமறைவாகத் தங்கியிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கைவிடப் பட்ட, ஆனால், காவல் துறையின் கண்காணிப்புக்கு உள்பட்ட அடுக்ககம் ஒன்றில் பதுங்கி வாழ்கிறார் முன்னாள் ராணுவ வீரர், ஏலியன்களைப் பிடித்துக் கொடுப்பவர் என்று சொல்லிக்கொள்ளும் பிரம்மச்சாரியான விக்டர் வாசுதேவன் (கே.பி.கணேஷ்குமார்). அவருக்கு உதவியாக அவருடன் தங்கியிருக்கும் ஆலனும் (கோகுல் சுரேஷ்), அஜுவும் (வைபவ் வர்கீஸ்) அவரைவிட இளைய பிரம்மச்சாரிகள். ஏலியன்கள் பற்றி ஆவணப் படம் தயாரிக்க வரும் இருவர் விக்டர் வாசுதேவனிடம் வீடியோ பேட்டி காண வருகிறார்கள்.
அவர்களுடனான உரையாடல் வழியே அருண் சந்து விரித்துக் காட்டும் உலகில், 80 மற்றும் 90களின் மலையாள சினிமாவை ஆலன் கதாபாத்திரம் தனது காதலுடன் பொருத்திக் கொண்டாடுகிறது. காதலென்றால், ஏலியன்களை வேட்டை யாடுபவர்களிடமிருந்து தப்பிக்க அடைக் கலம் தேடி வந்து, இந்த மூவருடன் பதுங்கியிருக்கும் ஏலியன் பெண்ணான ‘ஏலியம்மா’வின் (அனார் கலி மரைக்காயர்) மீது உருகுகிறார் ஆலன்.
வழக்கொழிந்துபோன கலை, கலாச் சாரத்தை மீட்பதற்கான ஏக்கம், யுகம் மாறினாலும் லஞ்சம் வாங்குவதை நிறுத்தாத போலீஸ், நவீன அறிவியல், வலதுசாரிகள் மீதான எள்ளல் விமர்சனம் என முற்றும் புதிய உலகில் பெரும் வசன நகைச்சுவை விருந்துடன் ஒரு நவீன ‘நியோ நாய்ர்’ திரை வெளியை நமக்கு விரித்துக் காட்டியிருக்கிறார்.
ஒரு சிறு முதலீட்டுப் படத்தில் இவ்வளவு தரமான, நம்பகமான விஷுவல் எஃபெக்ட், கிராபிக்ஃஸ் காட்சிகளைச் சாத்தியமாக்கியிருப்பது இயக்குநரின் உலகை உயிரோட்டத்துடன் நிலை நிறுத்தியிருக்கிறது. நடிகர்களின் தரமான பங்களிப்பும் (கே.பி.கணேஷ் குமார் தனக்கு நகைச்சுவை நடிப்பும் அட்டகாசமாக வரும் என்று காட்டியிருக் கிறார்) ஒளிப்பதிவும், இசையும் படத்தின் நோக்கத்தை நேர்த்தியாகத் தாங்கிப் பிடித்திருக்கின்றன. ஒரு தரமான - அறிவியல் புனைவு நகைச்சுவைப் படத்தை இந்திய மொழியில் தேடுகிற வர்களுக்கான நல்ல தெரிவு இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT