Published : 28 Jun 2024 06:25 AM
Last Updated : 28 Jun 2024 06:25 AM
எது சரி, எது தவறென்பது மனித ருக்கு மனிதர் வேறுபடப் பல காரணங்கள் உள்ளன. இதை மையமாக வைத்து மலையாளத்தில் வெளிவந்துள்ள படம்தான் ‘உள்ளொழுக்கு’.
சில மரணங்கள், ரகசியங்களைப் புதைப்பதற்குப் பதிலாக அவற்றை வெளிக்கொணர்ந்து தெளிவாக்கிவிடும். ஆண்டு தோறும் வெள்ளம் சூழும் குட்டநாட்டுக் கிராமத்தில் அப்படி ஒரு மரணம் நிகழ்ந்துவிடுகிறது. ஆனால் மழைநீர் வடிந்து இறுதிச் சடங்கு செய்யக் காத்திருக்க வேண்டிய நிலை.
அப்படியான காத்திருப்பில், இருவேறு தலைமுறைகளைச் சேர்ந்த அக்குடும் பத்துப் பெண்கள் இருவரின் நிறைவேறாத ஆசைகள், போலி கௌரவம், துரோகங்கள், கற்பித மாறுதல்கள் ஆகியன அவர்களது கலைந்த கனவுகளாக வெளிப்படுவதுதான் கதை.
மிகச்சரியான நடிகர்கள் தேர்வும் அதன்வழி கதாபாத்திரங் களுக்கு அவர்கள் தரும் உழைப்பும் ஒரு படத்தின் நேர்த்தியில் பாதியை ஈடுகட்டிவிடும். நாயகனின் தாய் லீலாம்மாவாக வருகிறார் ஊர்வசி. தனது முதிர்ச்சியான நடிப்பில் உணர்வுகளை நுணுக்கமாக முகத்தில் கொண்டு வருகிறார். யோசிக்காமல் உடனுக்குடன் பேசிவிடும் லீலாம்மா கதாபாத்திரத்தை அவர் கையாண்டிருப்பதன் மூலம், சமீபத்தில் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற கதாபாத்திரமான ‘ஜே.பேபி’யின் தாக்கத்தை மறக்கடித்து லீலாம்மாவை நம் மனதுக்குள் நிறைத்துவிடுகிறார்.
எதிர்மறையாக எந்த உள்ளுணர் வையும் வெளிக்காட்டாமல், கனவுகளைத் தொலைத்து வாழும் அஞ்சுவாக பார்வதி திருவோத்துவின் நடிப்பு நம்மை ஆழமாக ஊடுருவிச் செல்கிறது. அகத்தால் உடைந்த ஒரு பெண்ணின் உடல்மொழியை இவ்வளவு நேர்த்தியாக வேறு நடிகர்கள் வெளிப்படுத்த முடியுமா என்கிற சந்தேகம் வருகிறது.
கதையின் மற்றொரு முக்கியக் கதாபாத்திரம் மழை. அதன் நீட்சியாக நகரும் நதி. அந்த நதியின் மீதான படகுப் பயணங்கள் நம் கற்பிதங்களை மாற்றியமைக்கின்றன.
ஒரு காட்சியில் கன்னியாஸ்திரியின் கையைப் பிடித்துக் கொண்டு லீலாம்மா சொல்லும் வசனம்: “நானும் உன்னைப் போல்தான். குடும்பம் இருந்தும் எனக்கு எதுவுமில்லை. உனக்குக் குடும்பமே இல்லை”. இன்னொரு காட்சியில், “கட்டி வைத்துவிட்டதாலேயே அவன் எனக்குக் கணவனாகி விடுவானா?” என அஞ்சு கேட்கும் கேள்வி, படம் முடிந்து திரையரங்கிலிருந்து வெளியேறிய பின்பும் வடியாத வெள்ளம் போல் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது.
ஒரு நேர்மையான கதையைத் தேர்வு செய்துகொண்டு, அதற்குள் ஆழமான உளவியல் சிக்கல்கள் கொண்ட கதாபாத்திரங்களைப் பொருத்தி, மிகச் செறிவானதொருப் படத்தைச் செதுக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிறிஸ்டோ டோமி. குட்டநாட்டுப் பகுதியின் மழை, வெள்ளத்தையும் கதை மாந்தர்களின் அகமன நீரோட்டத்தின் சிக்கல்களையும் திரைக்கதையின் வேகத்துக்கு ஏற்ப படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெனாத். சுஷின் ஷியாம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத பின்னணி இசைக் கோவையைக் கொடுத்திருக்கிறார்.
‘வாழ்வென்பது அந்தந்த நேரத்து நியாயம்’ என்றார் எழுத்து வேந்தர் ஜெயகாந்தன். அவரது ‘அக்னிப் பிரவேசம்’ சிறுகதையின் சாரமாக விளங்கும் ‘மன்னிப்பை’ ஈரத்துடன் பேசும் இப்படம், ‘வாழ்வென்பது அந்தந்த நேரத்தில் அவரவர்க்கு மட்டுமே புரியும் நியாயம்’ என்பதை உணர்த்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT