Last Updated : 28 Jun, 2024 06:15 AM

 

Published : 28 Jun 2024 06:15 AM
Last Updated : 28 Jun 2024 06:15 AM

திரைப் பார்வை: ராமனின் காட்டில்...

உள்படம்: பிரசன்ன விதானகே

சர்வதேசக் கவனம் பெற்ற இலங்கை இயக்குநர் பிரசன்ன விதானகே. இவரது சமீபத்திய படம் ‘பாரடைஸ்’. சிங்களம், ஆங்கிலம், மலை யாளம், தமிழ் எனப் பல மொழிகள் பேசப்படும் இப் படம், இலங்கை - இந்தியக் கூட்டுத் தயாரிப்பாக உருவாகி வெளிவந்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தைப் பற்றிய படம். ஆனால், அந்தப் பிரச்சினைக்குள் முழுமையாகச் செல்லவில்லை. அதன் ஒரு துண்டுப் பகுதி இதில் குறுக்கீடு செய்கிறது. சோற்றுக்கும் பாலுக்கும் இலங்கையினர் அலைந்துவரும் பதற்றமான சூழலில் இலங்கை எரிந்துகொண்டிருந்த நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் ஒரு மலையாளத் தம்பதி, இலங்கையின் மத்தியப் பகுதிக்குச் சுற்றுலா செல்கிறார்கள்.

தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த அந்தப் பகுதி இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த, மலையகத் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. விமான நிலையத்திலிருந்து விடுதிக்குச் செல்லும் வழியில் நடக்கும் சிறு சிறு போராட்டங்கள் வழி இலங்கையின் மோசமான நிலையைத் திறனுடன் பிரசன்ன சித்தரித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வன்முறையுடன் ஒப்பிடும்போது இது மட்டுப்படுத்தப்பட்டதுதான். ஆனால், பிரசன்னவின் இந்தக் காட்சிகள் வன்முறைக்கு அருகில் இருக்கின்றன; எப்போது வேண்டுமானாலும் எதுவும் நிகழலாம்என்கிற பதற்றத்தையும் உருவாக்கு கின்றன.

ராமாயணப் பயணம் என்கிற சுற்றுலா கருப்பொருளில் தம்பதி இலங்கையைச் சுற்றிப் பார்க்கப் போகின்றனர். ராவணன் குளித்த இடம், சீதையைக் கவர்ந்த இடம் எனப் பல இடங்கள் அவர்களுக்குக் காண்பிக்கப்படுகின்றன. ஒருவிதத்தில் சீதையின் இடத்தில் படம் நாயகியை வைத்துப் பார்க்கிறது. அந்தக் காட்டுக் குள் அலையும் மிளா மான் ஒன்றை நாயகி பார்க்கிறாள். அவளைச் சந்தோஷப்படுத்தும் அந்த மானைப் பின்தொடர்ந்தும் செல்கிறாள்.

இங்கு அந்த மிளா, மாயமானாக ஆகிறது. அந்த மான், படத்துக்குள் பல பொருள் களில் ஓடுகிறது. விசாரணைக் கைதியாக இறக்கும் தமிழனாக அந்த மானைப் பார்க்கலாம். அந்த மானை ‘ஒரு தேர்தல் வாக்கு’ மதிப்பு மட்டும் உள்ள சாமானியக் குடிமகனாகப் பார்க்கலாம். இப்படிப் பல. காவல் நிலையம் முற்றுகையிடப்படும் சூழலில் ஓடிவரும் காவல் துறையினருக்கு தம்பதி தங்கள் வாகனத்தில் அடைக்கலம் கொடுக் கின்றனர்.

அந்த இரவுப் பயணத்தில் ஒரு மிளா, வாகனத்தின் குறுக்கே வந்து சில விநாடிகள் நின்று அவர்களைப் பார்க்கிறது. வாகன வெளிச்சத்தில் மாய மாகவும் யதார்த்தமாகவும் வெளிப்படும் அந்த மான் காட்டுக்குள் பாய்ந்து செல்கிறது. “டேஸ்ட் சூப்பரா இருக்கும். சாப்பிட்டிருக்கீங்களா?” எனச் சிங்களக் காவல் அதிகாரி கேட்கும் வரை அந்தக் காட்சி இயல்புக்குச் சற்று மேலே மௌனத்தில் பறந்து பார்க்கும்.

மலையாளத் தம்பதியினரின் ஸ்மார்ட்போனும் மடிக்கணினியும் திருடப் படுகின்றன. அதன் பிறகு படம், மலையகத் தமிழர்கள், காவல் துறை வன்முறை எனப் புறவயமாகவும் கணவன் - மனைவிக்கு இடையிலான உறவு முரண் என அகவயமாகவும் பயணிக்கிறது. நாயகன், நாயகி ஆகிய இருவரின் குணங்களைச் சில தொடக்கக் காட்சிகளில் திருத்தமாகச் சித்தரித்துள்ளதால் படத்தின் பின்பகுதியின் பெரிய நிகழ்வுகளுடன் பார்வையாளர்கள் உணர்வுபூர்வமாகப் பொருந்திப்போக முடிகிறது.

சுற்றுலா வழிகாட்டி, விடுதித் தொழிலாளர்கள், சிங்களக் காவல் அதிகாரி உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களும் இயல்பாக வெளிப்பட்டுள்ளன. வெகு அண்மைக் காட்சிகள் கதாபாத்திரங்களின் இயல்பைத் திருத்தமாகக்காட்டப் பயன்பட்டுள்ளன. நகைச் சுவையைக்கூட அண்மைக் காட்சி, சிறு உணர்ச்சி வெளிப்பாடு ஆகிய அம்சங்கள் வழி செய்திருக்கிறார் இயக்குநர்.

மனிதர்களின் தன் முனைப்பு, அதில் அமைப்புகளுக்கும் கற்பிதங்களுக்கும் இருக்கும் பங்களிப்பு குறித்தெல்லாம் படம் நுட்பமாகச் சொல்கிறது. படத்தைச் சுழலச் செய்யும் சக்கரங்களாகவும் அவை தொழிற்பட்டுள்ளன. வெளி அரசியல், தனி மனித உறவுக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தை இயல்புக்கு அருகில் சென்று காட்சிப்படுத்தியுள்ள விதத்தில் இந்தப் படம் கவனிக்கத்தக்கப் படமாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x