Last Updated : 08 Aug, 2014 12:00 AM

 

Published : 08 Aug 2014 12:00 AM
Last Updated : 08 Aug 2014 12:00 AM

ஆகஸ்ட் 6 - ஐசாக் ஹெய்ஸ் பிறந்த தினம்: கறுப்பு நிற இசை வெளிச்சம்

அந்த மனிதரின் வரவுக்காகக் காத்திருக்கும் அரங்கம், உற்சாகத்தில் துள்ளுகிறது. ஆரவாரக் குரல்களுடன், ஆப்பிரிக்கப் பழங்குடி மற்றும் மேற்கத்திய தாள வாத்தியங்கள், கிட்டார், ட்ரம்பெட், சாக்ஸபோன் என்று இசைக் கருவிகளும் சங்கமிக்க, ஒரு திருவிழா தருணம் உருக்கொள்கிறது. ஒரு தலைவனை வரவேற்கும் பரவசம் மேடையில் இருக்கும் இசைக் கலைஞர்களிடம் தொற்றிக்கொள்கிறது.

ஆர்ப்பரிக்கும் இசைக்கு நடுவே, தலையில் தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் அணிந்து ஆப்பிரிக்க மந்திரவாதிகள் அணிவது போன்ற அங்கியுடன் அந்த மனிதர் மேடையில் தோன்றுகிறார். அறிவிப்பாளர், அவரது தொப்பியை மெல்ல எடுக்க, வசீகரமான முரட்டு உருவம் கொண்ட அந்த மனிதர் தனது அங்கியைக் கழற்றி, இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்துகிறார். கூட்டத்தின் கூச்சல் விண்ணைப் பிளக்கிறது.

புகழ்பெற்ற ‘ஷாஃப்ட்' படத்துக்காக இசையமைத்துப் பாடிய பாடலைப் பாடத் தொடங்குகிறார் ஐசாக் ஹெய்ஸ். “ஐசாக் ஹெய்ஸ்ஸ்ஸ்...” என்று ஆனந்தத்தில் அதிர்கிறது அரங்கம்.

கறுப்பின இசைக் கலைஞர்கள் வரலாற்றில் முதல் ஆஸ்கர் விருதை வென்ற இசைக் கலைஞன் ஐசாக் ஹெய்ஸ். ஷாஃப்ட் படத்தின் தீம் பாடலுக்குத்தான் அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. ‘மெக்கனாஸ் கோல்டு' போன்ற படங்கள் மூலம் புகழின் உச்சத்துக்குச் சென்ற கறுப்பின இசையமைப்பாளர் குயின்சி ஜோன்ஸுக்குக் கிடைக்காத பெருமை, 1972-ல் ஷாஃப்ட் படத்தின் மூலம் ஐசாக் ஹெய்ஸுக்குக் கிடைத்தது.

அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அடிமைகள் சந்தித்த துயரங்கள் பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. என்றாலும் ஹாலிவுட் உலகத்துக்குள்ளேயே கறுப்பினக் கலைஞர்கள் சந்திக்கும் சங்கடங்கள் வெளியுலகம் அறியாதவை. “கறுப்பினக் கலைஞர்களுக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமைவது என்பது அத்தனை கடினமானது” என்று குமுறியிருக்கிறார், ‘தி ஹெல்ப்' (2011) படத்துக்காகச் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் வென்ற ஆக்டேவியா ஸ்பென்சர்.

எனில், 1970-களில் கறுப்பினக் கலைஞர்களின் நிலை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எனினும், தன் அசாத்தியமான திறமையால், வெள்ளைத் தோல் கலைஞர்களின் மத்தியில் தவிர்க்கவே முடியாத இசைக் கலைஞராக உயர்ந்தார் ஐசாக் ஹெய்ஸ். 1942 ஆகஸ்ட் 6-ம் தேதி டென்னிஸி மாகாணத்தின் கோவிங்டன் நகரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்தவர்.

“அம்மா இறந்து கொஞ்ச நாட்களிலேயே என் அப்பாவும் என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். என் பாட்டிதான் என்னை வளர்த்தார். என்மீது மிகுந்த பாசம் கொண்டவர் அவர்” என ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார் ஐசாக். தான் வென்ற ஆஸ்கர் விருதையும் தன் பாட்டிக்கே அர்ப்பணித்தார்.

பாட்டி வேலை செய்த பண்ணையிலேயே ஐசாக்கும் வேலை பார்த்துக்கொண்டே படித்தார். தனது ஐந்தாம் வயதிலிருந்தே தேவாலயத்தில் பாடினார். பியானோ, சாக்ஸஃபோன் உள்ளிட்ட இசைக் கருவிகளைத் தானே கற்றுக்கொண்டார். படிப்பில் கவனம் குறைந்ததால் உயர்நிலைப் பள்ளியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். எனினும், அவரது ஆசிரியரின் வற்புறுத்தலின் பேரில் டிப்ளமோ படித்தார். பின்னர் பிழைப்புக்காக, மெம்ஃபிஸில், மாமிசம் பதனிடும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தார்.

எனினும், இசை அவரை விட்டுவிடவில்லை. 1950-களில் ஐசாக்கின் இசை வாழ்க்கை தொடங்கியது. மெம்ஃபிஸில் உள்ள ஸ்டாக்ஸ் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட இசைப் பதிவு நிறுவனங்களில் ரெக்கார்டிங் ஆர்ட்டிஸ்டாகப் பணிபுரிந்தார். பாடல் வரிகள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்ற ஐசாக், பின்னாட்களில் பிரபலமான பல பாடல்களை எழுதவும் செய்தார். ப்ளூஸ், ஜாஸ் – ஃபங்க், டிஸ்கோ என்று பல்வேறு பாணிகளில் வெற்றிகரமாக இயங்கினார்.

ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் பிரதான இசைக் கலைஞர் ஓடிஸ் ரெட்டிங் 1968-ல் மறைந்த பின்னர், அவரது இடத்தை நிரப்ப, அப்போது பிரபலமாகிக்கொண்டிருந்த ஐசாக் ஹெய்ஸைப் பயன்படுத்திக்கொண்டது அந்த நிறுவனம். 1969-ல் அவரது இரண்டாவது ஆல்பமான ‘ஹாட் பஃபர்டு சோல்' ஸ்டாக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதிலிருந்து ஐசாக்கின் இசை வாழ்க்கை உச்சத்தை அடைந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான், 1971-ல் ‘ஷாஃப்ட்' படத்துக்கு இசையமைத்தார். துடிப்பான இளம் போலீஸ் அதிகாரியைப் பற்றிய அந்தப் படத்தில் முதலில் அவரே நடிப்பதாக இருந்தது. பின்னர், ரிச்சர்டு ரவுண்ட்ரி நாயகனாக நடித்தார். ‘பிளாக் மோசஸ்', ‘சாக்லேட் சிப்' போன்ற ஆல்பங்கள் அவருக்குப் புகழ் சேர்த்தன.

நடிப்பையும் விட்டுவைக்கவில்லை மனிதர். ‘த்ரீ டஃப் கய்ஸ்'(1974), ‘ட்ரக்ர்னர்' (1974), மெல் புரூக்ஸ் இயக்கிய ‘ராபின்ஹூட்: மென் இன் டைட்ஸ்' போன்ற படங்களில் நடித்தார். 1990-களில் ‘சவுத் பார்க்' என்ற அனிமேஷன் தொடரில் செஃப் பாத்திரத்துக்குக் குரல் கொடுத்ததன் மூலம், இளம்தலைமுறையினரிடமும் புகழ்பெற்றார். “கந்தல் உடை, ஓட்டை ஷூ அணிந்த சிறுவனாக, நாட் கிங் கோல் இசையமைத்த ‘லுக்கிங் பேக்' பாடலை மேடையில் பாடினேன். அந்தப் போட்டியில் வென்றவுடன் ஆட்டோகிராஃப் கேட்டு அத்தனை இளம்பெண்கள் மொய்த்தனர்” என்று ஒருமுறை குறிப்பிட்டார்.

நான்கே நான்கு மனைவிகள், 12 குழந்தைகள் எனச் சற்றே பெரிய குடும்பஸ்தராக இருந்தார். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர்

2008-ல் மரணமடைந்தார். இறக்கும் வரையில் இசை, நடிப்பு, பொதுநலம் என்று இயங்கி வந்தார்.

வெவ்வேறு வடிவில் அவரது இசையும் பாடல்களும் நம்மிடையே உலவுகின்றன. தமிழ்த் திரையுலகத்தின் தற்போதைய ஆதர்சமான குவெண்டின் டொரண்டினோ, தான் இயக்கிய ‘கில் பில்' படங்களில் ஐசாக் ஹெய்ஸின் இசையைப் பயன்படுத்தி அவருக்கு மரியாதை செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x