Published : 25 Aug 2014 06:04 PM
Last Updated : 25 Aug 2014 06:04 PM

கலாய்த்துக் கொண்ட ஆலியா பட்: கொண்டாடும் ரசிகர்கள்

மற்ற நாடுகளில் எப்படியோ இந்தியாவில் சினிமா நடிகர் நடிகைகள் என்றால் அவர்களுக்கு சமுதாயம் ஒரு சிறப்பு வெளிச்சத்தை தந்துள்ளது. குறிப்பாக தென்னிந்திய சினிமா நடிகர்கள் பலர் கடவுளுக்கு இணையாகப் போற்றப்படுகிறார்கள். சிலர் கடவுளை விஞ்சும் அளவுக்கும். இதை அப்படியே மண்டையில் ஏற்றிக் கொள்ளும் ஒரு சில நடிகர் நடிகைகளும் தங்களை எல்லாவற்றுக்கும் மேல் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இருப்பினும், சிலர் இந்த பிம்பங்களை எல்லாம் உடைத்து, நடிப்பதும் இன்னொரு தொழில் தான் என்று மட்டும் நினைத்து, சிறப்புச் சலுகைகள், கவனம் என எதையும் எதிர்பார்க்காமல் இயல்பாக இருக்கின்றனர். கோலிவுட்டிலும் சரி, பாலிவுட்டிலும் சரி. இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பது, பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான ஆலியா பட்.

'ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்', 'ஹைவே','டூ ஸ்டேட்ஸ்' என இவர் இதுவரை நடித்தது மூன்றே திரைப்படங்கள் தான் என்றாலும், மூன்றிலுமேபலரது பாராட்டுகளைப் பெற்றவர். ஆனால், சில மாதங்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சியில், பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹாரின் நிகழ்ச்சி ஒன்றில், 'நாட்டின் ஜனாதிபதி யார்?' என்ற கேள்விக்கு, ஆர்வக் கோளாறாக 'பிருத்விராஜ் சவுகான்' என ஆலியா பதிலளிக்க, வந்தது வினை.

அன்றிலிருந்து இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் ஆலியா பட் ஜோக்ஸ் என பல நக்கல் நையாண்டி பதிவுகள் சர்தார்ஜி ஜோக்குகளுக்கு இணையாக வர ஆரம்பித்தன. ஆனால், இதைக் கண்டு ஆலியா பொங்கவில்லை. போலீஸில் புகார் தரவில்லை. ஆண்களை விமர்சித்து பேட்டி தரவில்லை. பதிவுகள் போடவில்லை. மாறாக, தன்னைத் தானே கிண்டல் அடித்து நகைச்சுவை வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், அவரது அந்த கரண் ஜோஹார் பேட்டியைப் பார்த்து, அவரது குடும்பத்திலுள்ளவர்களிருந்து அனைவரும் எள்ளி நகையாட, மனமுடையும் ஆலியா, மூளையை வளர்த்துக் கொள்ள ஒரு கற்பனை ஜிம்முக்கு செல்கிறார். அவர்கள் ஆலியாவுக்கு தீவிரமான பயிற்சிகளைத் தருகின்றனர்.

ஒரு பக்கம் அர்ஜுன் கபூர், கரண் ஜோஹார், பரினீதி சோப்ரா போன்ற பிரபலங்கள், 'அழகாக இருந்தால் எப்படி அறிவு வளரும்' என்றெல்லாம் ஆலியாவை நக்கலடித்து பேட்டி தர, மறுபக்கம் ஆலியா சிறிது சிறிதாக முன்னேறுகிறார். முதலில் ஒரு செஸ் போட்டியில் கேரம் போர்ட் என நினைத்து தோற்கும் அவர், தீவிர பயிற்சிக்குப் பிறகு ஜெயிக்கிறார், ஒரு சின்னஞ் சிறுவனிடம். இப்படி முழுவதும் சுய எள்ளலாக போகும் இந்த வீடியோவில், கடைசியில் மீண்டும் கரண் ஜோஹாரின் நிகழ்ச்சியில் பங்கேற்று, கடினமான பல கேள்விகளுக்கு பதிலளித்து அனைவரையும் வாயடைக்க வைக்கிறார்.

வீடியோ முடியும்போது மீண்டும் ஒரு நகைச்சுவையான திருப்பத்தோடு முடிகிறது. ஆலியாவோடு சேர்த்து, எழுத்தாளர் ஷோபா டே, ஆங்கில தினசரிகள், ட்வைலைட் நாவல், இயக்குநர் கரண் ஜோஹார், ஷபானா ஆஸ்மி என பலரையும், பலவற்றையும் போகிற போக்கில் இந்த வீடியோ கலாய்க்கிறது.

முதலில் கூறியது போல், ஒரு நடிகை, தன் இமேஜ், கவுரவம் என எதையும் பெரிதாக பார்க்காமல், விளம்பரத்திற்காகவும் இல்லாமல், நகைச்சுவைக்காக மட்டும் தன்னைத் தானே கலாய்த்துக் கொள்வது பல இடங்களில் சாத்தியமாவதில்லை. இந்த வீடியோ பதிவினால் ஆலியாவின் இமேஜ் பல மடங்கு கூடியுள்ளதே நிஜம்.

அதோடு, அவரை போலவே இமேஜ் பற்றி கவலைப்படாமல் தங்களையும் கலாய்த்துக் கொண்ட அர்ஜுன் கபூர், பரினீதி சோப்ரா, கரண் ஜோஹார் ஆகியோரும் தங்களது போலி பிம்பங்களை உடைத்துள்ளனர்.

தன்னைப் பற்றி சின்னதாக கிண்டலடித்துவிட்டால்கூட ‘தொட்டாற்சிணுங்கி’யாக சுருங்கிக் கொள்ளும் சில தமிழ்த் திரை நட்சத்திரங்கள் எப்போது இது போல நகைச்சுவையுணர்வுடன் எதையும் எடுத்துக் கொள்வார்கள் என்பதே இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பல ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது. வீடியோ கீழே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x