Published : 30 Mar 2018 02:36 PM
Last Updated : 30 Mar 2018 02:36 PM
கோ
டம்பாக்கம் உச்சரிக்கும் லேட்டஸ்ட் வார்த்தைகளில் ஒன்று ‘கோகோ’. அதாவது நயன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத் தலைப்பின் சுருக்கமே ‘கோகோ’. படத்தை இயக்கிக்கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பரான நெல்சன்.
“ ‘கோகோ' கதையை முதலில் படித்துவிட்டு ‘சூப்பர்டா... இப்படியே படமாக வந்துவிட்டால் அருமையாக இருக்கும்’ என்று உற்சாகம் கொடுத்தது சிவகார்த்திகேயன்தான். எப்போதுமே ரொம்ப உறுதுணையாக இருப்பான்” என்று நட்பின் ரகசியத்தை உடைத்துப் பேசத் தொடங்கினார்…
‘கோலமாவு கோகிலா’ தலைப்பே வித்தியாசமாக இருக்கே?
படத்தின் கதைக்கும் கோலமாவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. நயன்தாராவின் கேரக்டர் பெயர் கோகிலா. அதனால் இரண்டையும் சேர்த்து ‘கோலமாவு கோகிலா’ என்று வைத்தேன். கஷ்டப்படுகிற குடும்பத்தில் வரும் பிரச்சினைகளைப் பெண் ஒருவர் எப்படிச் சமாளித்து வெளியே வருகிறார், வில்லன்களிடம் சிக்கி அதிலிருந்தும் எப்படித் தப்பிக்கிறார் என்பது தான் ‘கோலமாவு கோகிலா’. படத்தில் சிறுசிறு சண்டைக் காட்சிகள் இருக்கின்றன.
கதாநாயகியை மையமாக வைத்துக் கதை எழுதத் தூண்டிய விஷயம் எது?
படங்களில் பெரிய கதாநாயகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை ஒரு பெண்ணுக்கு வந்தால், அவர் எப்படி அணுகுவார் என்ற ஐடியா தோன்றியது. பெண்களுக்கென்று திறமை, பலம், பலவீனம் என உண்டு. அந்த பலத்தை வைத்துப் பிரச்சினைகளை எதிர்கொண்டால் எப்படியிருக்கும் என எழுதத் தொடங்கினேன். முழுமையாக எழுதி முடித்தவுடன் எனக்கே புதுமையாகவும், கண்டிப்பாக ஹிட்டடிக்கும் எனத் தோன்றியது.
செயின் பறிப்பு, பெண்குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை எனப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக்கிடக்கும் காலத்தில் அந்தப் பிரச்சினைகளையும் தொட்டிருக்கிறீர்களா?
இல்லை. ஒரு கொலை நடப்பதைப் பற்றிய அவல நகைச்சுவை பாணி காமெடி படத்தில் இருக்கும். ஆனால் முழுப் படமும் ப்ளாக் காமெடியா என்றால் இல்லை. ஒரு பெண், அவருடைய குடும்பம், கஷ்டம் என்று சொல்லியிருக்கிறேன். படத்தில் அதெல்லாம் தெரியாதுபோல் கொஞ்சம் ஜாலியாகச் செய்திருக்கிறேன்.
கதையைக் கேட்டு, நயன்தாரா என்ன சொன்னார்?
நயன்தாரா மேடத்தை முன்பே தெரியும். ஆனால், இக்கதையைக் கேட்டு என்ன சொல்வார் என்ற பயம் இருந்தது. கதையில் மிகவும் கவனமாக இருப்பார். காமெடி காட்சிகள் வரும் போதெல்லாம் ரொம்ப ரசித்துக் கேட்டார். முழுக் கதையையும் கேட்டுவிட்டு “ரொம்ப நல்லாயிருக்கு. நீங்கள் பிளான் பண்ணிவிட்டுச் சொல்லுங்கள். நான் நடிக்கிறேன்” என்றார். இக்கதையை முழுமையாகக் கேட்ட முதல் ஆள் அவர்தான். அவர் கொடுத்த உற்சாகத்தில்தான் இப்போதுவரை ஓடிக்கொண்டிருக்கிறேன்.
அனிருத் எப்படிப் படத்துக்குள் வந்தார் ?
அனைவருக்கும் உதவக்கூடியவர் அனிருத். நண்பர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். அவருடைய இசை நிகழ்ச்சிப் பணிகளுக்கு இடையே முதன்முதலாக அவரிடம் பெண்ணை மையப்படுத்திக் கதையொன்று செய்திருக்கிறேன், நயன்தாரா மேடம் நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் என்றேன். உடனே “ இசை அனிருத் என அதிகாரபூர்வமாக அறிவித்துவிடு’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதுதான் அனிருத்.
சின்னத் திரையிலிருந்து சினிமாவுக்குப் போகலாம் என்று எப்போது தோன்றியது?
நாமெல்லாம் எங்க சினிமாவுக்குப் போய் இயக்குநராவது என்றுதான் முதலில் நினைப்பேன். அப்போதெல்லாம் குடும்பத்தை ஓட்ட வேண்டும் என்ற எண்ணம்தான் அதிகமாக இருந்தது. சிம்புவும் நானும் ஸ்கூல்மேட். மறுபடியும் விஜய் தொலைக்காட்சியில் அவரைப் பார்த்தபோது, ‘வல்லவன்’ இயக்கிக்கொண்டிருந்தார். “புதுசா ஒரு படம் தொடங்குகிறேன். அதில் வேலை பாரேன்” என்று சொன்னவுடன் அவருடன் போய்விட்டேன். சினிமாவில் பணிபுரியும்போது, குடும்பத்தைச் சமாளிப்பது கடினமாக இருந்ததால், மறுபடியும் தொலைக்காட்சிக்கே வந்துவிட்டேன். ஆனால், சிம்புவுடைய நட்பு மட்டும் தொடர்ந்தது. அவர் ஜட்ஜாக இருந்த ‘ஜோடி நம்பர் 1’ சீசனை நான்தான் இயக்கினேன். அதனைத் தொடர்ந்து “நாம ஒரு படம் பண்ணலாமா?” என்று ஒரு இந்திப் படத்தைக் காட்டினார். அவர் என்னிடம் எதைக் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. ஆனால், நம்மாலும் படம் இயக்க முடியும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தவர் சிம்பு. சிம்புவுடன் இணைந்து ‘வேட்டை மன்னன்’படம் தொடங்கியது அப்படித்தான்.
‘வேட்டை மன்னன்’ படத்தில் என்னதான் பிரச்சினை?
யார் மீது தவறிருப்பதாகவும் தோன்றவில்லை. சினிமாவில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. 30 வருடம் சினிமாவில் ஏற்றம் வந்துகொண்டே இருக்கும், திடீரென்று எதிர்பார்க்காத வீழ்ச்சி இருக்கும். சிலருக்கு அது முதல் படத்திலேயே நடக்கும். எனக்கு முதல் படத்திலேயே நடந்துவிட்டதாக நினைக்கிறேன். தற்போது ‘கோலமாவு கோகிலா’ என்னைக் கைதூக்கிவிடுவாள் என்ற நம்பிக்கை துளிர்த்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT