Published : 24 May 2024 06:20 AM
Last Updated : 24 May 2024 06:20 AM

ஓடிடி உலகம்: செறிவான பகடையாட்டம்

வெகுஜனத் தமிழ் சினிமாவில் ‘மண்டேலா’, ‘எலக்‌சன்’, ‘உயிர் தமிழுக்கு’ எனக் கவனிக்கத்தக்க அரசியல் நையாண்டித் திரைப்படங்கள் அவ்வப் போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அரசியல் த்ரில்லர் படம் எனும்போது பாரிய வறுமை.

இரண்டரை மணிநேரம் என்கிற ஒரு தமிழ்த் திரைப்படத்தின் சராசரி கால அளவில் மேலும் ஒன்றரை மணிநேரம் கூட்டி, 4 மணி நேரம் 8 எபிசோட்கள் என்கிற வடிவில் வந்திருக்கும் ‘தலைமைச் செயலகம்’ தொடரை ஒரு முன்மாதிரி ‘அரசியல் த்ரில்லர்’ எனத் திட்டவட்டமாக மதிப்பிட்டுவிடலாம்.

ஓர் இணையத் தொடர் எடுத்தாளும் கருப்பொருள், அதன் முடிவை நோக்கிய பயணத்தில் பங்குபெறும் கதாபாத்திரங்களின் மோதல்கள் - விலகல்கள், விடை தெரியா கேள்விகளின் பின்னாலுள்ள முன்கதைகள், முதன்மைக் கதாபாத்திரங்கள், துணைக் கதாபாத்திரங்களின் வார்ப்பு என அத்தனையிலும் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்ட திரை எழுத்துடன் உருவாகியிருக்கிறது இத்தொடர்.

‘அரசியல் த்ரில்லர்’ என வரும்போது, கடந்த 57 ஆண்டுகளாகத் திராவிட, தேசியக் கட்சிகளின் அதிகாரப்பசியைப் பார்த்து வரும் தமிழ் பார்வையாளர்களுக்கு, புத்தாயிரம் வரையிலான அதன் சமகாலத் தன்மை, கடந்த காலத்தின் முக்கிய நிகழ்வுகள், தலைவர்களின் சாயல், வாரிசு அரசியல், டெல்லியின் புறக்கணிப்பு அரசியல், அதற்குள் ஊடுருவி நிற்கும் நக்‌ஷல் மற்றும் கார்ப்பரேட் அரசியல், வளர்ந்து நிலைகொண்டுள்ள மார்க்சிய - அம்பேத்கரிய அரசியல் கருத்தாக்கங்கள், அரசியல் தரகர்கள் என உயிரோட்டம் மிகுந்த இக்களத்தை விறுவிறுப்பான அரசியல் பகடையாட்டமாக நமக்குப் பரிமாறியிருக்கிறார் இயக்குநர் வசந்த பாலன்.

பழகிய பொருளைப் புதிய சட்டகத்துக்குள் பொருத்துவதில், உண்மை - கற்பனை இரண்டையும் ஒரு புள்ளியில் இழையவிடுவதற்குத் தேவைப்படும் செய்நேர்த்தியில் வசந்த பாலன் குழுவினரின் உழைப்பு சிறந்த ‘ஃபைனல் புராடெக்ட்’ ஆக ஒவ்வொரு எபிசோடிலும் வெளிப்பட்டிருக்கிறது. வைட் ஆங்கிள் ரவிசங்கரனின் ஒளிப்பதிவு, கதை நிகழும் களத்துக்குள் நம்மை வெகு இணக்கமாகப் பொருத்திவிடுகிறது. இசை, கலை இயக்கம், ஆடை அலங்காரம் உள்ளிட்ட மற்ற கலைப் பிரிவு களின் பங்களிப்பு இன்னும் ஈர்க்கிறது.

தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் அருணாசலம் (கிஷோர்) ஊழல் வழக்கு ஒன்றின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது, அவரது பதவி நாற்காலியைக் கைப்பற்றும் போட்டியில் அவரது மகள், மருமகன், அரசியல் ஆலோசகர் ஆகியோரின் காய் நகர்த்தல்கள் தொடரில் எப்படிப்பட்டத் தருணங்களை உருவாக்குகின்றன என்பதுதான் கதை. அதற்குள் ஊடாடும் ஒரு காவல் அதிகாரி, ஒரு சி.பி.ஐ.அதிகாரி, அப்பாவை அறிந்திராத ஒரு புத்தாயிரப் பெண் எனத் துணைக் கதாபாத்திரங்கள், முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு இணையாகச் சுவாரஸ்யம் கூட்டியிருப்பது இத்தொடரை நிகழ்நேரத்தில் பார்த்து முடிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தை உருவாக்கி விடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x