Published : 22 May 2024 01:38 PM
Last Updated : 22 May 2024 01:38 PM
கடந்த 2011இல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘வெங்காயம்’. அந்தப் படத்தை எழுதி இயக்கி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர் சங்ககிரி ராஜ்குமார். அந்தப் படத்தைத் தொடர்ந்து, ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் தொடர்புடைய அனைத்துக் கலைத்துறைகளையும் (நடிப்பு தொடங்கி கிராஃபிக்ஸ் வரை) தனியொருவராகச் செய்து, 4 ஆண்டுகள் செலவிட்டு ‘ஒன்’ என்ற படத்தை உருவாக்கி ‘கின்னஸ்’ சாதனை என்று சொல்லும் விதமாக ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டார்.
தனது திரைப்பட வேலைகள் ஒருபுறம் இருந்தாலும் பாரம்பரியத் தமிழ்த் தெருக்கூத்துக் கலைக்கும் தனது குடும்பத்துக்குமான நீண்ட நெடிய உறவால் பெரிதும் பிணைக்கப்பட்டிருக்கும் இவர், தற்போது தமிழ்த் தெருக் கூத்தைப் பல்வேறு உலக நாடுகளில் நிகழ்த்தி வருகிறார். இதில் முக்கியமான விஷயம், எந்த நாட்டில் தெருக்கூத்தை நிகழ்த்துகிறாரோ, அங்கேயே வாழும் தமிழர்கள், பிறமொழியாளர்களுக்குத் தெருக்கூத்துக் கலையைப் பயிற்றுவித்து, அவர்களைக் கொண்டே உலகப் பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்த்தி வருகிறார். முதன்மைக் கதாபாத்திரத்தை ராஜ்குமார் ஏற்று நடித்து வருகிறார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இந்த அரிய செயலை கையிலெடுத்துச் செய்துவரும் சங்ககிரி ராஜ்குமார், தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள புகழ்பெற்ற கலையரங்கில் தமிழ் அரசன் அதியமானின் கதையைத் தெருக்கூத்தாக அரங்கேற்றுகிறார். இதுபற்றி அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில்:
“தெருக்கூத்து குடும்பப் பின்னணியிலிருந்து வந்த நான் திரைத்துறையில் இயங்கிக் கொண்டிருந்தாலும், தெருக்கூத்து கலையை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது.
கோவில் திருவிழாக்களில் மட்டும் நடத்தப்படுகிற கலையாக இல்லாமல் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் படி ,தெருக்கூத்தின் இலக்கணம் சிறிதும் மாறாமல் அதன் வடிவத்தைச் சீர் செய்து உலகெங்கும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டேன்.
முதன்முதலாகக் கம்போடிய அங்கோர்வாட் முன்பாக தொடங்கிய பயணம், இன்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கும் நீண்டிருக்கிறது. இன்னும் தெருக்கூத்தின் மீது மக்களின் அழுத்தமான பார்வையைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினேன்.
அதன் பலனாக வருகிற மே 25 ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ மாநகரில், தமிழ்நாடு அறக்கட்டளையின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவைச் சிறப்பிக்கும் வகையில், உலக மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு பிரம்மாண்டத் தெருக்கூத்தை நடத்த உள்ளேன்.
அமெரிக்காவின் டாப் 10 தியேட்டர்களில் ஒன்றான சிகாகோ ரோஸ்மான்ட் தியேட்டரில் 300 தெருக்கூத்து கலைஞர்களுடன் 4500 பார்வையாளர்களுடன் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இதில் கடை ஏழு வள்ளல்களில் புகழ் பெற்ற அதியமானின் வரலாற்றுக் கதையைத் தெருக்கூத்து வடிவில் எழுதி நான் இயக்குகிறேன். திரைக் கலைஞர் நெப்போலியன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.
நிகழ்த்து கலை வரலாற்றில் புதியவர்களுக்குப் பயிற்சி அளித்து நிகழ்த்தப்படும் கலைகளில் இதுவே பிரம்மாண்டமான நிகழ்வு என்பதால் இது கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக இடம்பெறுகிறது என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT