Published : 17 May 2024 06:25 AM
Last Updated : 17 May 2024 06:25 AM

திரைப் பார்வை: கன்னி | ‘பேச்சில்லாக் கிராம’த்தின் வன தேவதை!

நவீன வாழ்க்கையால் முகம் மாறிக்கொண்டிருக்கும் தமிழகக் கிராமங்கள், தங்களின் மரபார்ந்த பண்பாட்டின் கூறுகளைக் கணிசமாக இழந்து வருவது கண்கூடு. அதேநேரம், தரமான வாழ்க்கையைத் தேடி, தங்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு மக்கள் வெளியேறிவிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

இதுபோன்ற ஊர்களை, ‘பேச்சில்லா கிராமங்கள்’ என்பார் பண்பாட்டு ஆய்வாளர் மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவன். அதுபோன்றதொரு பேச்சில்லா மலைக் கிராமத்தில் நாம் சந்திக்கும் கதாபாத்தி ரங்கள், நமது பாரம்பரியத் தொன்மம் - தற்காலத்தின் நவீன நுகர்வு வாழ்க்கை இரண்டோடும் மோதி விலகும் த்ரில்லர் கதைக்களத்தில் நம்மை இரண்டு மணிநேரம் கட்டிப் போடுகின்றன.

கிருஷ்ணகிரியின் ஜவ்வாது மலைப் பகுதியின் உச்சியில் இருக்கிறது புள்ளஹள்ளி என்கிற பேச்சில்லாக் கிராமம். அங்கே நான்கு குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. நூற்றுக்கும் அதிகமான வீடுகள் கைவிடப்பட்டு, புல்லும் பூண்டும் முளைத்து, கூரைகள் சிதைந்து கிடக்கின்றன.

ஜவ்வாது மலையின் அடிவாரத்திலிருக்கும் கிராமத்திலிருந்து மாலை மயங்கும் வேளையில், சிறார்களான தனது அண்ணன் மகள்கள் இருவரை அழைத்துக்கொண்டு, கையில் அரிக்கேன் விளக்குடன் மலையேறத் தொடங்குகிறாள் கதையின் நாயகியான செம்பி (அஸ்வினி சந்திரசேகர்). அவளது இலக்கு புள்ளஹள்ளியில் இருக்கும் தனது தாய் மாமா வீட்டுக்குச் சென்று பாதுகாப்பாக அடைக்கலம் தேடுவது.

பாதி மலை ஏறி முடிக்கும்போதே நள்ளிரவு வந்துவிடுகிறது. அந்த மலைக் காட்டில் கழுதை ஒன்றுடன் நிற்கும் முதியவர், மலை மொழியுடன் கூடிய பிரபஞ்சத் தத்துவம் பேசி, செம்பியையும் அவளுடைய அண்ணன் மகள்களையும் பத்திரமாக அழைத்துச் சென்று ஊரின் எல்லையில் விட்டு, கழுதையையும் கொடுத்துச் செல்கிறார்.

நள்ளிரவில் யாரையும் எழுப்ப வழியின்றி, வழிபாடின்றிக் கிடக்கும் அம்மன் கோயிலில் படுத்துறங்கி கண் விழிக்கிறார்கள். பொழுது புலர்ந்ததும் தாய் மாமன் தாத்தாவிடம் சென்று சேர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாள் செம்பி. ஆனால், அவளைத் தேடிக்கொண்டு திறந்து கிடக்கும் அந்த அரவமற்ற கிராமத்துக்குள் நுழைகிறது 6 பேர் கொண்ட ஒரு கூலிப் படை.

அவர்களிடமிருந்து தன்னையும் தனது அண்ணன் மகள்களையும் தாய் மாமன் தாத்தாவையும் செம்பியால் காப்பாற்ற முடிந்ததா? அவள் எதற்காகச் சமவெளியிலிருந்து மலையேறித் தப்பி வந்தாள்? அவளது முன்கதை என்ன என்பதுதான் கதை. இதை ஒரு நவீன நாவலைத் திரையில் விரித்துச் சொல்வது போல் நேர்த்தியான திரைமொழியின் வழியாகத் தரமான திரை அனுபவமாகக் கொடுத்து அசத்தியிருக்கிறார் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கும் மாயோன் சிவா தொரப்பாடி.

அஸ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா கிரிஷ், ராம் பரதன் உள்ளிட்ட பலரும் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கி றார்கள். செட் அமைக்காமல், அசலான பேச்சில்லாக் கிராமத்தைத் தேர்வு செய்து, படமாக்கியிருப்பதுடன், அங்கு வாழும் சொற்ப மனிதர்களையே துணை நடிகர்களாகவும் பயன்படுத்தியிருப்பது படத்துக்குத் தனித்த அமானுஷ்யத்தைக் கொடுத்துவிடுகிறது.

கிருஷ்ணகிரியின் மலைத் தமிழில் கலந்து ஊடாடும் கன்னடம், தெலுங்கு பேசும் மனிதர்களையும் உலவவிட்டு தமிழ்ப் பார்வையாளர்களுக்கு ஆச்சரியமளிக்கும் தொன்மப் பிரபஞ்சத்துக்குள் அழைத்துச் சென்று ஆச்சரியப்படுத்திவிடுகிறார் இயக்குநர். அவருக்கு உறுதுணையாக ராஜ்குமாரின் ஒளிப்பதிவும் செபாஸ்டியன் சதீஷின் இசையும் படத்தின் கதை சொல்லலை வெகுவாக மேம்படுத்தியிருக்கின்றன.

தென் தமிழ்நாட்டின் மண் சார்ந்த கதைகளைத் திரையில் அதிகமும் கூறி வந்திருக்கும் தமிழ் சினிமாவில், இப்படம், அபூர்வமான கிழக்கு மலைப் பகுதியின் வாழ்வைப் பேசும் அபூர்வக் குறிஞ்சியாக மலர்ந்துள்ளது இந்தக் ‘கன்னி’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x