Published : 14 Apr 2018 10:04 AM
Last Updated : 14 Apr 2018 10:04 AM

கூட்டாஞ்சோறு போல எடுக்கப்பட்ட ‘டூ லெட்’; தேசிய விருது பெறும் இயக்குநர் செழியன் பெருமிதம்

சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருது, செழியன் இயக்கிய ‘டூ லெட்’ திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குநர் செழியன் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒவ்வொரு முறை வீடு காலி செய்யும்போதும் நிறைய அவஸ்தைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதுவும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஒரு வீட்டை காலி செய்து, இன்னொரு வீட்டுக்கு குடிபோவது சாமானியம் அல்ல. எந்த மதம், எந்த சாதி, எவ்வளவு வருமானம், என்ன தொழில் என்பதை எல்லாம் மறைமுகமாக கேட்டு தெரிந்துகொள்ள அவர்கள் நடத்தும் நேர்காணல் என்பதே பெரிய கதை. இதை ஏன் படமாக எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் உருவானதுதான் ‘டூ லெட்’ திரைப்படம்.

தமிழில் 30-க்கும் மேற்பட்ட படங்கள் போட்டியிட்டதே?

தமிழில் ‘டூ லெட்’ படம் விருது பெற்றதுபோல மலையாளத்தில் ‘தொண்டிமுதலும் திருக்சாட்சியும்’ படம் விருது பெற்றுள்ளது. ஒரு திருடன் ஒரு செயினை விழுங்கிவிடுவதால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் அந்தக் கதை. இதுபோன்ற எளிமையான, சின்னச் சின்ன, சுவாரசியமான சம்பவங்கள் நம்மைச் சுற்றி நிறைய நடக்கின்றன. எனவே, படம் பண்ணுவதற்கெல்லாம் பெரிதாக யோசிக்கத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. ‘நம்ம வீட்லயே ஆயிரம் கதை இருக்கு’ன்னு ஊரில் அப்பத்தா, பாட்டிங்க சொல்வாங்க. அந்த மாதிரி ஒரு கதையாகத்தான் ‘டூ லெட்’ படத்தையும் பார்க்கிறேன். எந்தவித பிரம்மாண்ட பின்னணியும் இல்லாமல், சாதாரணமாக எடுக்கப்பட்ட படத்துக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 நண்பர்கள் கூட்டாக சேர்ந்து ஒரு சிறுபத்திரிகை நடத்துவதுபோல நாலைந்து பேர் சேர்ந்து எளிமையாக ஒரு படத்தை எடுக்கலாம். அவ்வாறு கூட்டாஞ்சோறு போல எடுக்கப்பட்ட படம்தான் இது. அப்படி எடுத்தால்கூட அங்கீகாரம் பெற முடியும் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது.

படம் எப்போது ரிலீஸ்?

சொல்லப்போனால் ‘டூ லெட்’ படம் ஒரு முயல்குட்டி மாதிரி. திரைத்துறையினரின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு, பெரிய பெரிய சுமோ வாகனங்கள் எல்லாம் அணிவகுத்து திரைக்கு வரும். அந்தக் கூட்டத்துக்குள் இந்த முயல்குட்டியை விடமுடியாது. எல்லாம் வெளியாகி ஓய்ந்த பிறகு, ரிலாக்ஸாக இதை வெளியிடுவோம். இன்னும் 2 மாதங்கள் ஆகட்டுமே.

ஒரு திரைப்படம் வந்து, மக்களின் வரவேற்பு, அங்கீகாரத்தைப் பெற்றபிறகு ஆண்டு முடிவில் விருதுகள் கிடைக்கும்போது இருக்கும் சுவாரசியம், படம் வெளியாவதற்கு முன்பே விருது கிடைப்பதில் இருக்கிறதா?

திரைப்பட விழாக்களுக்காக மட்டுமே படங்கள் எடுக்கப்பட்டு வரும் சூழல் பல காலமாக இருக்கிறது. ‘டூ லெட்’ படத்தை கடந்த அக்டோபரில் எடுத்து முடித்தோம். திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் முதல் நோக்கம். கொல்கத்தா திரைப்பட விழாவில் கலந்துகொண்டு இந்திய அளவில் சிறந்த படமாக அறிவிக்கப்பட்டது.

இதுவரை 30 நாடுகளுக்கு அனுப்பியுள்ளோம். 17-க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன. இப்போது உள்ளூரில் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி.

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ என கவனம் ஈர்த்த படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய நீங்கள், இயக்குநராக தேசிய விருது பெற்றுவிட்டீர்கள். இனி முழு நேர இயக்குநர்தானா?

சினிமாவில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். அடுத்து, புதுமுக இயக்குநரின் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறேன். அதற்குப் பிறகு ஒரு படம் இயக்க உள்ளேன். இந்த இரண்டையுமே ஒன்றாகத்தான் பார்க்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x