Published : 22 Aug 2014 12:00 AM
Last Updated : 22 Aug 2014 12:00 AM
டி.எஸ். பாலையாவின் நேரடி கலை வாரிசாக அவரை அப்படியே நினைவுபடுத்தும் குணச்சித்திரமாகத் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் அவரது மகன் ஜூனியர் பாலையா. தனது அப்பா குறித்த நினைவுகளைத் ‘தி இந்து’வுக்காக அசைபோட்டதிலிருந்து...
அப்பா ஒரு திரைப்பட நடிகர் என்பது எத்தனை வயதில் உங்களுக்குத் தெரியவந்தது?
எனக்கு 7 வயதாக இருக்கும்போது ஒரு நாள் வீட்டிலிருந்தே மேக்-கப் போட்டுக்கொண்டு ஸ்டுடியோவுக்குக் கிளம்புவதைக் கவனித்தேன். அம்மாவிடம் கேட்டேன். பிறகு அப்பா படப்பிடிப்பிலிருந்து வந்ததும், நான் கேட்ட விஷயத்தை அம்மா அவரிடம் சொல்ல, அன்று பேசி நடித்த வசனத்தை எனக்கு முன்பாக நடித்துக் காட்டி, “குற்றம் குறை இருந்தா சொல்லுங்க முதலாளி” என்று கையைக் கட்டி கேட்டுவிட்டு என்னைத் தூக்கிக் கொஞ்சினார். அன்று இரவே மவுண்ட் ரோட்டில் இருந்த சித்ரா தியேட்டருக்கு இரண்டாவது காட்சி பாடம் பார்க்கக் குடும்பத்துடன் கூட்டிச் சென்றார். அந்தப் படம் ‘பாகப் பிரிவினை’.
எனக்குப் பத்து வயதானபோது அப்பாவுக்கு எவ்வளவு ரசிகர்கள், எவ்வளவு செல்வாக்கு என்பதைப் புரிந்துகொண்டேன். காங்கிரஸ் மைதானத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடந்தது. அதற்கு அப்பாவை சிவாஜி அழைத்திருந்தார். அங்கே திரண்டிருந்த மக்கள் அப்பாவைப் பார்த்ததும் ‘பாலையா’ ‘பாலையா’ என்று கத்தினார்கள். “எல்லோரும் ஏன் உங்களைக் கூப்பிடுறாங்க” என்றேன். “அவங்க என்னோட ரசிகர்கள். அவங்களாலதான் நமக்குச் சாப்பாடு கிடைக்குது. அவங்கதான் நமக்குக் கடவுள்” என்று கூறிக்கொண்டே, “அவங்க எப்போ நம்மள கூப்பிட்டாலும், நாம இப்படிக் கையெடுத்து கும்பிடணும், அவங்களோட கை குலுக்கணும்” என்று தன்னை அழைத்த ரசிகர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார். பிறகு 15 வயதில் அவருடன் படப்பிடிப்புக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஸ்டூடியோவில் பல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும்போதுதான் அவரது தகுதி என்ன என்பதைப் புரிந்துகொண்டேன்.
அப்பாவைப் பற்றி உங்களிடம் வியந்து கூறிய சமகாலக் கலைஞர் யார்?
பலர். நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நாகேஷ் அண்ணன். அவர் என்னைவிடப் பல ஆண்டுகள் மூத்தவர் என்றாலும் என்னுடன் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தவர். ‘காதலிக்க நேரமில்லை' படத்தில் அப்பாவிடம் அவர் கதை சொல்லும் காட்சி படமாக்கப்பட்டபோது நடந்ததை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்தக் காட்சி எடுத்து முடித்ததும் செட்டில் இருந்த அத்தனை பேரும் கைதட்டியிருக்கிறார்கள். ஆனால் அப்பா மட்டும் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். நாகேஷுக்கோ நமது நடிப்பைப் பார்த்து இவர் பொறாமைப்படுகிறாரோ என்று ஒரு எண்ணம். பிறகு படப்பிடிப்பு முடிந்து எல்லோரும் கிளம்பிக் கொண்டிருந்தபோது அவரது அருகில் போய், அண்ணே நான் எப்படி நடிச்சேன்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அப்பா, “ இன்னும் நல்லா பண்ணியிருக்கணும். கோட்டை விட்டுட்டே!” என்று கூறியிருக்கிறார். சந்தேகமே வேண்டாம். இவருக்குக் கண்டிப்பாகப் பொறாமைதான் என்று நினைத்துக் கொண்டு போய்விட்டாராம். பிறகு படம் வெளியான அன்று ரசிகர்களின் ரசனை அறிந்து வருவதற்காக மாறு வேடத்தில் பல தியேட்டர்களுக்குப் போயிருக்கிறார் நாகேஷ். “சொல்லி வைத்த மாதிரி எல்லாத் தியேட்டர்களிலும் ஒரு வசனமும் பேசாத உனது அப்பாவின் நடிப்பைத்தான் அத்தனை பேரும் ரசித்தார்கள். உனது அப்பாவின் ஆற்றல் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அதன் பிறகு உன் அப்பாவைச் சந்தித்து, அண்ணே உங்களைத் தப்பா நினைச்சுட்டேன் என்று சொன்னேன். அவர் கட்டிப்பிடித்து எனக்கு முத்தம் கொடுத்தார். அதுதான் நான் வாங்கிய தலை சிறந்த பாராட்டு. கடைசிவரை உனது அப்பாவை மட்டும் என்னால் நடிப்பில் வெல்ல முடியவில்லை” என்றார். அதை என்னால் மறக்க முடியாது.
அதேபோல 85 வயது முதியவராக எல்லீஸ் ஆர். டங்கன் சென்னை வந்திருந்தார். அவரைப் பார்க்க ஆவலோடு சென்றேன். பாலையாஸ் சன் ஹஸ் கம்” என்றதும் அத்தனை வயதிலும் சட்டென்று எழுந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். “ யூ ஆர் லைக் யூவர் ஃபாதர்” என்றார். எனது அப்பாவின் குரலும் நகைச்சுவை உணர்வும், அவரது உடல் மொழியும்கூட என்னிடம் அப்படியே இருக்கிறது என்றேன். இரண்டு நிமிடத்திற்குமேல் அனுமதியில்லை என்ற அவரது உறவினர்களிடம் இன்னும் ஒரு மணிநேரத்துக்கு எங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று 40களுக்குப் பயணிக்க ஆரம்பித்துவிட்டார். அப்பாவைக் குறித்து அவர் சொன்ன விஷயங்களைப் பற்றி தனிப் புத்தகமே போடலாம்.
உங்களுக்கு எப்போது நடிப்பில் ஆர்வம் வந்தது?
எட்டாம் வகுப்பு படிக்கும்போது மிமிக்ரி பண்ணிக் காட்டுவேன். அதில் அப்பாவின் குரலும் ஒன்று. இதைப் பார்த்த என் ஆசிரியர் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முக்கியமான காட்சிகளை நாடகமாகப் பள்ளி ஆண்டுவிழாவில் நடத்த முடிவுசெய்தார். நாகேஷ் கேரக்டரைச் சின்னம்மா பையன் செய்தார். சச்சு கேரக்டரை எனது தங்கை செய்தார். அப்பா கேரக்டரை நான் செய்தேன். பாராட்டென்றால் அப்படியொரு பாராட்டு. தலைமையாசிரியர் வீட்டுக்கு போன்செய்து எனது அப்பாவிடம், “உங்களை அச்சு அசலாக அப்படியே உங்கள் பையன் நடித்துக் காட்டினான்” என்று சொல்ல அப்பாவுக்குப் பெருமை தாங்கவில்லை.
பிறகு, ‘நம்ம வீட்டுத் தெய்வம்’ என்ற படத்தில் அப்பா நடித்தபோது அவரது நடிப்புத்திறனை அணுஅணுவாக ரசிக்க ஆரம்பித்தேன். நானே அவரது தீவிர விசிறியாகவும் மாறினேன். நான் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு ஜூனியர் பாலையா என்று பெயர் சூட்டியதும் அவர்தான்.
அப்பாவுடன் இணைந்து நீங்கள் நடித்தமாதிரி தெரியவில்லையே?
எம்.ஆர். ராதாவை நான் பெரியப்பா என்றுதான் கூப்பிடுவேன். அப்பாவின் கடைசி நாட்கள் வரை அவருக்கு நெருக்கமாக இருந்த நண்பர்களில் அவர் மிக முக்கியமானவர். அவரது தயாரிப்பில் அப்பாவும் நானும் இணைந்து நடிப்பதாகத் திட்டமிடப்பட்டது. நானும் ஆவலோடு அந்த நாளுக்காகக் காத்திருந்தேன். ஆனால் அதற்கு முன்பே அப்பா காலமாகிவிட்டார். அந்த விஷயத்தில் நான் கொடுத்து வைக்காதவன்.
இப்போது நீங்கள் நடிப்பதைக் குறைத்துக் கொண்டது ஏன்?
நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான காரணம். பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் கதை நாயகி அல்லியின் சித்தப்பாவாக மாடன் என்ற கேரக்டரில் நடித்தேன். அதேபோலச் சாட்டை படத்திலும் அழுத்தமான கதாபாத்திரம்தான். 200 படங்களில் நடித்திருந்தாலும் வில்லனாக நடிக்கவே அதிக வாய்ப்புகள் வந்தன. இதனால் பல வாய்ப்புகளை மறுத்தேன். தற்போது மீண்டும் முழுமூச்சாக நடிக்க வந்துவிட்டேன். விரைவில் பல படங்களில் என்னை நீங்கள் பார்க்கலாம். இப்போது என் மகன் ரோஹித் பாலையா நடிக்க வந்துவிட்டார்.
இறப்பதற்கு முன் வறுமையில் வாடினார் என்று உங்கள் அப்பாவைப் பற்றி குறிப்பிடுகிறார்களே?
அது சுத்த பேத்தல். சென்னை மடிப்பாக்கத்தில் அப்பாவுக்கு 350 ஏக்கர் நிலம் இருந்தது. இன்றும் பாலையா கார்டன் என்ற பகுதியாக இருக்கிறது. நாங்கள் சகோதர சகோதரிகள் மொத்தம் ஏழுபேர். அங்கே எங்கள் ஒவ்வொருவர் பெயரிலும் தெருக்கள் இருக்கின்றன. இன்று கோடீஸ்வரர்களாக இல்லாவிட்டாலும், அப்பா எங்களை நடுத்தெருவில் நிறுத்தவில்லை. எங்களுக்கு அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment