Published : 18 Apr 2014 12:19 PM
Last Updated : 18 Apr 2014 12:19 PM
வன்முறை மூலம் ஒரு நகரையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் உள்ளூர் தாதாக்கள். தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளத் தாதா குழுக்களிடையே கடும் போட்டி. நிர்க்கதியாகத் தவிக்கும் மக்களுக்கு ஆபத்பாந்தவனாக நகருக்குள் ஒரு புதியவன் பிரவேசிக்கிறான். இரு குழுக்களையும் அழித்தொழித்து நகருக்குள் அமைதியைக் கொண்டு வருகிறான். இந்தக் கதைக்களத்தில் பல மொழிகளில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றுக்கெல்லாம் மூலம் ஜப்பானின் புகழ்பெற்ற இயக்குநர் அகிரா குரோசாவாவின் இயக்கத்தில் 1961-ல் வெளியான ‘யோஜிம்போ’ (Yojimbo).
ஜப்பானில் டோகுகாவா சர்வாதிகார ஆட்சி முடிவு பெறும் தருணம். 1860-ம் ஆண்டில் நடக்கும் கதை. தன் வாழ் நாளைச் சுதந்திரமாக வாழ முயலும் ஒரு முன்னாள் போர் வீரன் (சாமுராய்) தன் கால்கள் இழுத்துச்செல்லும் திசையில் நடக்கிறான். ஒரு சிறு நகரத்தை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையில் ஓடி வரும் ஒரு இளைஞனையும் அவனைத் துரத்திக்கொண்டு வரும் அவனது தந்தையையும் பார்க்கிறான். உள்ளூர் தாதாவிடம் சேர விருப்பம் கொண்ட அந்த இளைஞனை அவனது தந்தை கடுமையாகக் கண்டிக்கிறார். “நீண்ட நாட்களுக்குக் கஞ்சி குடித்துக்கொண்டு உயிர்வாழ்வதை விட, குறுகிய வாழ்க்கை என்றாலும் சந்தோஷமாக வாழ விரும்புகிறேன். என்னை விடுங்கள்” என்று திமிறிக்கொண்டு அந்த இளைஞன் ஓடி மறைகிறான். நகரின் நிலை என்ன என்று சாமுராய்க்கு ஓரளவு பிடிபடுகிறது. ஊருக்குள் உணவு விடுதி நடத்தும் கோஞ்சி என்ற முதியவன் ஊரின் முழு நிலவரத்தையும் அவனுக்குச் சொல்கிறான்.
சீபி என்பவன் நகரில் விபச்சார விடுதி நடத்துகிறான். அவனுக்கு முக்கிய எதிரியாக உருவாகியிருப்பவன் உஷித்தோரா. இவன் ஒரு காலத்தில் சீபியின் முக்கியமான கையாளாக இருந்தவன். சீபி தனக்குப் பிறகு தனது மகனை அதிகாரத்துக்குக் கொண்டு வரத் திட்டமிட்டதால் கோபித்துக்கொண்டு வெளியேறி, தனக்கென ஒரு குழுவை உருவாக்கியவன். இந்த இருவரின் அதிகாரப் போட்டியின் காரணமாக அந்தச் சிறு நகரம் கொலைக்களமாகிறது. நகரில் சவப்பெட்டி செய்யும் கிழவனின் காட்டில் மழைதான். இந்த விஷயங்களை அறிந்துகொள்ளும் சாமுராய் இரு தாதாக்களின் பகைமையைப் பயன்படுத்தியே அவர்களை அழிக்கத் திட்டமிடுகிறான்.
தன்னிடம் வம்புச்சண்டைக்கு வரும் உஷித்தோராவின் அடியாட்கள் மூன்று பேரைத் தன் மின்னல்வேக வாள் வீச்சால் கொன்று வீழ்த்துகிறான். இந்தத் தகவலறிந்த சீபி, தனது குழுவில் பாதுகாவலனாக (ஜப்பானிய மொழியில் யோஜிம்போ) சேர்ந்துகொள்ளுமாறு சாமுராயைக் கேட்டுக்கொள்கிறான். மிக அதிகச் சம்பளத்துடன் அந்த வேலைக்குச் சம்மதிக்கிறான் சாமுராய். ஒப்பந்தப்படி உஷித்தோராவின் குழுவுடன் மோதி அவர்களைக் கொல்வதில் சீபிக்கு அவன் உதவவேண்டும். ஆனால், சண்டையில் வெற்றி பெற்றவுடன் சாமுராயைத் தந்திரமாகக் கொல்ல, சீபி, அவன் மனைவி மற்றும் மகன் ரகசியமாகத் திட்டமிடுகின்றனர். இதை ஒட்டுக்கேட்கும் சாமுராய் இருகுழுவும் களமாட எதிரெதிரே தயாராக நிற்கும்போது, தான் விலகிக்கொள்வதாக அறிவித்துவிட்டு, சீபியிடம் வாங்கிய முன்பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறான். நிகழவிருந்த சண்டை நகருக்குள் வரும் அரசு அதிகாரியால் தடைபடுகிறது.
தற்காலிக அமைதி திரும்பினாலும் மீண்டும் இரு குழுக்களும் தங்கள் பகைமையை வளர்த்துக்கொள்கின்றனர். அத்துடன் சாமுராயைத் தங்கள் பக்கம் இழுக்கச் சீபியும் உஷித்தோராவும் போட்டி போடுகின்றனர். அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி இரு குழுக்களுக்கும் இடையே உச்சகட்டச் சண்டையை உண்டாக்கச் சாமுராய் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறுகின்றன. நகரில் அமைதி திரும்புகிறது. எதன்மீதும் பற்றில்லாத அந்த வீரன் தன் வழியே நடக்கிறான்.
இந்த எளிய கதையை அகிரா குரோசாவா படமாக்கிய விதம் அற்புதமானது. சாமுராய் ஊருக்குள் நுழையும்போது ஒரு மனிதக் கையை வாயில் கவ்விக்கொண்டு ஒரு நாய் ஓடிவரும். ஊரில் தினமும் கொலை விழுகிறது என்பதை இந்த ஒரே காட்சியில் உணர்த்தியிருப்பார் குரோசாவா. தன் வாள் ஒன்றே தனது பலம் என்று அமைதி நிறைந்த வீரனாக டோஷிரோ மிபுன் அசத்தியிருப்பார்.
இந்தப் படம் முக்கியத்துவம் பெற மற்றொரு காரணம், இயக்குநர் செர்ஜியோ லியோன் இயக்கிய புகழ்பெற்ற Dollar Trilogy படங்களுக்கு மூலமாக இந்தப் படம் அமைந்ததுதான். டாலர் வரிசையின் முதல் படைப்பான A Fistful of Dollars படம் யோஜிம்போ படத்தின் அப்பட்டமான நகல். குரோசாவா படத்தில் டோஷிரோ குதிரையில் வர மாட்டார் என்பதைத் தவிர இரண்டு படங்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT