Published : 20 Apr 2018 10:16 AM
Last Updated : 20 Apr 2018 10:16 AM

ஒத்திகையில் அங்கிள்… படப்பிடிப்பில் அப்பா!: சந்தோஷ் நம்பிராஜன் பேட்டி

ரசு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவைப் பயின்றவர் சந்தோஷ் நம்பிராஜன். தமிழ் எழுத்துலகம் நன்கு அறிந்த கவிஞர் விக்கிரமாதித்யனின் மகன். ஒளிப்பதிவாளர் செழியனிடம் உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த சந்தோஷ், இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகன். செழியனின் இயக்கத்தில் சுயாதீனத் திரைப்படமாக உருவாகி, சர்வதேசப் பட விழாக்களில் 20-க்கும் அதிகமான விருதுகளைப் பெற்றுவந்திருக்கும் ‘டூ லெட்’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். தற்போது சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதையும் ‘டூ லெட்’ பெற்றிருக்கிறது. சந்தோஷத்தில் இருந்த சந்தோஷ் நம்பிராஜனிடம் உரையாடியதிலிருந்து...

ஒளிப்பதிவாளராக அறியப்படும் முன்பு நடிகராக அறியப்படப் போகிறீர்கள். இது நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றுதானே?

ஆமாம்! என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னுடைய கண்கள் தீர்க்கமாக இருக்கு என்று சொல்லி நடிக்கக் கேட்டிருந்தாங்க. அப்பவெல்லாம் ‘நடிச்சா ஸ்ட்ரைட்டா ஹீரோதான், அ யம் வெய்டிங்’ என்று விளையாட்டாகச் சொல்லுவேன். அது இப்போ உண்மையாவே நடந்துருச்சு. ‘டூ லெட்' படத்தில் கதைதான் ஹீரோ, நான் பிரதான கதாபாத்திரம். நடிகன் ஒரு சிற்பம், இயக்குநர்தான் சிற்பி. என்னைச் செதுக்கியவர் செழியன் அண்ணன். அவரைத் தவிர வேறு யார் நடிக்கச் சொல்லியிருந்தாலும் நடிச்சிருக்க மாட்டேன்.

சரியான கதைக்களம், இயக்குநர் அமைந்து, அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றால்தான் அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் அறியப்படுவார். ஒரு அறிமுக நடிகனுக்கும் இது பொருந்தும். ‘டூ லெட்’ படத்தில் இது எல்லாமே எனக்கு அமைஞ்சுடுச்சு. அதனால நான் ஒரு நடிகனாக அறியப்படப் போகிறேன். ரொம்ப சந்தோஷப்படுறேன்.

இத்தனை விருதுகளைக் குவிக்கற அளவுக்கு அப்படி என்ன பேச வருகிறது இந்தப் படம்?

ஒரு பறவை தன்னோட கூட்ட உலகத்துல எங்க வேண்டுமானாலும் கட்டிக்க முடியும், ஆனால் மனிதனால் முடியாது. உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றும் மனிதனின் அத்தியாவசிய தேவைகள். அதில் இருப்பிடத் தேடல்தான் ‘டூ லெட்’. நிம்மதியா ஒரு இடத்தில தங்குறதுக்கு நாம எவ்வளவு நிம்மதிய இழக்க வேண்டியது இருக்கு. நகரத்துல எத்தனை குடும்பங்கள் அவங்க விரும்பின மாதிரியான வீடுகள்ல வசிக்கிறாங்க? காம்ப்ரமைஸ் தான் நடுத்தர வர்க்கத்தோட வாழ்க்கை. ‘வீடு திரும்புதல்’னு எங்கப்பா கவிஞர் விக்ரமாதித்தன் ஒரு கவிதைத் தொகுப்பே எழுதியிருக்கிறார். வீடு தேடும்போது ஏற்படும் அன்றாடச் சிக்கல்களை ‘டூ லெட்’ பேசியுள்ளது. எடுத்துக்கொண்ட விஷயமும் சொல்லப்பட்ட விதமும் ‘டூ லெட்’ படத்துக்கான உலக அங்கீகாரங்களையும் விருதுகளையும் கொண்டுவந்து குவிக்குது.

டூ லெட்டில் உங்கள் கதாபாத்திரம் என்ன?

கனவுகளைச் சுமந்து திரியும் யதார்த்தக் கலைஞன் கதாபாத்திரம். ஒரே நேரத்தில் கனவுகளையும் வீட்டையும் பொருளையும் மாநகரத்தில் தேடி அலையும் சாதாரணன்.

உங்களுடன் நடித்த ஷீலா, சிறுவன் தருண் ஆகியோர் பற்றி?

ஷீலா பிரமாதமான நடிகை. 5 வயது பையனுக்குத் தாயாகத் தயக்கமின்றி நடித்திருக்கிறார். தாய்மையை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். படப்பிடிப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன் தருணும் நானும் தினமும் சந்தித்து ஒவ்வொரு சீனையும் ரிகர்சல் பார்ப்போம். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். கேமரா இருந்தால் நான் அப்பா, இல்லையென்றால் அங்கிள், இதுதான் தருணுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

‘டூ லெட்’டின் ஒளிப்பதிவில் உங்கள் பங்கு இருந்ததா?

செழியன் அண்ணன் ஒளியை அதன் இயல்புடன் அணுகும் யதார்த்தக் கலைஞர். அவருடன் இணை ஒளிப்பதிவாளர் பிச்சுமணி பணியாற்றினார். படத்தின் தொடக்கத்தில் உதவி இயக்குநர் வேலைகள் மட்டும் செய்தேன். முழுக்க நடிப்பில்தான் கவனமாக இருந்தேன், செழியன் அண்ணன் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு காட்சியில் அததை வெளிக்கொணர்வதே என் வேலை.

தமிழில் சுயாதீன படங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘குற்றம் கடிதல்’, ‘அருவி’ போன்ற படங்களை மக்கள் ஆராதித்திருக்கிறார்கள். உலகத் தரத்துக்கான நிறைய கதைகளும் களங்களும் நம்மிடம் இருக்கின்றன, அவற்றை எவ்வித சமரசமுமின்றிப் படமாக்கினால் சுயாதீனப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெறும். ‘டூ லெட்’ நிறைய சுயாதீனப் படைப்பாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும் படமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x