Published : 13 Apr 2018 10:34 AM
Last Updated : 13 Apr 2018 10:34 AM

எனக்கே இது ஆச்சரியம்தான்!: மேயாத மான் இந்துஜா பேட்டி

‘மெ

ர்க்குரி’, ‘பூமராங்’, விக்ரம் பிரபுவுடன் ஒருபடம், உதயநிதியுடன் ஒரு படம் என கோலிவுட் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார் ‘மேயாத மான்’ இந்துஜா. கூர்மையான கண்கள் ஒளிர முதல் பார்வையிலேயே வசீகரிக்கும் தோற்றத்துடன் வளையவரும் இந்துஜாவிடம், ‘வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு மேலும் ஒரு கதாநாயகி’ என்று பேச்சைத் தொடங்கினால், ‘‘தப்பு…நான் பக்கா தமிழ் பொண்ணு.வேலூர்தான் சொந்த ஊர். நடுத்தரமான குடும்பம். கணினித்துறையில் பட்டப்படிப்பும் முடிச்சாச்சு’’ என்று அழகுத் தமிழில் பேச அமர்கிறார்.

நடிப்பு ஆசை எப்படி வந்தது?

வீட்ல சினிமான்னா என்னைத் தவிர யாருக்கும் பிடிக்காது. நான் நடிப்பு என்றபோது சுனாமி வராத குறைதான். தொடக்கத்தில் விடவே இல்லை. படிப்பு சார்ந்த வேலைக்கு போக கொஞ்சம்கூட எனக்குப் பிடிக்கல. ஒரு கட்டத்துல ‘உன்னோட விருப்பத்துக்கே போ’ன்னு வீட்ல துரத்தி விட்டுட்டாங்க. நடிக்க வரணும்னா விதவிதமா போட்டோஸ் எடுக்கணும். அதை சினிமா அலுவலகங்கள்ல போய் கொடுக்கணும்கிற விஷயங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. ஒரு இடத்துல ஆடிஷன் நடக்குதுன்னு கூப்பிட்டா போவேன், வருவேன் அவ்வளவுதான். ஆடிஷன்ல எப்பவும் நான் ரிஜக்ட்தான். ஆனாலும் முயற்சியை விடல. அப்பப்போ வாய்ப்பு அமைகிற குறும்படங்களில் மட்டும் நடிப்பேன். குறும்பட உலகத்துல பாராட்டுக்கு பஞ்சம் இருக்காது. அந்தப் பாராட்டுகள்தான் என் விரலைப் பிடிச்சு இன்னும் தேடுன்னு என்னை ஊக்கப்படுத்துகிட்டே இருந்தன. அப்படி ஒரு சந்தர்ப்பத்துல அமைஞ்சதுதான் ‘மேயாத மான்’ திரைப்பட வாய்ப்பு. நல்ல கதாபாத்திரம். அந்த ஒரு படம் இன்னைக்கு என்னோட பயணத்தை வேற இடத்துக்கு கொண்டு வந்திருக்கு.

‘மேயாத மான்’ படத்தில் தங்கை கதாபாத்திரம் ஏற்று நடித்தீர்கள். பொதுவாக முதல் படம் மாதிரியேதான் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையும். ஆனால், உங்கள் விஷயத்தில் தலைகீழாக நடந்திருக்கிறதே?

ஆமா! எனக்கே இது ஆச்சரியம்தான்! ‘மெர்க்குரி’, ‘பூமராங்’, விக்ரம் பிரபுவோட படம், அடுத்து ஷூட்டிங் தொடங்கவிருக்கும் உதயநிதி படம்னு எல்லாமும் கதாநாயகி வாய்ப்புகள்தான். ‘மேயாத மான்’ பட வாய்ப்பு வரும்போது, ‘தங்கை ரோலா.. வேண்டவே வேண்டாம்’னு கூட இருந்த எல்லோரும் திட்டினாங்க. ஆனா எனக்கு மட்டும் அந்த கதாபாத்திரம் சம்திங் ஸ்பெஷல்னு வித்தியாசமா பட்டுச்சு. கண்டிப்பா நடிப்போம்னு மனசு சொன்னதை கேட்டு `டிக்’ அடிச்சேன். என்னோட முடிவு மாதிரியே படமும், என் கதாபாத்திரமும் நல்லா பேசப்பட்டுச்சு. இன்னைக்கு பயங்கர பிஸியா ஓடிக்கிட்டிருக்கேன்.

பிரபுதேவா, கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் ‘சைலன்ட் த்ரில்லர்’ என்று ‘மெர்க்குரி’ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கே?

இந்த மாதிரி ஒரு படத்துல நானும் இருக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. படத்துல 5 மாணவர்களில் ஒருவரா வர்றேன். நாங்க 5 பேரும் ஒரு பிரச்சினையை எதிர்கொள்வோம். அந்த பிரச்சினை என்ன, அதிலிருந்து எப்படி வெளியே வர்றோம்கிறதுதான் கதை. பிரபுதேவா, கார்த்தி சுப்பராஜ், கேமராமேன் திரு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்னு பெரிய அணி. இப்படி ஒரு கூட்டணியோடு வேலை பார்த்த அனுபவம் எனக்கு பிலிம் டிப்ளமோ படிப்பு படிச்ச மாதிரி இருந்தது.

‘பூமராங்’ படப்பிடிப்பு முடிந்ததா?

50 சதவீதம் முடிஞ்சிருக்கு. கிராமம், நகரம்னு ரெண்டு பின்னணியிலும் படம் இருக்கும். தேனி பின்னணியில் முக்கியமான காட்சிகள் படப்பிடிப்பு முடிச்சாச்சு. சினிமா வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும் சென்னையில படப்பிடிப்பு தொடருது. படத்தோட இயக்குநர் கண்ணன் சார் ரொம்ப ஜாலியான மனிதர். அழகா எங்கக்கிட்ட இருந்து நடிப்பை வாங்குவார். அவர் மனசுக்கும், கதைக்கும் படம் பெரிய `ஹிட்’ அடிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x