Published : 05 Apr 2024 06:12 AM
Last Updated : 05 Apr 2024 06:12 AM
குடியையும் புகையையும் ஒரு கொண்டாட்டமாக, கேளிக்கையாகத் திரைப்படங்கள் பரவலாக்கி வரும் காலம் இது. ஓர் ஆறுதலாக மதுவால் அழிந்து போகும் முதன்மைக் கதாபாத்திரங்களைக் கொண்ட திரைப் படங்கள் எப்போதாவது வருவதுண்டு.
ஆனால், அவை வறட்டுப் பிரச்சாரமாக, போதனையாக, கேட்பாரற்று, வந்த சுவடு தெரியாமல் போய்விடுகின்றன. ஆனால், ‘ஆலகாலம்’ அந்த வகைக்குள் அடங்காமல், கதை, கதாபாத்திர வடிவமைப்பு, நடிப்பு, இசை எனப் பல அம்சங்களில் திமிறிக்கொண்டு வெளியே நிற்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீரிமேடு என்கிற கிராமத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் ஜெய் என்கிற சிறுவனின் அப்பா கள்ளச்சாராயம் அருந்தி இறந்து போகிறார். அவனுடைய அம்மா யசோதா (ஈஸ்வரி ராவ்) தனது கடும் உழைப்பால் மகனை வளர்த்துப் பொறியியல் கல்லூரியில் சேர்க்கிறார்.
விடுதியில் தங்கிப் பயிலும் ஜெய்யின் அறிவுத்திறனைப் பார்த்து சக மாணவியான தமிழ் (சாந்தினி) அவனைக் காதலிக்கிறாள். ஒரு பெண்ணின் மனதை வென்றதைப் பெரிய அங்கீகாரமாக நினைக்கும் ஜெய்யின் கல்வி, காதல் இரண்டையும் சிதைக்க நினைக்கிறார்கள் சக மாணவர்களில் சிலர்.
தந்திரமாக ஜெய்யை மது அருந்த வைத்து, போதையை அவன் உணரும்படி செய்கிறார்கள். அதன் பிறகு ஜெய்யின் வாழ்க்கையை மது எப்படி ஆக்கிரமித்தது, அதனால் அவன் எதையெல்லாம் இழந்தான் என்பது கதை.
முதல் பாதித் திரைப்படம் கிராமிய வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, காதலுக்கான போராட்டம் என மெல்ல ஊர்ந்து செல்கிறது. இரண்டாம் பாதியோ ஒருநொடிகூட கண்களைத் திரையிலிருந்து விலக்க முடியாத மாயத்தைச் செய்கிறது.
மதுப் பழக்கம் ஒருவனை மெல்ல மெல்ல எவ்வாறு தீவிரக் குடிநோயாளி ஆக்குகிறது என்பதையும் அதை அருந்துவதற்காக ஒரு குடிநோயாளி எந்த எல்லைவரை செல்வான் என்பதையும் காட்சிகளாகச் சித்தரித்த விதம், கல் நெஞ்சம் படைத்தவர்களையும் ‘இவை உண்மைதானே’ என உணரவும் பதறவும் வைத்துவிடும்.
காவல் தெய்வத்துக்குப் படைக்க மதுப்புட்டி கேட்கும் பூசாரியிடம் ‘அய்யனார் உங்கிட்ட பாட்டில் கேட்டாரா’ என்று சண்டை போடும் கிராமத்து அம்மாவாக, மகனின் வெற்றியைக் காண காட்டிலும் மேட்டிலும் உழைக்கும் பெண்ணாக ஈஸ்வரி ராவ் வாழ்ந்திருக்கிறார்.
காதல் திருமணம் பரிசாகத் தரும் நெருக்கடியான வாழ்க்கையை எதிர்கொள்ளும் காதலி, மனைவி, தாய் என்கிற மூன்று பரிமாணங்களில், கணவனை மீட்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் போராடும் பெண்ணாகவும் சாந்தினி படம் முழுவதும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
அறிமுக நடிகர்களே ஏற்று நடிக்கத் தயங்கும் சிதிலத்தின் உச்சமாக விளங்குகிறது ஜெய் கதாபாத்திரம். அதை ஏற்று, நம்ப முடியாத அளவுக்குத் தரமும் அர்ப்பணிப்பும் மிகுந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார், இப் படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ஜெய கிருஷ்ணமூர்த்தி. துணைக் கதாபாத்திரங்களில் வருகிற அனைவரது நடிப்பும் முதன்மைக் கதா பாத்திரங்களை நன்கு துலங்கச் செய்கின்றன.
கதை, கதாபாத்திரங்களின் வளர்ச்சி, அவற்றின் சிதைவைத் தனது இசையின் வழியாகப் பார்வையா ளர்களின் மனதுள் மிகையின்றிக் கடத்தியிருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். இதுவும் ஒரு படம் எனக் கடந்து செல்ல முடியாதபடி ஆழமான தாக்கத்தைத் தருகிறது இந்த ‘ஆலகாலம்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT