Last Updated : 15 Aug, 2014 12:00 AM

 

Published : 15 Aug 2014 12:00 AM
Last Updated : 15 Aug 2014 12:00 AM

சுதந்திர இந்தியாவின் விடுதலை கீதம்

பிற இந்திய மொழித் திரைப்பாடல்களைவிட மிகச் சிறந்தவை எனப் போற்றத்தக்க பல சுதந்திர உணர்வுப் பாடல்கள் தமிழ்த் திரையில் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவையெல்லாம் மற்ற மொழிகளில் உள்ளதுபோல், ஒரு குறிப்பிட்ட படத்திற்காக எழுதப்பட்ட பாடல்கள் அல்ல. இந்த வினோத நிலைக்கு இரண்டு சுவையான காரணங்கள் உள்ளன.

முதலாவது, இந்திய சுதந்திரம் என்பது இப்போதைக்குச் சாத்தியமல்ல என்ற அவநம்பிக்கையில் நாடே துவண்டு கிடந்த தருணத்தில், ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்தச் சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ போன்ற வரிகள் மூலம் பரவசம் ஏற்படுத்திய பாரதியின் சுதந்திர உணர்வுப் பாடல்கள். இந்திய சுதந்திரம், இந்திய தேசியக் கொடி, தேசத் தலைவர்கள், அவர்களின் தியாகம் ஆகியவை பற்றி மட்டுமின்றி, ‘அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாதப் பொருள் இல்லை அவனியிலே’ போன்ற வரிகள் வாயிலாக அன்றைய மக்களின் இயலாமை பற்றியும் பாரதி எழுதிய ஏராளமான பாடல்களைக் காப்புரிமை இன்றி எடுத்துப் பயன்படுத்தும் வாய்ப்பு தமிழ்த் திரைப் படங்களுக்கு இருந்தது. இதனால் காலத்தால் அழியாத ஏராளமான சுதந்திர உணர்வுத் திரைப் பாடல்கள் தமிழ்ப் படங்களில் ஒலித்திருக்கின்றன.

இரண்டாவது காரணம் தமிழ் உணர்வோடு தொடர்புடையது. திரையிசைக் கவிஞர்களின் பொற்காலம் என்று கொண்டாடப்பட்ட 50, 60-களில் கோலோச்சிய திரைப்படப் பாடலாசிரியர்கள் பலரும் - பின்னாளில் தேசிய மற்றும் ஆன்மிகவாதியாக மாற்றம் கொண்ட கண்ணதாசன் உட்பட பலரும்- திராவிட, தமிழக உணர்வுகளுக்கே அப்போது அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். எனவே இந்தக் காலகட்டத்தில் படத்துக்காகவே எழுதப்பட்ட தேசியப் பாடல்கள் குறைவாகவே இருந்தன.

உணர்வின் அடிப்படையில் தமிழ், இந்தித் திரைப்பாடல்கள் பல விதங்களில் ஒன்றுபட்டாலும், அவற்றை வெளிப்படுத்தும் முறையில், பாரதியின் பாடல்களைத் தவிர்த்து நோக்கினால், வேறுபடுகின்றன வழக்கப்படி முதலில் இந்திப் பாடல்.

ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்கூடப் பாடப்படும் உணர்வையும் பொருளையும் உள்ளடக்கிய இந்தப் பாடல், திலீப் குமார், வைஜயந்திமாலா நடித்து

1964-ல் வெளிவந்த ‘லீடர்’ என்ற வெற்றிப் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஷகீல் பதாயீ எழுதி, திலீப் குமாரின் திரைக் குரல் எனப் போற்றப்பட்ட முகமது ரஃபி பாடியுள்ள உணர்ச்சி மிக்க இப்பாடலின் இசை அமைப்பாளர் நௌஷாத்.

பாடல்:

அப்னி ஆஜாதீ கி ஹம் ஹர் கிஜ் மிட்டா சக்தே நஹீன்

சர் கட்டா சக்தே ஹைன் லேக்கின் சர் ஜுக்கா சக்தே நஹீன்

ஹம்னே சதியோன் மே யே ஆஜாதீ கி நேமத் பாயீ ஹைன் நேமத் பாயீ ஹைன்

சேக்டோன் குர்பானியான் தேக்கர் யே தௌலத் பாயீ ஹைன் யே தௌலத் பாயீ ஹைன்

... ... ...

பொருள்:

எங்கள் சுதந்திரத்தை நாங்கள் எதற்காகவும் இழக்க முடியாது.

(எங்கள்) தலையை வெட்ட இயலுமேயன்றி அடிபணியச் செய்ய முடியாது.

நாங்கள் எத்தனையோ காலமாகப் போராடி இந்தச் சுதந்திரத்தின் உரிமையைப் பெற்றுள்ளோம்

எண்ணற்ற தியாகங்கள் மூலம் இந்தப் பொக்கிஷத்தைப் பெற்றுள்ளோம்

(அஞ்சாத) புன்னைகையுடன் எங்கள் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகளை ஏற்றுள்ளோம்

எத்தனை அவலங்களைத் தாண்டிய பிறகு இந்தச் சொர்க்கம் எங்களுக்குக் கிடைத்தது

சுய லாபத்திற்காக நாங்கள் எங்கள் தன்மானத்தை இழக்க முடியாது

எங்கள் சுதந்திரத்தை நாங்கள் எதற்காகவும் இழக்க முடியாது

அநீதி என்ன, மக்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிராகச் செல்ல முடியுமா?

எவரும் வர முடியாது அனல் காற்றின் எதிரில்

அனல் காற்றின் எதிரில்

அமைதிக்கு எதிரியாக லட்சம் சிப்பாய்கள் வரட்டும்.

லட்சம் சிப்பாய்கள் வரட்டும்

நிற்க முடியாது எங்கள் ஒற்றுமைக்கு முன்

எங்கள் ஒற்றுமைக்கு முன்

எதிரிகள் அசைக்க முடியாத கற்கள் நாங்கள்

கற்கள் நாங்கள்

எங்கள் சுதந்திரத்தை நாங்கள் எதற்காகவும் இழக்க முடியாது.

(எங்கள்) தலையை வெட்ட இயலுமேயன்றி அடிபணியச் செய்ய முடியாது.

இனி தமிழ்ப் பாடல்.

மற்ற எல்லா உணர்வைப் போன்றே விடுதலை உணர்வையும் பாரதிக்கு அடுத்தபடியாக அழகாக வெளிப்படுத்தித் தமிழ்த் திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கண்ணதாசனின் இப்பாடல் இடம் பெற்ற படம் ஆயிரத்தில் ஒருவன்.

முதன்முதலாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இணைந்து நடித்து 1965-ல் வெளிவந்த இந்த மாபெரும் வெற்றிப் படம் ‘கேப்டன் ப்ளட்’ என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் எனக் கூறப்பட்டது.

விடுதலை உணர்வை ஆழமாக வெளிப்படுத்தும் கண்ணதாசனின் வரிகளுக்கு டி.எம். சௌந்தரராஜனின் உணர்ச்சிகரமான உச்சரிப்பு, விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பொருத்தமான இசை, காட்சி அமைப்பு ஆகியவை இப்பாடலைக் காலத்தால் அழியாத சுதந்திர கீதமாக ஆக்கின.

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே

கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே

சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே

போகும்போது வேறு பாதை போகவில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

சுதந்திர தினம், சுதந்திர உணர்வு என்றால் பாரதியாரின் பாடல்களுக்கு அடுத்தபடியாக உடனடியாக அனைவருக்கும் தோன்றும் இந்தப் பாடல் சுதந்திர இந்தியாவில் பிறந்த மகத்தான விடுதலை கீதம் என்று சொல்வதற்குத் தகுதியானது.

* படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x