Published : 29 Aug 2014 12:00 PM
Last Updated : 29 Aug 2014 12:00 PM
கபடி விளையாட்டை மையப்படுத்தித் தனது முதல் படத்தை இயக்கியவர் சுசீந்திரன். தற்போது கிரிக்கெட்டைக் கதைக்களமாக்கி ‘ஜீவா' படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
“பாலிவுட்டில் எப்படி லகான், சக் தே இந்தியா ஆகிய படங்களை எல்லாம் விளையாட்டுப் படங்கள் என்று சொல்லிக்கொள்கிறார்களோ, அதே போல தமிழ் சினிமாவுக்கு ‘ஜீவா' இருக்கும்” என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தபடி உரையாடினார் இயக்குநர் சுசீந்திரன்.
கிரிக்கெட்டை மையப்படுத்திய படங்களில் எந்த விதத்தில் ‘ஜீவா' மாறுபடும்?
சாதாரணத் தெரு கிரிக்கெட்ல ஆரம்பித்து, இந்திய கிரிக்கெட் அணி வரைக்கும் போகணும்ன்னா ஒரு பெரிய செயல்முறையே இருக்கு. அது இங்கே நிறைய பேருக்குத் தெரியாது. பதினோரு வயசுல தொடங்கி பத்தொன்பது வயசுவரைக்கும் பல ஏஜ் குரூப்ல ஆடிய பிறகுதான் ரஞ்சி கிரிக்கெட். அப்புறம்தான் இந்தியன் கிரிக்கெட் டீமுக்குள் போகவே வாய்ப்பு உருவாகும். ஏழு வயசுல கிரிக்கெட் ஆடத் தொடங்குற பையன், இந்தியன் கிரிக்கெட் டீமிற்குள் போய்ச் சேர்ற வரைக்கும் நடக்கிற போராட்டத்தை ஒரு படமா பார்த்தால் எப்படியிருக்கும்? அதுதான் ‘ஜீவா'
அப்போ கதையில கண்டிப்பா அரசியல் இருக்கணுமே?
அரசியல் இல்லாமல் எதுவுமே கிடையாது. சினிமா, விளையாட்டு இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் அரசியல் இருக்கிறது. அந்த விளையாட்டிற்குள் இருக்கிற அரசியலைச் சொல்லியிருக்கேன்.
கிரிக்கெட்ல நடக்கிற விஷயங்களைக் கேள்விப்பட்டப்போ இப்படியெல்லாமா நடக்குது... இதை ஏன் நாம படமா பண்ணக் கூடாதுன்னு தோன்றியது. இந்தப் படத்துக்காக நிறைய கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்து, விஷயங்களை வாங்கியிருக்கேன். கோச், ரெஃப்ரீ, பிட்ச் ரிப்போர்ட்டர் இப்படி நிறைய பேரைச் சந்தித்தேன். இவர்கள் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொருத்தரும் கிரிக்கெட்டைப் பார்க்கும் பார்வை வேறு. என்னோட கதைக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு திரைக்கதை பண்ணியிருக்கேன். விஷ்ணுவோட கேரியர்லயும் சரி, என்னோட கேரியர்லயும் சரி ரொம்ப முக்கியமான படமாக இருக்கும்.
விஷ்ணுவை ஏன் ஹீரோவா தேர்ந்தெடுத்தீங்க? முக்கியமா உங்களுடைய யதார்த்தம் இதுல இருக்குமா?
விஷ்ணுவுக்கு நல்லா கிரிக்கெட் தெரியும் என்பதால் அவரோட மறுபடியும் வேலை செய்ய விரும்பினேன். தவிர விஷ்ணுகிட்ட எப்பவுமே ஒரு வேகம் இருக்கும். ஒரு சீரியஸான விஷயத்தைக் கதையில கொண்டுவரும்போது, காமெடியோடு கலந்து சொன்னாதான் மக்களிடம் ரீச்சாகும். அப்படிதான் இந்தக் கதையில் சூரி ஒரு ஃபாஸ்ட் பெளலராக நடித்திருக்கிறார். ரொம்ப உண்மையாக நானும், என்னுடைய டீமும் உழைத்திருக்கிறோம். 55 நாள் கிரிக்கெட் மைதானத்திலேயே இருந்திருக்கிறோம்.
வித்தியாசமான கதைக் களங்களோடு இப்போது நிறைய குறும்பட இயக்குநர்கள் வந்துவிட்டார்களே?
நானும் ஒரு குறும்பட இயக்குநர்தான். குறும்படங்கள் பண்ணியிருக்கேன். அப்போ அது பாப்புலர் கிடையாது. நான் பண்ணியது வெளியே தெரியல. அப்போ இவ்வளவு மீடியா, நாளைய இயக்குநர் மாதிரி ஒரு நிகழ்ச்சி கிடையாது. குறும்படத்தை எடுத்து வைத்திருந்தேன். எங்கே போய் காட்டுறதுனு தெரியாது. கோவா திரைப்பட விழாவுக்கு அனுப்பலாம்னு தெரியும், அனுப்பினேன்.
குறும்படம் எடுப்பவர்களை நான் வேறயா பார்க்கல. நான் என்னைத்தான் பாக்குறேன். குறும்படங்கள் பண்ணிட்டு வர்றது எல்லாம் நல்ல விஷயம்தான். பெரிய கேமிரா, நடிகர்கள், துணிகள், லைட்டுகள், படப்பிடிப்பு இடங்கள் இதெல்லாம் குறும்படங்கள் எடுக்கும்போது தப்பாக இருக்கலாம். ஆனால், வெள்ளித்திரையில் வரும்போது எல்லாம் சிறப்பாக இருக்கும். எழுதிய கதை இன்னும் மெருகேறி இருக்கும். கதைதான் எப்போதுமே ஜீவன். அதைச் சரியா எழுதிட்டோம்னா போதும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment