Published : 22 Aug 2014 08:22 AM
Last Updated : 22 Aug 2014 08:22 AM
கோடம்பாக்க அகராதியில் பிரமாண்டம் என்றால் ஷங்கர். ‘ஐ’ படம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், கொஞ்சமும் சூடு குறையாத எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம். இடையில் ‘ஐ’ படத்தைப் பற்றிய எதிர்மறைத் தகவல்களும் வலம் வந்தன. ஆனால் ஐ படத்தை வெற்றிகரமாக முடித்துக் கடந்த 17-ம் தேதி தனது பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடியிருக்கிறார் ஷங்கர். விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் ரகசியம் பொத்திப் பாதுகாக்கப்பட்டுவரும் நிலையில் இந்தப் படத்தின் டீஸர் டிரைலரை கட் செய்து பார்த்திருக்கிறார் ஷங்கர். அதை நமக்குத் திரையிட்டுக் காட்டினார் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இரண்டு வருட உழைப்பை ஒரே நிமிடத்தில் கண் முன் நிறுத்துகிறார்கள்.
‘ஐ’ படத்தில் ஷங்கர் கண்டிருக்கும் கனவு, விக்ரமின் உழைப்பு ஆகியவை என்ன என்பதற்கு இந்த டீஸர் ஒன்றே போதும் எனத் தோன்றுகிறது. முதல் ஷாட்டில் விக்ரம் கயிற்றில் தொங்கிக்கொண்டு வருகிறார். படத்தின் ஸ்டில்களைக்கூட ஏன் வெளியிடாமல் ரகசியம் காத்தார் ஷங்கர் என்பதற்குப் படத்தின் டீஸரில் பதில் இருக்கிறது. விக்ரமின் ஒவ்வொரு மேக்கப்பும், இது விக்ரமா என்று கேட்க வைக்கிறது. ‘ஐ’ தன்னளவில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று முதல் டீஸரைப் பார்க்கும்போது தோன்றுகிறது.
முக்கியக் காட்சிகள்
பாலத்தின் மீது செல்லும் லாரியில் நிறையக் கட்டைகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் மேல் விக்ரம் (மேக்கப்புடன்) ஓடுகிறார். ஒவ்வொரு கட்டையாக உருண்டு விழுகிறது. அந்தக் காட்சியைப் பெரிய திரையில், ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்ப்பார்கள் என்று அடித்துச் சொல்லலாம்.
ஒரு பாலத்தில் விக்ரம் மேக்கப் இல்லாமல், சிவப்பு பனியன் அணிந்து, பைக் ஒட்டிக்கொண்டு வருகிறார். பைக்கின் முகமும், மொத்த பைக்கும் அனிமேட்ரானிக்ஸ் (Animatronics) முறையில் மாறிக்கொண்டே இருக்கிறது. அதில் விக்ரம் பார்த்துக்கொண்டே ஓட்டிக்கொண்டு வருகிறார்.
மேக்கப் எதுவும் இல்லாமல், மேல் சட்டை இல்லாமல் விக்ரம் வெயிட் தூக்கும் காட்சி, பெரிய மரக்கிளையில் விக்ரம் (மேக்கப்புடன்) கிளைகளை நகர்த்திப் பாதி முகம் காட்டுவது, பாடல் காட்சிக்காகப் பின்னணியில் கலர் கலராக உடை அணிந்தவர்களுக்கு முன்னால் விக்ரம், எமி ஜாக்சன் இருவரும் ஆடுவது மற்றும் விக்ரம் கலர் கலரான பலூன்களில் டிரம்ஸ் வாசிப்பது போன்ற காட்சி, ‘கில்லி’ படத்தில் விஜய் போட்டிருக்கும் டி-ஷர்ட் போன்று அணிந்துகொண்டு விக்ரம் (மேக்கப்புடன்) சிவப்பு நிறப் பட்டுப் புடவை அணிந்த எமியைத் தூக்கிக்கொண்டு ஓடுவது எனப் பல்வேறு காட்சிகள் நிறைந்தது டீஸர்.
ஷங்கர் - விக்ரம் கூட்டணி உழைப்பு
ஷங்கருக்கும், விக்ரமுக்கும் ‘அந்நியன்’ படத்தின் மூலம் நட்பு ஏற்பட்டது என்றால் தவறு. ஷங்கர், விக்ரம் இருவருமே ‘காதலன்’ படத்தில் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். ‘காதலன்’ படத்தில் பிரபுதேவா பாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்தது விக்ரம்தான். அப்படி ஆரம்பித்த நட்பால் ‘அந்நியன்’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். அந்தக் கூட்டணியில் உருவான ‘ஐ’ படத்தின் விக்ரமின் உழைப்பு என்பது மற்ற நடிகர்கள் யாரும் செய்யத் துணியாத ஒன்று. அவ்வளவு மேக்கப், உழைப்பு, உடலமைப்பு மாற்றம் என ஷங்கரின் கனவுக் கதையை நிஜமாக்கியவர் விக்ரம். இந்தப் படத்திற்காகச் சாப்பிடாமல் 50 கிலோ வரை உடம்பைக் குறைத்து அனைவரையும் ‘ஐ’யோ எனச் சொல்ல வைத்திருக்கிறார். ஷங்கரின் கனவு, விக்ரமின் உழைப்பு இரண்டிற்கும் காசை வண்டி வண்டியாகக் கொட்டியிருக்கிறது ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம்.
'ஐ' படத்தின் டீஸரில் இறுதி ஷாட்டில் எமி ஜாக்சன் (ஒரு அறைக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில்) 'யார் நீ' என்று கேட்டுக் கத்துவார், அப்போது விக்ரம் (மேக்கப்புடன்) கதவை மூடுவார். அந்தக் கதவின் மீது 'ஐ' என்று போட்டு, ஷங்கர் முதல் அனைத்துப் பெயர்களையும் போடுவார்கள். அதைப் பார்க்கும் யாரும் அனிச்சையாகக் கைதட்டுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment