Published : 01 Mar 2024 06:10 AM
Last Updated : 01 Mar 2024 06:10 AM

கோலிவுட் ஜங்ஷன்: ரோஷனுடன் ஜூனியர் என்.டி.ஆர் 

பாலிவுட்டில் கான் நடிகர்கள் உருவாக்கி வைத்துள்ள நட்சத்திர வெளிக்கு முற்றாக வெளியே நிற்பவர் ஹிரித்திக் ரோஷன். சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களுக்காகவே பிறந்தவர் என்று ரசிகர்கள் கொண்டாடும் ரோஷன், அந்த சூப்பர் ஹீரோ பிம்பத்திலிருந்து வெளியே வர உதவிய கதாபாத்திரம் ‘ஏஜெண்ட் கபீர்’.

தாதாவாக மாறும் ஒரு முன்னாள் ராணுவ மேஜர் கதாபாத்திரம். 2019இல் ‘வார்’ படத்துக்காக இக்கதாபாத்திரத்தை ஏற்றபோது ‘கபீரை மொழி கடந்து ரசிகர்கள் இவ்வளவு கொண்டாடுவார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை’ என்று கூறியிருந்தார். அக்கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, சல்மான் கான் நாயகனாக நடித்து 2023இல் வெளியான ‘ஃபைட்டர் 3’ படத்தில் இரண்டாம் முறை ஏஜென்ட் கபீராகத் தோன்றி, அந்தப் படத்தின் வசூல் வெற்றிக்கு வலிமை சேர்த்தார் ரோஷன்.

தற்போது ‘ஃபைட்டர் 3’ திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ஏஜெண்ட் கபீர் கதாபாத்திரத்தை மீண்டும் ஏற்றுள்ளார். அந்தப் படம் ‘வார் 2’. இந்தப் படத்தில் ரோஷனுடன் ஜுனியர் என்.டி.ஆர். இணைந்திருப்பது தென்னிந்திய ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. வை.ஆர்.எஃப். ஸ்பை யுனிவர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகும் இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கி வருகிறார்.

இப்படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹிரித்திக் ரோஷன் "ரசிகர்கள் இதயத்தில் கபீருக்கு குறிப்பிடத்தக்க இடம் கிடைத்திருக்கிறது. அவர்கள் காட்டும் அன்புக்காக மீண்டும் கபீராக மாறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என்று அறிவித்துவிட்டார்கள்.

தென்னிந்திய சினிமாவில் ஜான்வி கபூர்: தெலுங்குத் திரையுலக ரசிகர்களின் கடவுளாகக் கொண்டாடப்பட்ட என்.டி.ராமராவுடன் ஜோடி சேர்ந்து நடித்த வெற்றி நாயகி ஸ்ரீதேவி. அவருடைய மகள் ஜான்வி கபூர் தற்போது என்.டி.ராமராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆருடன் ‘தேவாரா’ என்கிற தெலுங்குப் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.

தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாவது பற்றி ஜான்வி கபூர் கூறும்போது: “ஒரு மிகப்பெரிய படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தின் மூலம் நான் எனது வேர்களை நெருங்கியிருக்கிறேன். மேலும் இந்தப் படத்துக்காகத் தெலுங்கு மொழியையும் கற்று வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அவருடைய வேர் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதை உறுதிசெய்யும் விதமாக அவர், அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் ‘கர்ணா’வில் நடிக்க இருப்பதாக அவருடைய அப்பா போனி கபூர் கூறி யிருக்கிறார்.

அமெரிக்கக் கனவு! - பல படங்களில் குணச் சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்திருக்கும் சோமன் காஸ்ட்ரோ புதுமுகங் களை வைத்து ‘எக்ஸ்.ஒய்.இசட்’ என்கிற தனது இரண்டாவது படத்தை இயக்கியிருக்கிறார். இதில் மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வென்ற வெங்கட் நாயகனாகவும் கோவைத் தமிழ்ப் பெண்ணான ஷர்வினி நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். ஒரு கிராமத்து ஏழை விவசாயி தனது தகுதிக்கு மீறி மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்து ஆளாக்குகிறார்.

மகன் பெங்களூருவில் மென்பொருள் துறையில் பெரிய பொறுப்பில் இருக்கிறான். அவனுக்கு அமெரிக்கா சென்று ‘ஆன்சைட்’ முறையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்பாவிடம் சொல்லிவிட்டு அமெரிக்கா புறப்படக் காதலியுடன் கிராமத்துக்கு வரும் மகன், வந்த இடத்தில் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வதுதான் கதை.

அப்பா - மகன் - காதலி - ஊர்க்காரர்கள் இடையிலான சங்கிலிப் பின்னலாக உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்து படமாக்கியிருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர். இப்படம், கொல்கத்தா, புனே, மும்பை, அவுரங்காபாத் ஆகிய சர்வதேச இந்தியப் படவிழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

2 நாளில் 2 மில்லியன்! - சொந்த ஊர்க்காரர்களால் அடுதடுத்து பலமுறை அவமானப்பட்ட நிலையில் கிராமத்தில் இருக்க முடியாமல் இரண்டு இளைஞர்கள் பெங்களூரூவுக்குச் செல்கிறார்கள். அங்கே ஒரு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தைத் தொடங்கி அதில் வெற்றிபெறுவதுதான் அவர்களது கனவு.

அதில், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் ‘கோடியில் இருவர்’ வெப் சீரிஸின் கதை. ஐடி ஊழியர்கள், ஸ்டார்ட் அப் தொடங்க ஆசைப்படும் இன்றைய தலைமுறையினர், இளையதலைமுறைப் பட்டத்தாரிகள் தங்கள் வாழ்க்கையுடன் எளிதில் தொடர்புப்படுத்திக்கொள்ளும் வகையில் நகைச்சுவை கலந்து இத்தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார் பல ‘JordIndian’ வீடியோக்களை இயக்கிய ஷாகித் ஆனந்த்.

முதன்மைக் கதாபாத்திரங்களில், ‘பரிதாபங்கள்’ புகழ் கோபி - சுதாகர் இருவரும் கிராமத்துப் பட்டதாரிகளாக நடித்திருக்கிறார்கள். பிப்ரவரி 25 அன்று இந்த சீரீஸின் முதல் எபிசோட் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வெளியாகி எக்குத்தப்பாக ஹிட் அடித்தி ருக்கிறது.

இரண்டு நாள்களில் 20 லட்சம் பேர் பார்த்திருக்கி றார்கள். இது வரையிலும் பெரிய ஓடிடி தளங்கள் மட்டுமே முயன்று வரும் தரத்தில், முதல் முறையாக யூடியூபுக் காக உருவாகி, வரவேற்றைப் பெற்றிருக்கிறது இத்தொடர்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x