Published : 02 Feb 2018 10:57 AM
Last Updated : 02 Feb 2018 10:57 AM
உ
ளவாளிகள் புழங்கும் உலகம் மிகவும் மோசமானது. உளவாளி, பெண்ணாக அமையும்போது அந்த உலகம் இன்னும் இருள் சேர்ந்திருக்கும். தனிப்பட்ட நெருக்கடியால் உளவாளியாக உருவெடுக்கும் ஒரு பெண், இரு நாட்டு உளவு அமைப்புகள் இடையே மாட்டிக்கொண்டு மீள முயலும் திரில்லர் திரைப்படமே ‘ரெட் ஸ்பாரோ’. மார்ச் 2 அன்று இப்படம் வெளியாக உள்ளது.
துடிப்பான இளம்பெண் தன் தாயின் உடல்நிலை காரணமாக ரஷ்யாவின் ரகசிய உளவு அமைப்பில் சேர வேண்டியதாகிறது. அங்கே பயிற்சிபெறும் பெண் ஒற்றர்களுக்கு, முக்கிய ஆயுதமாக அவர்களின் இளமையை முன்னிறுத்தியும் எதிரிகளை வீழ்த்தக் கற்றுத் தருகிறார்கள். சிறப்பான உளவாளியாகத் தேறி சாகசங்களை ஒவ்வொன்றாக அப்பெண் நிகழ்த்தும்போது தான் புதைகுழியில் சிக்கியிருப்பது தெரிய வருகிறது. சுதாரித்து அவள் விலக முற்பட்டாலும் உளவு அமைப்பு அவளை விடுவதாக இல்லை.
இந்நிலையில் அவள் வீழ்த்தக் கிளம்பிய அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்பின் டபுள் ஏஜெண்ட் ஒருவரிடமிருந்தே உதவிக்கரம் நீளுகிறது. மறுபக்கம் பணிகொடுத்த உளவு நிறுவனம் அவளை வேட்டையாடத் துரத்துகிறது. இருதரப்புக்கும் இடையே அந்தப் பெண் உளவாளி தன்னைக் தக்கவைத்துக்கொள்ளத் தொடரும் சாகசங்களே மீதிக் கதை.
சி.ஐ.ஏ நிறுவனத்துக்காகப் பணியாற்றிய ஜேசன் மாத்யூஸ் என்பவர் எழுதிய இதே தலைப்பிலான நாவலைத் தழுவி ‘ரெட் ஸ்பாரோ’ திரைப்படம் உருவாகி உள்ளது. படத்தின் பிரதான பாத்திரமான ரஷ்யப் பெண் உளவாளியாக ஜெனிஃபர் லாரன்ஸ் நடித்துள்ளார். உடன் ஜோ எட்கர்டன் (Joel Edgerton), சார்லட் ராம்ப்லிங், மேரி லூயிஸ் பார்கர் உள்ளிட்டோர் நடிக்க, ஃபிரான்சிஸ் லாரன்ஸ் இயக்கியுள்ள இப்படம், போகிறபோக்கில் வல்லரசு நடத்திவரும் உளவு அமைப்புகளின் உண்மை முகத்தையும் தோலுரிக்கிறது.
இப்படத்தின் ட்ரைலர் வெளியானதைத் தொடர்ந்து, மார்வெல் காமிக்ஸ் படைப்பான ‘பிளாக் விடோ’ சாகசக் கதாபாத்திரத்தை ‘ரெட் ஸ்பாரோ’ கையாண்டிருப்பதாக எழுந்த எதிர்மறை விமர்சனங்களே படத்துக்கு விளம்பரமாக அமைந்துவிட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT