Published : 23 Feb 2018 10:50 AM
Last Updated : 23 Feb 2018 10:50 AM
அ
ந்தத் தெலுங்குப் படத்தின் டிரெயிலரில் ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தப்படும். இறுதியாக நாயகன் யாரெனக் கேள்வி எழுப்பப்படும். கதையே ஹீரோ என ஒரு வசனம் ஒலிக்கும். அதைக் கேட்டவுடன், ஆ என்ற அதிர்ச்சி வெளிப்படும். அப்போது அதுவே படத்தின் தலைப்பு என்று சொல்லப்படும்.
டிரெயிலரில் சொல்லப்பட்டது போல் கதை ஹீரோ அல்ல. ஆனால், திரைக்கதைதான் ஹீரோ. குழந்தைப் பருவத்தில் பாலியல் துன்புறுத்தல் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஆண்களை வெறுக்கிறாள். அவளைப் பன்முக ஆளுமைக் கோளாறு நோய் தாக்குகிறது. அந்த நோயின் தூண்டுதலால் அவளுக்கு ஏற்படும் மனக்குழப்பமும் அதனால் அவள் மேற்கொள்ளும் முடிவுமே ‘ஆ’ என்னும் இந்தப் படத்தின் மையம்.
இந்தக் கதையை நேரடியாகச் சொல்லாமல், துண்டு துண்டாக, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொல்லிச் செல்கிறார் புதிய இயக்குநர் பிரசாந்த் வர்மா. படத்தின் தொடக்கத்தில் ஓரிளம்பெண் தன் பெற்றோருக்குத் தன் காதலைத் தெரியப்படுத்தி தன் இணையை அறிமுகப்படுத்த இருக்கிறாள். ஆச்சாரமான அந்தப் பெற்றோர் இணையின் சாதி, படிப்பு, அந்தஸ்து, சொத்துபத்து விவரம் போன்றவற்றை ஓர் இந்திய மனோபாவத்தில் வினவுகிறார்கள்.
அந்தப் பெண்ணும் பொறுமையாகப் பதில் சொல்கிறாள். இறுதியாக அவளுடைய இணை வந்து சேரும்போது பெற்றோருக்கு அதிர்ச்சி ‘ஆ’ என வாய்பிளக்கிறார்கள். ஏனெனில், வந்து நிற்பதும் ஒரு பெண். அவளைத் தான் தன் மகள் காதலிக்கிறாள். இருவரும் மணமுடிக்க இருக்கிறார்கள் என்பதை அந்த இந்திய மனங்கள் ஏற்க முடியாமல் தவிக்கின்றன.
அரைகுறையான சமையல் வேலையைத் தெரிந்துவைத்துக்கொண்டு யூடியூபில் சமையல் நிகழ்ச்சிகளைப் பார்த்து சமாளிக்கும் ஒரு சமையல்காரன். அவன் ஒரு ரெஸ்டாரெண்டுக்கு வேலை தேடி வருகிறான். அங்கே அவனுக்கு ஒரு மீனும் ஒரு போன்சாய் மரமும் உதவுகின்றன. அவை அவனிடம் உரையாடுகின்றன. அவனும் அவற்றுடன் அந்நியோன்யமாக உரையாடுகிறான். ஒரு கட்டத்தில் தனது வேலைக்காகத் தனக்கு சமையல் சொல்லித் தந்த மீனையே கொல்ல வேண்டிய சூழல் வருகிறது. மீன் ‘ஆ’ என அதிர்ச்சியாகப் பார்க்கிறது.
செக்யூரிட்டியாக வேலைபார்க்கும், ஒரு டைம் மிஷினை உருவாக்கிட முயலும் விஞ்ஞான ஆர்வம் கொண்ட இளைஞன், சிறு குழந்தையிடம் மமதையுடன் நடந்துகொள்ளும் மந்திரவாதி, போதைக்கு ஆளான இளம்பெண், அவளை வைத்து ஒரு கொள்ளையைத் திட்டமிடும் காதலன். தனது பிறந்தநாளன்று தன்னையும் இன்னும் சிலரையும் கொன்றுவிட நினைக்கும் ஓர் இளம்பெண். இப்படிச் சில கதாபாத்திரங்களும் சில அதிர்ச்சிகளுமாக ஆ நகர்கிறது.
கதை என்னும் ஒன்று தேவையில்லை திரைக்கதையை மட்டும் வித்தியாசமாக நகர்த்தினால் போதும் என்னும் புதுயுக இயக்குநர்களின் பாணியையே இந்தப் படத்தில் கையாண்டிருக்கிறார் இயக்குநர். ஆனால், திரைக்கதையில் புதுமை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. நன்கு நுனிப்புல் மேய்ந்த மேடு, மரத்தின் அடியில் வாகாய் அமர்ந்து அசைபோடுவது போல் படம் நகர்கிறது.
பின் நவீனத்துவப் படம் என்னும் மாயையின் சாயை படத்தில் ததும்புகிறது. குழந்தைப் பருவ பாலியல் துன்புறுத்தல், இயற்கை நேசம், மரணம், பன்முக ஆளுமைக் கோளாறு எனப் பல விஷயங்களை மிகவும் அலட்டலாகப் படம் கையாண்டிருக்கிறது. பேய்ப்படம், திகில் படம், நகைச்சுவைப் படம், அனிமேஷன் படம், சயன்ஸ் பிக்ஷன் படம் போன்றவற்றைத் தனித் தனியே எடுக்காது ஒரே படத்தில் எடுத்திருப்பது புதுமையா?இதை மல்டி ஜானர் என வகைப்படுத்திப் பார்வையாளர்கள் தலையில் போடுகிறார்கள்.
உலக மொழிகளிலும் தமிழிலும் ‘எ பியூட்டில்ஃபுல் மைண்ட்’, ‘ஷட்டர் ஐலண்ட்’, ‘ஆளவந்தான்’, ‘குடைக்குள் மழை’போன்ற பல படங்களைப் பார்த்துவிட்டோம். தமிழ்ப் பார்வையாளர்களுக்கு இந்தப் படம் எந்த வகையிலும் புதுமையல்ல. இந்தப் படத்தைவிட இந்தப் படத்துக்கு ஆதரவாகப் பெருவாரியாக வந்துவிழும் விமர்சனங்களே ஆ என வாய்பிளக்க வைக்கின்றன. மற்றபடி இது பொழுதுபோக்கு நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சாதாரணப்படமே,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT