Published : 23 Feb 2018 10:46 AM
Last Updated : 23 Feb 2018 10:46 AM

திரைப்பார்வை: அதையும் தாண்டி புனிதமானது! - தி ஷேப் ஆஃப் வாட்டர் (ஆங்கிலம்)

வளையை முத்தமிட்ட இளவரசி கதை போல, பெரும்பாலான கலாச்சாரங்களில் தனித்துவமான தேவதைக் கதைகள் நிறைய இருக்கின்றன. சிறுகதை எனும் வடிவத்துக்கு பிரெஞ்சு மொழி எப்படி முன்னோடியாக இருக்கிறதோ, அதுபோல, இப்படியான தேவதைக் கதைகளைத் திரையில் மொழிபெயர்ப்பதற்கும் மேற்கில், பிரெஞ்சு மொழியே முதன்மையானதாக இருந்திருக்கிறது.

‘லா பெல் எ லா பெத்’ (பியூட்டி அண்ட் தி பீஸ்ட்) என்று பிரெஞ்சில் புகழ்மிக்க ஒரு தேவதைக் கதை இருக்கிறது. பெண் ஒருத்திக்கும் அவள் தந்தையைச் சிறைபிடித்து வைத்திருக்கும் ‘மனிதன் பாதி மிருகம் பாதி’யாக உள்ள ஜந்துவுக்கும் இடையேயான காதலே இதன் கதை. 1946-ம் ஆண்டு திரைப்படமாக வெளியாகி, இன்று அது ‘க்ளாசிக்’ அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.

அதற்குப் பின், ‘தேவதை, அவளை நேசிக்கும் மனிதனும் அல்லாத மிருகமும் அல்லாத ஒரு ஜீவன்’ என்ற ஃபார்முலாவை வைத்துக்கொண்டு ஹாலிவுட்டில் பல படங்கள் வந்துவிட்டன. வெற்றியடைந்த ஒரு ஃபார்முலாவை ஒரே இயக்குநரே தொடர்ந்து பயன்படுத்தினால், இரண்டு அல்லது மூன்று படங்களுக்கு மேல் ரசிகர்களுக்குச் சலிப்பு தட்டிவிடும். இந்த இடத்தில்தான் மெக்சிகன் இயக்குநர் கில்லர்மோ டெல் டோரோ தனித்து நிற்கிறார்.

கட்டிடக் கலையும் திகிலும்

கிழக்கு ஜெர்மானியர்களின் இடைக் காலத்தில் ‘கொதிக்’ (கூர்மாடச் சிற்ப பாணி) எனும் கட்டிடக் கலை வகை மிகவும் பிரபலமானதாக இருந்தது. அந்தக் கட்டிடங்களில் நடப்பது போன்ற பேய்க் கதைகளைப் பலர் அந்நாட்களில் எழுதி வந்தனர். காலப்போக்கில் இந்தக் கதைகள் ‘கொதிக் ஹாரர்’ என்ற தனித்துவமான ஒரு இலக்கிய பாணியாகவே கருதப்பட்டன. ‘ஹாரி பாட்டர்’ நாவல்கள்கூட ஒரு வகையில் ‘கொதிக் ஹாரர்’ கதைகள்தான். இலக்கியம் போலவே இந்த பாணி சினிமாவிலும் பின்பற்றப்படுகிறது. முக்கியமாக ஸ்பானிஷ் மொழிப் படங்களில் இது சிலாகிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது.

கில்லர்மோ டெல் டோரோ அத்தகைய ‘கொதிக் ஹாரர்’ படங்கள் எடுப்பதில் கில்லாடி. ‘தி டெவில்ஸ் பேக்போன்’ (2001), ‘பான்ஸ் லாபிரிந்த்’ (2006) போன்ற இவரின் முந்தைய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. அதேசமயம் ‘பிளேட் 2’ (2002), ‘ஹெல்பாய்’ (2004) போன்ற அமெரிக்க ஹாரர் வகைப் படங்களையும் எடுப்பதில் வெற்றிகரமான இயக்குநராக இருப்பவர். தற்சமயம் 90-வது ஆஸ்கர் விருதுகளுக்கு 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப் பட்டிருக்கும் ‘தி ஷேப் ஆஃப் வாட்டர்’ எனும் திரைப்படத்தில், ‘கொதிக்’ மற்றும் ‘அமெரிக்க ஹாரர்’ என இரண்டு கூறுகளையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார்.

அறிவியல் பாதி… அன்பு மீதி…

படத்தின் நாயகி எலிசா (சாலி ஹாக்கின்ஸ்) வாய் பேச இயலாதவள். ஆனால் காது கேட்கும். நதிக்கரையோரம் கழுத்தில் மூன்று நகக் கீறல் தழும்புகளுடன் கண்டெடுக்கப்பட்டவள் என்று அவள் நமக்கு அறிமுகம் செய்யப் படுகிறாள். அது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலம். அமெரிக்காவில் உள்ள அரசுக்குச் சொந்தமான ரகசிய ஆய்வகம் ஒன்றில் துப்புரவுப் பணியாளராக அவள் பணியாற்றுகிறாள்.

ஒருநாள் அங்கு அமேசான் காட்டிலிருந்து வித்தியாசமான ஜந்து ஒன்று ஆய்வுக்காகக் கொண்டு வரப்படுகிறது. நீரிலும் நிலத்திலும் வசிக்கக்கூடிய, மனிதத் தோற்றம் கொண்ட அந்த ஜீவன் மீது எலிசா அனுதாபம் காட்டுகிறாள். சைகை மொழி மூலமாக அதனுடன் தொடர்புகொள்ளும் எலிசாவுக்கு, நாளடைவில் அந்த ஜீவன் மீது காதல் ஏற்படுகிறது. இதற்கிடையே, அந்த ஆய்வகம், அந்த ஜீவனைக் கொன்று, அதன் ஒவ்வொரு பாகங்களையும் தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்த முடிவெடுக்கிறது.

அங்கு பணியாற்றும் டாக்டர் ஹாஃப்ஸ் டெட்லர் எனும் ரஷ்ய உளவாளி, அந்த ஜீவனை இன்னும் சில காலம் உயிருடன் வைத்து ஆய்வு செய்ய நினைக்கிறார். அந்த ஜீவனைப் பற்றி ஒரு கட்டத்தில் தனது மேலிடத்துக்கு ஹாஃப்ஸ் டெட்லர் தகவல் தர, அதைக் கொன்றுவிடுமாறு அவருக்குக் கட்டளையிடப்படுகிறது.

இந்தச் சிக்கலிலிருந்து அந்த ஜீவனை எலிசா காப்பாற்ற நினைக்கிறாள். அவளால் அது முடிந்ததா என்பது மீதிக் கதை. ஒரு பக்காவான சயின்ஸ் ஃபிக்‌ஷனுக்குள் இவ்வளவு ஒரு அழகான காதலைச் சொல்ல முடியுமா என்று ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குநர். அந்த ஜீவன் மீது தனக்கு இருக்கும் நேசம் எத்தகையது என்பது பற்றி தனது பக்கத்து வீட்டு நண்பரிடம் எலிசா விளக்கும் காட்சியும், தன்னுடைய காதல் எத்தகையது தெரியுமா என்று அந்த ஜீவனிடமே எலிசா விளக்கும் காட்சியும்… கவிதை!

சின்ன விஷயங்களின் அழகு

எப்போதும் உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கும் திரையரங்கின் மேலே வாய் பேச முடியாத எலிசாவின் வீடு, காற்றில் வயலின் வாசிப்பது போலக் காட்டி அந்த ஜீவனுக்கு ‘இசை’யை எலிசா அறிமுகம் செய்யும் காட்சி, ‘நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுமில்லை. நமக்குத் தேவை, அமெரிக்கர்கள் எதுவும் கற்றுக்கொள்ளக் கூடாது’ என்று ஹாஃப்ஸ் டெட்லரின் ரஷ்ய உயரதிகாரி சொல்லும் வசனம், படத்தின் இறுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹக்கிம் சனாய் எனும் பெர்சியக் கவிஞரின் பாடல் என சின்னச் சின்ன விஷயங்கள் மூலம் படத்தை அவ்வளவு சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கிறார் கில்லர்மோ டெல் டோரோ.

‘தான் இருக்கும் பாத்திரம் எந்த வடிவமோ, அந்த வடிவத்தை நீர் கொள்ளும்’ என்பது இயற்பியல் விதி. காதலும் அப்படித்தானே… மனிதர் மீது கொண்டால் அது காதல். மிருகம் மீது கொண்டால் அது நேசம். இரண்டும் அல்லாத ஒன்றின் மீது கொண்டால் அது ‘தி ஷேப் ஆஃப் வாட்டர்!’. ‘சயின்ஸ் ஃபிக்‌ஷன்’ பிடிக்காதவர்கள் புரிந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x