Published : 16 Feb 2024 06:12 AM
Last Updated : 16 Feb 2024 06:12 AM
காதல், குடும்பக் கதைகளில் அதிகமும் நடித்து வந்த ஸ்ரீ காந்த், தற்போது சஸ்பென்ஸ் த்ரில்லர்களில் நடித்து வருகிறார். லாஸ் ஏஞ்சலஸ் சர்வதேசப் படவிழாவில் நடத்தப் பட்ட திரைக்கதைப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றவர் ராஜ் தேவ். அவரது இயக்கத்தில் ஸ்ரீ காந்த் நடித்திருக்கும் புதிய படம் ‘சத்தம் இன்றி முத்தம் தா’. சஸ்பென்ஸ் ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகியிருக்கும் படம் குறித்து இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
எதற்காக இப்படியொரு தலைப்பு? - கதையில் வரும் ஒரு முக்கியமான காட்சி, ரசிகர்களைக் கலங்க வைப்பதுடன் இந்தத் தலைப்புக்கும் நியாயம் சேர்க்கும். தலைப்பை நம்பி திரையரங்கின் உள்ளே வந்து ரசிகர்கள் உட்கார்ந்ததும் முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு கதை பதைபதைக்க வைக்கும். படத்தின் கதை ஒரு சாலை விபத்திலிருந்து தொடங்கும். சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதுபோல் ஒரு கொடுமை எதுவுமில்லை.
இறந்தவரின் குடும்பத்தை அது நிலைகுலையச் செய்துவிடுகிறது. சாலை விபத்தில் சிக்கி நினைவுகளை இழப்பது அதைவிடக் கொடுமை யானது. இந்தியாவில் ஆண்டுதோறும் காவல் துறை வழியாகப் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். இது ஒவ்வோர் ஆண்டும் 11 விழுக்காடு அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.
விபத்து பற்றிய செய்தியைப் படிக்கும்போதெல்லாம், விபத்துக்கு உள்ளானவரின் பாலினம், வயது, பார்த்து வந்த வேலை, எப்படி விபத்து நடந்தது, விபத்துக்கு யார் காரணம் என்பதையெல்லாம் கூர்ந்து வாசிப்பேன். கொலை முயற்சி செய்யும் நோக்குடன் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் விபத்துகளும் உண்டு என்பதையும் விபத்தில் ஒருவர் தன் நினைவுகளை இழந்து, சிகிச்சை முடிந்து சொந்த வீட்டாருடன் போக மறுத்ததையும் படித்தபோது, இந்தக் கதைக்கான கரு பிறந்தது.
என்ன கதை? - பதின்ம வயதின் இறுதியில் காதலில் விழுந்த நாயகனும் நாயகியும் எதிர்பாராத சூழ்நிலையில் பிரிந்துவிடுகிறார்கள். பிறகு 10 ஆண்டுகளுக்குப் பிறகு சாலை விபத்தில் சிக்கிக் கிடக்கும் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான் நாயகன்.
அப்பெண் அவனுடைய பதின்மப் பிராயத்தின் காதலி. உடனடியாக அவளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றுகிறான். அவள் கண் விழிக்கும்போது, தாம் எதிரே இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவாள் என்று நினைக்கிறான். அவளும் கண் விழித்தாள். முடிந்த உறவு தொடங்கும் என நினைத்த இடத்திலிருந்து அடுத் தடுத்து வரும் திருப்பங்கள் என்ன என்பதுதான் கதை.
ஸ்ரீகாந்த்துக்காகவே இந்தக் கதையை எழுதினீர்களா? - ஆமாம்! வழக்கமான காதல் சட்டகத்திலிருந்து அவரைப் பிரித்தெடுத்து, வேறொரு களத்தில் அவரை நிற்காமல் ஓட விட்டிருக்கிறேன். தனது முன்னாள் காதலிக்குத் திருமணம் ஆகிவிட்டதா இல்லையா, அவளுடைய குடும்பத்தினர் எப்படிப்பட்டவர்கள், அவள் சாலை விபத்தில் சிக்கியது எதிர்பாராத ஒன்றுதானா என்று நூல் பிடித்தபடி நாயகன் செய்யும் புலன் விசாரணையும் தன்னைப் பற்றிய நினைவுகளைக் காதலிக்கு ‘ஃபீட்’ செய்வதால் வரும் சிக்கல்களை அவன் எதிர்கொள்வதும் இரண்டு அடுக்குகளாக திரைக்கதையை விரட்டிச் செல்லும்.
படக்குழு பற்றி.. பிரியங்கா திம்மேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். ஹரிஷ் பேரடி முக்கியமான கதாபாத்திரத்தில் வரு கிறார். ‘திரௌபதி’, ‘ருத்ரதாண்டவம்’ படங்களின் இசையமைப்பாளர் ஜுபின் இசையமைத்துள்ளார். யுவராஜ்.எம். ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தில் இசை, ஆக்ஷன் இரண்டுக்குமே முக்கியமான பங்கிருக் கிறது. இப்படத்தின் ஆக்ஷன் டைரக்டராக 'மிராக்கிள்' மைக்கேல் பணியாற்றியிருக்கிறார். செலிபிரைட் புரொடக் ஷன்ஸ் சார்பில் கார்த்திகேயன். எஸ். படத்தைத் தயாரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT