Published : 18 Feb 2018 02:48 AM
Last Updated : 18 Feb 2018 02:48 AM
அ
ப்பா பெயரும், தன் வயதும் கூட தெரியாத விடலைப் பையன் ஜி.வி.பிரகாஷ். அப்பா, அம்மா இல்லாததால் தாத்தாவின் பராமரிப்பில் வளரும் விடலைப் பருவப் பெண் இவானா. அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்படுகிறார் ஜி.வி.பிரகாஷ். தன் விடுப்பையும் ரத்து செய்துவிட்டு இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை தானே முன்வந்து ஏற்கிறார் நேர்மைக்கும், துணிச்சலுக்கும் பெயர்போன காவல் உதவி ஆணையர் நாச்சியார் (ஜோதிகா). இவானாவை விசாரிக்கும்போது, அவள் பலாத்காரத்துக்கு நிர்ப்பந்திக்கப்படவில்லை; ஜி.வி.பிரகாஷுடன் அவளுக்கு இனம்புரியாத காதல் மலர்ந்திருக்கிறது என தெரியவருகிறது. இதனால், நிறைமாத கர்ப்பிணியான இவானா மீது இரக்கம் கொண்டு தன் வீட்டிலேயே அடைக்கலம் தருகிறார் ஜோதிகா. விடலைப் பெண்ணையும், அவள் பெற்றெடுக்கும் குழந்தையையும் பராமரித்தபடியே, மர்மத்துக்கு விடை தேட புறப்படுகிறார் ஜோதிகா. இவானாவுக்குப் பிறக்கும் குழந்தையை மையமாகக் கொண்டு, படம் வேறு கட்டத்துக்குச் செல்கிறது.
பொதுவாக, செய்நேர்த்தி, குரூரம், நகைச்சுவை மூன்றும் கலந்ததுதான் பாலா படம். முதல்முறையாக, ஜோதிகா ரசிகர்களின் ‘நலன்’ கருதி குரூரத்தை குறைத்திருக்கிறார். காதல் காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். வீடுகள், தெருவோரங்களில் வேலை செய்து பிழைக்கும் சிறுவர்களின் வாழ்க்கையை நன்கு காட்டியுள்ளார். பத்து ரூபாய் இவர்களுக்கு எத்தனை மகத்தானது என்பது போன்ற காட்சிகள் நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
இதுவரை ஒரே மாதிரியாக ஜாலி பையன் பாத்திரங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷுக்கு, இது வேறுமாதிரி படம். ஏழ்மையால் படுகிற அவமானம், காதல், குழந்தையைப் பார்க்க பரிதவிப்பது என்று நடிப்பில் நல்ல முன்னேற்றம். அவரது ரசிகர்களுக்காக, கொஞ்சம் ‘அந்த’ மாதிரி வசனங்களும் இருக்கின்றன.
இவானாவின் குறும்புத்தனமான பேச்சும், சிரிப்பும், கண்ணீர் மல்கும் தருணங்களும் நம் மனதில் ஒட்டிக்கொள்கின்றன. பொறுப்பான வேலைக்காரப் பெண்ணாக, குறும்பான காதலியாக, கண்களில் சோர்வோடு வலம் வரும் நிறைமாத கர்ப்பிணியாக, குழந்தையின் தாயாக நடிப்பில் செழுமை. தமிழ் சினிமாவுக்கு நல்வரவு.
ஆனால், இவர்கள் இருவரும் பேசும் மெட்ராஸ் பாஷைதான் மனோரமா காலத்தோடு போச்சு!
ஜோதிகாவின் டாப் 10 படங்களில் இந்தப் படத்துக்கும் இடம் உண்டு. ‘அடித்துவிட்டுத்தான் விசாரிப்பேன்’ என்று சொல்லும் காவல் ஆணையராக, உடல்மொழி, குரல், பார்வை எல்லாவற்றிலும் மிரட்டுகிறார். அநியாயத்தைக் கண்டு பொங்கினாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு தாயின் நிலையில் இருந்து பராமரிப்பது, அவளது குழந்தையை தானே குளிப்பாட்டுவது என்று நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
இன்ஸ்பெக்டர் ஃபெரோஸ்கான் கதாபாத்திரம் சுவாரசியம். அதில் மிக நேர்த்தியான நடிப்பை ராக்லைன் வெங்கடேஷ் வெளிப்படுத்தியிருக் கிறார்.
பாலா படத்துக்கான இசையை எப்போதும்போல வழங்கியிருக்கிறார் இளையராஜா. பின்னணி இசையில் நெகிழவும், அதிரவும் வைக்கிறார். படத்தில் ஒரே ஒரு பாடல்தான். அதுவும் இனிமை. சென்னையின் மிகப் பெரிய குப்பைக் கிடங்கையே அழகாகக் காட்டியிருக்கிறது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு.
வெளியில் கரடுமுரடாகத் தோன்றும் மனிதர்களிடம்தான் உண்மையான மனிதநேயம் குடிகொண்டிருக்கும் என்பதை ’பிதாமகன்’, ’நான் கடவுள்’ என தனது எல்லா படங்களிலும் காட்டுவது பாலாவின் பாணி. அதேபோன்று நாச்சியாரையும் புனைவதாக நினைத்து போலீஸ் அராஜகத்தை, அதிகார துஷ்பிரயோகத்தை ஆராதிக்கும் கதாபாத்திரத்தைப் படைத்திருக்கிறார். போதாததற்கு, ‘மனித உரிமை அமைப்புகளுக்குத் தெரியறதுக்குள்ள உங்களை டிரான்ஸ்ஃபர் பண்றோம். சாதி வெறியில, பெத்த பிள்ளைகளையே ஆணவக் கொலை செய்ற ஊருக்குப் போங்க.. அங்க உங்களோட கோவத்தைக் காட்டுங்க’ என்பது போன்ற வசனங்கள் அபத்தத்தின் உச்சம். அதிகார வர்க்கத்தையே வளர்க் கும் சக்திபடைத்த பெரும் பணக்காரரின் விஷயத்தில் அத்தனை கொடூரமாக நடந்துகொண்ட ஒரு போலீஸ் அதிகாரியை, இன்றைய அதிகார நடைமுறை இத்தனை சுலபமாக தப்பவிடுமா என்ன?
பேசவேண்டிய இடங்களில் எல்லாம் அடித்துத் துவைக்கிறார் ஜோதிகா. ஓடவிட்டு அடிப்பது, தொங்கவிட்டு அடிப்பது என ‘சாமி’, ‘சிங்கம்’ வரிசை படங்களை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. கூடவே, ஒட்டுமொத்த படத்துக்கும் அச்சாணியாக இருக்க வேண்டிய மர்ம முடிச்சு அத்தனை வலுவாக இல்லை.
பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக ஜோதிகா அளிக்கும் நீதி பரிபாலனத்தில் வழக்கமான பாலா வந்துவிடுகிறார். பிராமண பாஷையில் எகத்தாளம் பேசும் நீதிமன்றக் காட்சியும் வழக்கமான பாலா ஸ்டைலே!
பாலாவின் பாணியில் இருந்து இன்றைய தமிழ் சினிமா இயல்பாகவே கொஞ்ச தூரம் நகர்ந்துதான் வந்துவிட்டது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT