Last Updated : 09 Feb, 2018 11:28 AM

 

Published : 09 Feb 2018 11:28 AM
Last Updated : 09 Feb 2018 11:28 AM

நொறுங்க இன்னொரு இதயம் வேண்டுமா?

பிப்ரவரி 14: காதலர் தினம்

செல்போன் சார்ஜரைத் தவிர வேறு எதனாலும் பிரித்துவிட முடியாதது நவீன காலத்தின் காதல். அதையும் நூற்றாண்டைத் தாண்டிய இந்திய சினிமாதான் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. ஆண்களும் பெண்களும் இயல்பாகச் சந்திக்கும் இடங்கள், சூழ்நிலைகள் ஆகியன, இந்தியாவின் பெருநகரங்களைத் தவிர சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் இன்னமும் சந்தேகத்துடன் பார்க்கப்படும் சூழ்நிலையே உள்ளது. சாதி தாண்டிய காதலைக் கண்டிக்கும் இந்திய வீடுகளில் விரகமும் தாபமும் தொனிக்கும் பாடல்கள் வழியாகக் காதலை 24 மணி நேரமும் கனவு காண்பது ஒரு முரண்பாடுதான்.

90 சதவீதம் இன்னும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களே. ஆனாலும் உயர்கல்வி, பொருளாதார விடுதலையை நோக்கி இரண்டு தலைமுறைகளை நகரங்களை நோக்கிச் செல்ல ஊக்குவித்ததில் சினிமாக் காதலுக்குப் பங்கில்லை என்று சமூகவியலாளர்கள் சொல்லிவிட முடியுமா? தமிழகத்தில் கணிப்பொறி அறிவியல் பிரபலமானதற்கு ரோஜாவும் அரவிந்த் சுவாமியும் எழுத்தாளர் சுஜாதாவும் காரணமில்லை என்று சொல்லிவிட முடியுமா?

9chgow_Dilip kumarright

அடிக்கடி கொண்டாட்டங்களோ வண்ணமயமான திருப்பங்களோ ஏற்றங்களோ இல்லாத ஒரு இந்தியனின், தமிழனின் சராசரி வாழ்க்கையில் சினிமா காதல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை உணர்த்த எப்போதும் எங்கேயும் ஒலிக்கும் சினிமாப் பாடல்களே போதுமானவை.

கே. வி. மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன், வி. குமார், இளையராஜாவிலிருந்து ஏ. ஆர். ரஹ்மான் வரையான இசைக் கலைஞர்கள் மூன்று தலைமுறையினரின் நினைவுகளையும் ஏக்கங்களையும் கனவுகளையும் நிறைத்துக்கொண்டிருக்கின்றனர்.

‘காவேரியோரம் கதை சொன்ன பாடல்’-ம்’, ‘கனவே கனவே கரைவதேனோ’வும் முயங்குமாறு ரிமோட் சொடுக்கில் காலத்தையே மாற்றிவிட முடியும். வலியும் பிரிவும் ஏக்கமும்தான் காதல் தரும் காலம்கடந்த அனுபவம் என்பதை இந்திய சினிமா தொடர்ந்து வேறு வேறு வகையில் நம் பார்வையாளர்களுக்கு நினைவுறுத்திக்கொண்டே இருக்கிறது.

‘தேவதாஸ்’ தொடங்கி ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ வரை இந்திய இதயங்களை சுக்கலாக நொறுக்கியெடுத்துக் கொண்டிருக்கிறது காதல்.

இத்தனை தாக்கத்தைச் செய்த வெள்ளித்திரைக்குப் பின்னாலும் இதயம் நொறுங்கியவர்கள், நொறுக்கப்பட்டவர்கள், இதயத்தால் இணைந்த ஜோடிகள் உண்டு. அவர்களது காதலின் வேதியியலும்தான் இந்திய சினிமாவை உயிரியலாக மாற்றியுள்ளது. துடிப்புமிக்க அந்த இதயங்களில் சில...

9CHGOW_BOLLYWOOD_LOVEவீழ்ந்த காதல் பேரரசு

இந்திய சினிமா அணிந்த மகுடங்களில் ஒன்று ‘முகல் ஏ ஆஸம்’. பத்தாண்டுகளாகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம். அக்பரின் மகன் சலீமாக நடித்த திலீப் குமாருக்கும் அனார்கலியாக நடித்த மதுபாலாவுக்கும் இடையில் மலர்ந்த காதல் படப்பிடிப்பு முடிவதற்குள் முறிந்தும் விட்டது.

துரதிர்ஷ்டவசமான அரசவை நாட்டியக்காரியாக பேரரசின் மகனைக் காதலித்து மரணத்திலேயே இணையும் நாயகியாக நடித்த மதுபாலாவின் சிறந்த நடிப்பு வெளிப்பட்ட இப்படத்தில், திலீப்குமாருக்கும் மதுபாலாவுக்கும் இடையிலான காதல் காட்சிகள் இன்றும் சிலிர்ப்பையூட்டுபவையாக உயிர்த்திருக்கின்றன.

மதுபாலாவின் இதழ்களில் இறகால் திலீப்குமார் வருடும் காட்சி இந்தி சினிமாவின் அழியாத காதல் தருணங்களில் ஒன்று. ஆனால், அந்தக் காட்சி எடுக்கப்பட்டபோது இருவரும் பரஸ்பரம் பார்த்து புன்னகைக்கும் உறவில்கூட இல்லை என்பதை திலீப்குமார் தனது சுய சரிதையில் தெரிவித்திருக்கிறார். மகத்தான காதலர்கள் மட்டுமல்ல; அவர்கள் திரையில் மகத்தான நடிகர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

9chgow_Guru dutt Waheedarightஇந்தியாவைத் தீப்பிடிக்க வைத்த ஜோடி

ஒரு நாயகன் நாயகியின் திறந்த தோளில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தோடு வெளியான முதல் சுவரொட்டி நேரு காலத்து இந்தியாவை உலுக்கியெடுத்தது. பாலிவுட்டின் முதல் சகலகலா வல்லவர் ராஜ் கபூர், அழகும் நடிப்புத்திறனும் இணைந்த நர்கீஸ் இருவரும் இணைந்த ‘ஆவாரா’ படத்தின் போஸ்டர் அது. இருவரும் சேர்ந்து 16 படங்களில் நடித்தனர். இளைஞர்கள், யுவதிகளுக்கு ஆதர்ஷ ஜோடியாக அக்காலத்தில் விளங்கியவர்கள் இவர்கள். ராஜ் கபூருக்கு மனைவி குழந்தைகளுடன் இருந்த பிணைப்பால் வெள்ளித்திரையில் ஜொலித்த இந்த நட்சத்திரங்கள் தரையிறங்கவே முடியவில்லை.

காகித மலரான காதல்

இந்தி சினிமாவுக்குக் கவித்துவத் தன்மையை அளித்து அகாலத்தில் மறைந்து போன இயக்குநர், நடிகர் குரு தத்தின் உயிரைக் குடித்த காதல் கதை உண்டு. நடிகை கீதா தத்துடன் ஏற்கெனவே திருமணம் நடந்திருந்த அவருக்கு 1950-களில் நடிகை வஹீதா ரஹ்மானுடன் காதல் ஏற்பட்டது. குரு தத்தின் கதையையே பிரதிபலிக்குமாறு அவர் எடுத்த ‘காகஸ் கே பூல்’ படத்தில் அந்த உறவு உச்சத்தை எட்டியது.

இருவருக்குமான உறவு 1961-ல் முறிந்துவிட்டாலும் அவரது திருமண வாழ்வை நிரந்தரமாகப் பாதித்தது. தான் விரும்பும் உணர்நிலையை அடையும்வரை திரும்பத் திரும்பக் காட்சிகளை எடுக்கும், சரியாக வராதவற்றைத் தூக்கியெறியும் பரிபூரணத்தைத் தேடும் கலைஞனான, அகால மரணமெய்திய குரு தத்தின் காதலும் தற்கொலையும் இன்னும் இந்தி சினிமாவின் அழியாத படிமங்களாகவே உள்ளன.

 

வெள்ளிவிழாக் காதல்

மகன்களைக் கதாநாயகர்களாக்கிவிட்ட நாகார்ஜுனா, தன் காதல் மனைவி அமலாவின் அன்பில் இன்னும் இந்தியாவின் ஸ்மார்ட் நாயகனாகவே இருக்கிறார். ‘சிவா’ தெலுங்குப் படம் மூலம் தென்னிந்தியாவுக்கே ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த நாகார்ஜுனாவும் அமலாவும் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் ஆறு. அமலா தெலுங்கில் கேமராமுன் முதன் முதலாக நின்றபோது, அமலாவை நெளியவைத்த ஆடை ஒன்றை கட்டாயம் அணிந்து வரும்படி அவரிடம் கொடுக்கப்பட்டது.

அப்போது ஆறுதலாகப் பேசி இயக்குநரிடம் உடையை மாற்றச் சொல்லி அமலாவின் நேசத்துக்குரியவரானார் நாகார்ஜுன். 1991-ல் அமெரிக்காவில் ஒரு படப்பிடிப்பில் தன் காதலைச் சொன்னார். 1992-ல் திருமணம் செய்து கொண்ட நாகார்ஜுனா- அமலா ஜோடி கடந்த ஆண்டு வெள்ளிவிழாவைக் கொண்டாடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x