Published : 11 Feb 2018 10:11 AM
Last Updated : 11 Feb 2018 10:11 AM
முன்னாள் அமைச்சர் மதுசூதன் ராவ் வீட்டில் வருமானவரி ரெய்டு நடக்கிறது. அப்போது, அவரது சொத்து விவரங்கள் அடங்கிய லேப்டாப்புடன் காசிக்குத் தப்புகிறார் அவரது ஆடிட்டர் முனிஸ்காந்த். தன் மூதாதையரின் பூர்வீக சொத்தைத் தேடி காசிக்கு வரும் ஜெய், அங்கு ஜீவா நடத்தும் பழைய, பாடாவதி மேன்ஷனில் தங்குகிறார். கடனாளியான ஜீவா, தனக்கு கடன் கொடுத்த சேட்டின் மகள் நிக்கி கல்ராணியின் நடன வகுப்புக்கும் அதே மேன்ஷனில் இடம் கொடுக்க, ஜெய்க்கு நிக்கி கல்ராணி மீது காதல் மலர்கிறது. ஜீவாவுக்கு தன் தங்கைக்குப் பார்த்த மாப்பிள்ளையின் (சதீஷ்) தங்கை கேத்ரீன் தெரசா மீது காதல் மலர்கிறது. தான் தேடிவந்த சொத்து அந்த மேன்ஷன்தான் என்று ஜெய் கண்டுபிடிக்கிறார். ஜீவா - ஜெய் மோதல் சமாதானமானதும், இருவரும் சேர்ந்து தங்கள் பொது எதிரியான சிவாவைத் தேடிப் போகிறார்கள். முன்னாள் அமைச்சரின் லேப்டாப் வேறு இவர்களது வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. கடைசியில், எல்லோரும் எப்படி சந்தோஷமாக செட்டில் ஆனார்கள் என்பது மீதிக் கதை.
‘கலகலப்பு’ படம் போல, இதிலும் லாஜிக்கை மட்டும் எதிர்பார்த்துவிடாதீர்கள் என்று முதல் காட்சியிலேயே ‘பொறுப்புத் துறப்பு’ போட்டு பட்டயக் கிளப்புகிறார் இயக்குநர் சுந்தர்.சி. ஒரு ஹிட்டுக்காக காத்திருந்த ஜீவா, ஜெய், சிவா மூவருக்குமே நல்ல வாய்ப்பு. சுந்தர்.சி. படத்தில் நாயகனுக்கு என்ன வேலையோ அதைக் கச்சிதமாகச் செய்கிறார்கள்.
கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி இருவரும் நாயகர்களை காதலிப்பது, பாடல்களில் நடனமாடுவது ஆகியவற்றோடு கதை நகர்வுக்கும் சற்று பயன்படுகிறார்கள். இறுதிக் காட்சியில் சண்டையும் போடுகிறார்கள்.
பெண் பார்க்க வந்த இடத்தில் சாமியாராகப் போவதாகச் சொல்லி சீன் போடும் சதீஷ், நித்யானந்தாவை நினைவுபடுத்தும் போலி சாமியாராக யோகி பாபு, அவரது சீடராக வரும் சிங்கமுத்து, மேன்ஷனில் வேலை பார்க்கும் சிங்கம்புலி, நிக்கி கல்ராணியின் தந்தை யாக விடிவி.கணேஷ், ரோபோ சங்கர், மனோபாலா, சிவாவைத் தத்து எடுக்கிற செட்டிநாட்டுத் தொழிலதிபர் சந்தான பாரதி, அவரது பணியாளர் வையாபுரி ஆகிய காமெடி பட்டாளங்களோடு, சுகர் வந்த ஒரு நாயும் படத்தில் இருக்கிறது.
முதல் பாகத்தில் நடித்த சந்தானத்தை ஈடுகட்ட இத்தனை பேரா? அல்லது அவரது சம்பளத்தில் இத்தனை காமெடி நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற எண்ணமா என்பது தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு ரீலிலும் ஒவ்வொரு காமெடி நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தி, நம்மை சிரிக்க வைக்கிறார்கள். போதாக்குறைக்கு வில்லன் மதுசூதன் ராவ், தனது ஒரு டஜன் அடியாட்களுடன் சேர்ந்து கிச்சுக்கிச்சு மூட்டுகிறார். யோகி பாபு, மிர்ச்சி சிவா, சதீஷ், ரோபோ சங்கர் ஆகிய நால்வரும் நன்றாக மனதில் நிற்கிறார்கள். ராதாரவி மற்றவர்களிடம் அடி வாங்கி சிரிக்க வைத்திருப்பது புதிது. முனீஸ்காந்த் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.
முதல் பாதியில் நகைச்சுவை மிகக் குறைவு. ஆனாலும் காட்சிகள் போர் அடிப்பதாகச் சொல்ல முடியாது. இடைவேளையில் சிவாவின் அறிமுகம் இரண்டாம் பாதியை ஆவலுடன் எதிர்பார்க்கவைக்கிறது. அவர் அறிமுகமாகப் போகிறார் என்று தெரிந்ததுமே தியேட்டரில் கைதட்டல், விசில் பறக்கிறது. அந்த எதிர்பார்ப்பு துளியும் வீண் போகாத வகையில் தன் டிரேட்மார்க் வசனங்களாலும், அவற்றை உச்சரிக்கும் விதத்தாலும் சிரிக்க வைக்கிறார் சிவா.
இரண்டாம் பாதியில் கணிசமான அளவில் நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக ரோபோ சங்கர், சிவா, ஜெய்-ஜீவா இடையில் நடக்கும் சேஸிங் காட்சி வசனங்களாக மட்டுமல்லாமல் காட்சிபூர்வமாகவும் சிரிப்பூட்டுகிறது. அனைத்து கதாபாத்திரங்களும் ஒன்றுகூடும் கடைசி இருபது நிமிடங்கள் படத்தின் ஹைலைட். ஒரு நகைச்சுவைக்கு சிரித்து முடிப்பதற்குள் அடுத்த நகைச்சுவை வந்துவிடுகிறது.
இவ்வளவையும் மீறி படத்தின் நீளத்தால் அலுப்பு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. 4 காதல் பாடல்கள், ஒரு பார் சாங் என்று வலியத் திணித்தது கடுப்பேற்றுகிறது. இறுதி சண்டைக் காட்சியும் ஒரேயடியாக நீள்வது போன்ற உணர்வு வருகிறது. ஆங்காங்கே வரும் இரட்டை அர்த்த வசனங்கள், கதாநாயகிகளுக்கு வைக்கப்பட்ட கேமரா கோணங்கள் முகம்சுளிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் நகைச்சுவை என்ற பெயரில் யாரேனும் ஒருவர் அடிவாங்கிக்கொண்டே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். கதாபாத்திரங்கள் சதா பேசிக்கொண்டே இருக்கின்றன. வசனங்களை இன்னும் கூர்மைப்படுத்தியிருக் கலாம்.
படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. ஆன்மிக நகராகவே அறியப்பட்ட காசியை வெகு அழகாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார். ஹோலி பண்டிகைபோல வண்ணப்பொடிகளைத் தூவி ஆடுகிற பாடல் காட்சியும் செம! தந்தம் திருடும் காட்சி யில் தொடர்ச்சி மிஸ்ஸாகிறது. இடது தந்தத்தில் கயிறு கட்டி இழுத்தவர்கள், திடீரென வலது தந்தத்தில் கயிறு கட்டி இழுக்கிறார்கள்! ஹிப்ஹாப் தமிழா குழுவினரின் இசை நன்றாகவே எடுபடுகிறது. எடிட்டிர் ஸ்ரீகாந்த் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். கொஞ் சம் செதுக்கப்படாமல் வெளிவந்திருக் கும் நல்ல நகைச்சுவைத் திரைப்படம் ‘கலகலப்பு 2’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT