Published : 26 Jan 2024 06:16 AM
Last Updated : 26 Jan 2024 06:16 AM
சமீபத்தில் ஜீ5 தளத்தில் வெளி யாகியுள்ள ‘கூஸ் முனுசாமி வீரப்பன்’ தொடர் மிகவும் காத்திரமாக, நடுநிலையோடு, துணிச்சலாக எடுக்கப்பட்டுள்ளது. குரலற்ற, பாதிக்கப்பட்ட மனிதர்களின் பேட்டியைக் காணும்போது தொடர் என்பதை மறந்து கண் கலங்குகிறது. இதற்கு முன் வெளியான ‘ஹண்ட் ஃபார் வீரப்பன்’ தொடர் ஒரு சார்பானதாகவும் அது ஓர் அரசியல் எனவும் உணர முடிந்தது. விரைவில் இந்தத் தொடர் வெளிவந்தது நல்ல தருணம். இத்தொடரில் வீரப்பன் எழுப்பும் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை நம்மிடம்.
“நடிகர்களுக்கு இந்தத் தமிழ்நாட்டுக்காரங்க ஏன் ஓட்டு போடுறாங்க; அரசியலைப் பத்தி அவுங்களுக்கு என்ன தெரியும்?” என்று வீரப்பன் கேள்வி கேட்கும்போது அத்தனை ஆண்டுகள் கழித்தும் விடைத் தெரியாத கேள்வியாக.. முறையான படிப்பறிவு இல்லாத ஒருவனின் கேள்வி என்றபோதும் முக்கியமானது.
இந்தத் தொடரைக் காணும்போது வீரப்பன் நல்ல கதைசொல்லியாகவும் நல்ல மேடை நடிகனாகவும் தோற்றமளிக்கிறான். வீரப்பன் குரல் பிசிறு இல்லாமல் பேட்டியில் வெளிப்படும்போது அவனிடம் இருந்த ஆளுமை வெளிப்படுகிறது.
ஏகே 47 துப்பாக்கியை வைத்துக்கொண்டு அவன் நடித்துக் காட்டுவதையும் நடனம் ஆடுவதையும் பார்க்கும்போது சன்னதம் கொண்டாடும் வனதேவனைப் பார்ப்பதுபோல உணர்ந்தேன். வீரப்பன் யானைகளைக் கொன்று தந்தங்களைத் திருடியவன். சந்தன மரங்களைக் கடத்தியவன்.
அவன் குற்றவாளி என்றால் வாங்கியவன் யார்? வீரப்பன் தேடுதல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகளையும் காவல்துறை அதிகாரிகளையும் தன்னைக் காட்டிக்கொடுத்த கிராமத்தினரையும் கொன்றது மகா குற்றம் என்றால், தேடுதல் வேட்டையில் காவல்துறை மலைவாழ் மக்களைக் கொடூரமாகச் சித்திரவதை செய்ததற்கும், பெண்களை வல்லுறவு செய்து தடாவில் சிறையில் அடைத்த கொடூரத்திற்கும் என்ன பெயர் சூட்டுவது?
முன்பே பத்திரிகையிலும் இணையத்தில் வந்திருந்தாலும் இணையத் தொடராகப் பார்க்கும்போது இலங்கையில் மட்டுமல்ல; நம் தமிழகத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எந்த அரசும் செவி கொடுக்கவில்லை என்பது அநீதி. சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளியான பிறகும் நிவாரணத் தொகை இன்றைய தேதி வரை பாதிக்கப்பட்ட பலருக்குச் சென்று சேரவில்லை என்கிற தகவலைக் கேட்கும்போது கவலையளிக்கிறது.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரின், இருபக்க நியாயங்களையும் எடுத்துக் கூறியது என நடுவில் நிற்பது இத்தொடரின் சிறப்பு. நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால், அதன் செய்தியாளர்கள், தொடரைத் தயாரித்து, எழுத்தாக்கமும் இயக்கமும் செய்த சரத் ஜோதி, ஜெயசந்திரா ஹாஸ்மி, வசந்த் பாலகிருஷ்ணன், பிரபாவதி ஆர்.வி. ஆகிய அனைவரது பங்களிப்பும் மெச்சத்தக்க அளவில் அமைந்துவிட்டது. தவறாமல் பார்க்க வேண்டிய தொடர்களில் ஒன்று இந்த ‘கூஸ் முனுசாமி வீரப்பன்’.
நாட்டிலேயே முதன் முறையாக கேரள மாநில அரசு, ஜனவரி 26, 2024 முதல் 'சி ஸ்பேஸ்' என்கிற ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்துகிறது. ஒரு திரைப்படத்தை மட்டும் கட்டணம் செலுத்திப் பார்க்கலாம். ஆண்டுச் சந்தாவும் செலுத்தலாம். வருவாயில் தயாரிப்பாளர்களுக்கு 40 முதல் 50 விழுக்காடு வரை பங்கு கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT