Published : 16 Feb 2018 11:16 AM
Last Updated : 16 Feb 2018 11:16 AM

தயாரிப்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்! - ஜீவா பேட்டி

சு

ந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘கலகலப்பு – 2’ படத்தின் வெற்றிக் களிப்பில் இருக்கிறார் ஜீவா. “கலகலப்பு படத்தோட மொத்த டீமுமே ரொம்ப ஜாலியான டீம். ஒரு ஜாலி டூர் போயிட்டுவந்த ஃபீல் இன்னமும் அப்படியே இருக்கு. வருடத்துக்கு ஒரு படமாவது இதுமாதிரி கலர்ஃபுல்லா நடிக்கணும்னு நினைக்கிறேன்.

கலகலப்பு - 3, 4 பாகங்களுக்குக் கூப்பிட்டால் முதல் ஆளா நான் தான் ஓகே சொல்லுவேன் ” என்று உற்சாகமாக உரையாடத் தொடங்கினார் ‘கொரில்லா’ படப்பிடிப்புக்கு தாய்லாந்து கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்த ஜீவா.

சிம்பன்சி குரங்குடன் ‘கொரில்லா’ படத்தில் நடிப்பது பற்றி?

ஆமாம். தலைப்புதான் ‘கொரில்லா’ என்று இருக்கிறதே தவிர இதிலும் காமெடிக்கு கேரண்டி உண்டு. இயக்குநர்கள் டீம் ஏற்கெனவே தாய்லாந்து கிளம்பிப் போய்விட்டது. இன்னும் சில தினங்களில் நான் கிளம்ப வேண்டும். சிம்பன்சியோடு நடிப்பதால் தாய்லாந்து மொழியில் பழக்கப்படுத்தப்பட்ட குரங்குடன் நடிக்க வேண்டும் என்பதால் அந்த மொழியில் பல வார்த்தைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

‘கீ’ படம் எப்படி வந்திருக்கிறது?

அந்தப் படத்துக்காகத் தலை முடியைக் கன்னாபின்னாவென்று வெட்டிவிட்டேன். அதனால் அந்தப் படத்துக்காக மூன்று வருடங்கள் செலவு செய்துவிட்டோம். நேரம் எடுத்துக்கொண்டாலும் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாகப் படம் வந்திருக்கிறது.

ராஜுமுருகன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ‘ஜிப்ஸி’ ஒரு சீரியஸ் படமா?

‘கற்றது தமிழ்’, ‘ஈ’ போன்ற படங்களின் வரிசையில்தான் ‘ஜிப்ஸி’யும் வருகிறது. ஆனால், அந்தப் படங்கள் அளவுக்கு சீரியஸாக இருக்காது. எல்லைகள் கடந்து மனிதநேயம் பேசும் படமாக இது இருக்கும். தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்காமல் ஒட்டுமொத்த அரசியல் விமர்சனம் படத்தில் இருக்கிறது. இதுவொரு காதல் கதை. படத்தின் முக்கிய அம்சமாகப் பயணம் இருக்கும். இந்தியாவின் பல பகுதிகளில் படப்பிடிப்புக்குத் திட்டமிட்டு வருகிறோம்.

தொடர்ந்து பொழுதுபோக்குப் படங்களில் நடித்து வந்திருக்கிறீர்கள். அவையெல்லாம் சரியாகப் போகவில்லை என்பதால் ஒரு சீரியஸ் படம் கொடுக்கலாம் என்று நினைத்தீர்களா?

நான் நடிக்கும் படங்கள் சரியாகப் போகவில்லை என்றால் எனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க மாட்டார்கள். என்ன ரகசியம் என்றால் நான் நடிக்கும் படங்கள் எவ்வளவு வசூலித்திருக்கின்றன என்று நாங்கள் தம்பட்டம் அடித்துச் சொல்வதில்லை. எந்தப் படம் எவ்வளவு வசூல் என்று ட்விட்டரில் சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படம் எதிர்பார்த்ததைவிட நல்ல வசூல் கொடுத்ததால்தான் அடுத்து ‘கலகலப்பு 2’ படத்தில் நடிக்க சுந்தர்.சி அழைத்தார்.

‘போக்கிரி ராஜா’, ‘கவலை வேண்டாம்’ மாதிரி நான் நடித்த சில பொழுதுபோக்குப் படங்கள் சரியாகப் போகவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ‘ராம்’, ‘கற்றது தமிழ்’ மாதிரியான படங்களுக்கு எவ்வளவு உழைப்பைப் போட்டோம். ஆனால், அவை பெரிதாக வசூல் செய்யவில்லை. அதுவே பொழுதுபோக்குப் படங்கள் என்றால் அனைத்துமே மினிமம் கேரண்டி படங்களாகிவிடுகின்றன.

அதுவுமில்லாமல் இதுமாதிரிப் படங்களை இப்போது ஊடகங்கள் கொண்டாடக் காத்திருப்பதால் முதலீடு செய்ய தயாரிப்பாளர்களிடம் முன்பிருந்த தயக்கம் தற்போது இல்லை.

நீங்கள் ரசிகர் மன்றத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை பிறகு ஏன் பொழுதுபோக்குப் படங்கள் மீது அதிக அக்கறை காட்டுகிறீர்கள்?

ஆடியன்ஸ் என்று வருகிறபோது அங்கே வேறொரு உலகம் இருக்கிறது. திரையரங்குகளுக்குப்போனால் அதைக் காண முடியும். பொழுதுபோக்கை விரும்பும் ரசனையை நீங்கள் குறை கூற முடியாது. நான் சமூக வலைத்தளங்களில் இருக்கிறேன். அங்கே புழங்கும் ரசிகர்களின் மனநிலை தெரியும். அவர்கள் ஒரு பத்து சதவீதம் மட்டும்தான். ஆனால், திரையரங்குக்கு வரும் ரசிகர்களது உலகம் திறந்த மனது கொண்டது.

சினிமா பார்ப்பதை ஒரு மூன்று மணி நேரக் கொண்டாட்டம் என்று நினைத்து வருகிறார்கள். அவர்கள்தான் 18 சதவீதமும் 28 சதவீதமும் ஜி.எஸ்.டி. கட்டிப் படம் பார்க்கும் முக்கியமான ‘எண்ட் யூசர்கள்’. அவர்களைச் சந்தோஷப்படுத்த முடியவில்லை என்றால் நான் நடிகன் கிடையாது. என்னை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று இயக்குநர்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால் எனது பயணம் ஸ்மூத்தாக இருக்கிறது.

ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் படம் தயாரிக்கும் காலம் இது. பாலிவுட்டில் நுழைய வேண்டும் என்று நினைத்ததில்லையா?

எனக்குத் தமிழ் போதும் என்று நினைக்கிறேன். தெலுங்குப் படவுலகிலிருந்து அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருமுறையும் நாசூக்காக மறுத்துவிடுவேன். நான் இங்கே பிறந்து, இங்கேயே வளர்ந்திருக்கிறேன். எனது அப்பாவின் மொழியான இந்தியைவிட அம்மாவின் மொழியான தமிழில்தான் என்னால் சிறப்பாகப் பேச முடிகிறது. தமிழில் வசனம் பேசி நடிக்கும்போது இருக்கும் பரவசமும் ஈடுபாடும் மற்ற மொழிகளில் நடிக்கும்போது கிடைக்குமா தெரியவில்லை.

இன்று சினிமா வியாபாரம் என்று வருகிறபோது டிஜிட்டல் தொழில்நுட்பம் நிறைய வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருக்கிறது. நிறையப் பேர் அதில் நன்கு சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுதெரியாமல் அவனை விட மாட்டேன், இவனை விட மாட்டேன் என்று நாம் இங்கே சண்டைபோட்டுக்கொண்டிருகிறோம். இங்கே வெளிப்படைத் தன்மை இல்லை.

சினிமா வியாபாரம் எப்படி நடக்கிறது என்று இங்கிருக்கும் தயாரிப்பாளர்களை எல்லாம் அழைத்து ஒரு ஒர்க்‌ஷாப் நடத்த வேண்டும். அமேசான், நெட்பிளிக்ஸ் உட்பட டிஜிட்டலாக உருவாகியிருக்கும் சினிமா வியாபாரத்தை நோக்கி நாம் போய்த்தான் ஆக வேண்டும்.

இன்று வெப் சீரீஸ் பெரிய வெற்றிகளைச் சந்தித்து வருகின்றன. அதுபோன்ற முயற்சிகளில் பங்கெடுக்கும் எண்ணம் இருக்கிறதா?

ஏன் கூடாது? அப்படியொரு நல்ல வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன். மார்ச் 1 முதல் தென்னிந்தியா முழுவதும் வேலைநிறுத்தம்வேறு வர இருக்கிறது. அப்போது வீட்டில் சும்மாதானே இருப்போம்.

ஹீரோ ரேஸ் என்ற ஒன்று தற்போது இருப்பதாக நினைக்கிறீர்களா?

நான் அதில் இல்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ஹீரோ ரேஸில் ஓடியதற்காகவே நிறைய ஹீரோக்கள் கடனில் இருக்கிறார்கள். புது இயக்குநர்களோடு அதிகம் பணியாற்ற விரும்புகிறேன். தயாரிப்புச் செலவைக் கட்டுக்குள் வைத்து மினிமம் கேரண்டி படம் கொடுப்பதுதான் இன்று சவாலான விஷயம். தயாரிப்பாளர் எக்காரணம் கொண்டும் நஷ்டப்படக் கூடாது என்பது மட்டும்தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது.

உங்கள் அப்பா 90 படங்களைத் தயாரித்துவிட்டார். இந்த எண்ணிக்கையைத் தொடும் தயாரிப்பாளர்கள் இனி வருவார்கள் என்று நம்புகிறீர்களா?

ஏன் முடியாது, என்று நினைக்கிறீர்கள். ஃபேஸ் புக்கை மீறி ஒன்று வர முடியாது என்றார்கள். ட்விட்டர் வரவில்லையா? ஆனால், ஃபேஸ் புக் தன் இடத்தை இழக்கவில்லையே. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா கிராம் எல்லோரும் இணைந்து செயல்படுவதால் நிலைத்து நிற்கிறார்கள். இந்த ஒற்றுமைதானே சினிமாவுக்கும் தேவைப்படுகிறது. அது இங்கே இல்லாததால்தான் எல்லாப் பிரச்சினைகளும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x