Published : 08 Jan 2024 05:34 PM
Last Updated : 08 Jan 2024 05:34 PM
“இன்னொருவருக்காகப் பூப்பது நிர்ப்பந்தம்! தனக்காகப் பூப்பது சுதந்திரம். நந்தியாவட்டை பூக்கள் சுதந்திரமானவை ". ஒரு பெரும் நோயோடு போராடிக்கொண்டு, தன் நினைவாக மருத்துவமனை வளாகத்தில் நந்தியாவட்டை செடியை விரும்பி நாடும் அனிக்கேத்தின் வார்த்தைகள் இவை. எழுதுவதுதான் திரைப்பட உருவாக்கத்தின் அடிப்படை என்று தீவிரமாக நம்பும் புதுயுக கன்னட சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் ராஜ் பி ஷெட்டி எழுதி நடித்து முதலி இயக்கியது ஒரு நகைச்சுவை திரைப்படம், பின்னர் ஒரு பெரும் குற்றப் பின்னணியில் பெரு வெற்றி பெற்ற ஒரு கிரைம் கதை. அங்கிருந்து வேறொரு களத்தில் இம்முறை மரணத்தைப் பற்றிய தத்துவ விசாரணையுடன் ஓர் அடர்த்தியான காதல் கதையை எழுதி, நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் தான் ‘ஸ்வாதி முத்தின மளெ ஹனிய’ (முத்தாக மாறிடும் மழைத்துளி).
ஒரு மலைப் பிரதேச மருத்துவமனையில் பணிபுரியும் மனநல ஆலோசகரின் அலுப்பூட்டும் அன்றாட வெறுமையில், ஒரு நூதனமான நோயாளி நுழைகிறார். அவர்கள் இருவரின் எதிர் துருவ வாழ்வியல் சிக்கல்களும், பிணைப்பும் தான் கதை. வாழ்வியல் மற்றும் மரணத்தின் மீதான தத்துவ விசாரணையே இதன் கதைக்களம்.ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தியதும், கவித்துவமான வசனங்கள் நிறைத்ததும் சின்ன கதாபாத்திரத்திற்குக் கூட ஒரு பின்னிணைப்பு வைத்திருந்ததும்,கதையோடு இழையும் பின்னணியிசையும் படத்தின் முக்கிய அம்சங்கள். ஒரு காட்சியில் கதையின் நாயகி தன் காதல் நிலைப்பாடு பற்றிய கேள்விக்கு அவளின் அம்மா கூறும் பதில்கள் மிகவும் எதார்த்தம். எது சரி எது தவறு என்பதை எங்கிருந்து பார்க்கிறோம் யாரால் பார்க்கப்படும் என்னும் அர்த்தத்தில் அவள் கூறும் பதில் அருமை. ‘லஞ்ச் பாக்ஸ்’ இந்தி திரைப்படத்தில் வருவது போலவே ஒரு இயல்பு மீறிய உறவை வசன்களற்று மிகக் குறைந்த காட்சியில் பார்வையாளனுக்குக் கடத்திவிடுவது சிறப்பு.கதையில் இரண்டு உறவுகள் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் எந்த இடத்திலும் அதை உடல் ரீதியாகக் காண்பிக்காமல் அதன் உளவியல் சிக்கல்களை மட்டும் ஆராய்ந்திருப்பது அழகு. வாழ்வை ஒரு குளத்தோடு ஒப்பிட்டு "முன்பு அந்தக் குளம் உயிரோடு இருந்தது" எனத் தொடங்கும் ஒரு பக்கக் கவிதை பிரமாதம்.
இத்திரைப்படம், வெறும் 27 பேர் மட்டுமே நடித்து 18 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது. நடிப்பு, எழுத்து, இயக்கம், இணைப் படத்தொகுப்பு எனப் பெரும் பங்காற்றியிருக்கிறார் இயக்குநர் ராஜ் பி ஷெட்டி. பாலுமகேந்திரா கதாநாயகியை ஞாபகப்படுத்தும் ஆரப்பட்டமற்ற அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் முதன்மை நாயகி சிரி ராஜ்குமார். இணைப் படத்தொகுப்பையும் ஒளிப்பதிவையும் அதன் ஆதாரச் சாயல் கெடாமல் நேர்த்தியாகப் பங்களித்திருக்கிறார் பிரவீன் ஷ்ரியன். மிதுன் முகுந்தனின் இசை மற்றும் பாடல்கள் படத்தைத் தாங்கிச் செல்வதுடன், அச்சூழலுக்குள் நம்மை பங்கேற்க செய்துவிடுகிறது. படத்தை தயாரித்திருப்பது தமிழுக்குப் பரிச்சயமான ‘பொல்லாதவன்’ திரைப்பட நடிகை ரம்யா ஸ்பந்தனா.
அதீத அறிமுகங்களும்,பின்புல விளக்கங்களும் சொல்லாமல் கதை மாந்தர்களின் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பார்வையாளர்கள் பங்கேற்கும்படி செய்திருப்பது நிறைவு. யாரும் சூடிக்கொள்ளாமல், கொண்டாடாமல் உயிர்த்திருக்கும் ஒரே காரணத்திற்காகத் தன் இருப்பை காட்டியபடி அவ்வப்போது சில நந்தியாவட்டைகள் திரையில் மலரும். அறிவியல் நிறுவுவதற்கு முன்பாக, ஒரு குறிப்பிட்ட நாளில் சிப்பியில் விழும் மழைத்துளி தான் முத்தை உருவாக்குவதாக நம்பப்பட்டது. கற்பனை தானெனினும் அப்படி ஒரு மழைத்துளி உருவாக்கிய அபூர்வ முத்து தான் ‘ஸ்வாதி முத்தின மளெ ஹனிய’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT