Published : 08 Aug 2014 12:00 AM
Last Updated : 08 Aug 2014 12:00 AM
புதுப் படங்களின் வசூல் நான்கு வாரங்கள் மட்டுமே என்றாகி விட்ட நிலையில், முதல் வார வசூல், மிகவும் அவசியம். சராசரியாக, முதல் வார வசூல் இன்று, ஒரு படத்தின் மொத்த வசூலில் 50 சதவீதம் என்ற நிலை உள்ளது. எனவே முதல் வார வசூலைப் பெரியளவில் அதிகரிக்க எல்லாப் படங்களும் போராடிவருகின்றன. மக்கள் ஆச்சரியப்படும் விதத்தில் படத்தை முன்னிறுத்துவது முக்கியமாகிவிட்டது. இதில் முக்கியம், ஒரு படத்தின் முன்னோட்டம். ஒரு படத்தின் முதல் வார வசூல் தலையெழுத்தைப் பல படங்களுக்கு முன்னோட்டமே முடிவு செய்கிறது.
முன்னோட்டம் மூன்று வகை
1.முதல் விளம்பரம்: பத்திரிகை மற்றும் போஸ்டர் விளம்பரங்கள். படத்தின் மீதான முதல் தாக்கம் இங்கிருந்துதான் ஏற்படுகிறது.
2. முதல் டீஸர் / டிரைலர்: படத்தைப் பற்றிய காட்சிப் பதிவு, மொத்தமாகப் படத்தைப் பற்றிய ஒரு எண்ணத்தை உருவாக்கும் ஆயுதம்.
3. பாடல்களும் அதன் காட்சி உருவாக்கமும்: படத்தின் தரத்தைப் பற்றிய தாக்கத்தை உண்டாக்கும் மூலக் கருவி.
மேலே சொன்ன மூன்றிலும் இல்லாவிட்டாலும், குறைந்தது இரண்டிலாவது ஒரு படம் பெரிய அதிர்வை உண்டாக்க வேண்டும்.
சல்மான் கானின் கிக் படத்தின் முதல் விளம்பரம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது என்றால், அதன் டிரைலர் ஒரே வாரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்ட டிரைலராகி, படத்தின் மேல் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. அதன் பின் வந்த அப்படத்தின் பாடல்களும், பாடல் காட்சிகளும், மேலும் வலிமை சேர்த்தது. முதல் ஐந்து நாட்களில் ரூபாய் 127 கோடி வசூலை எட்டியதில் அப்படத்தின் முன்னோட்டத்தின் பங்கு பெரியது.
அதே போல், வேலை இல்லாப் பட்டதாரி படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, தனுஷின் திரைப்பயணத்தில் முதல் வாரம் அதிகம் வசூல் செய்த படமாக அதை மாற்றியது.
இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். முதல் மூன்று நாட்கள் மற்றும் முதல் வாரத்தின் வசூலுக்கு முக்கியக் காரணம், அதிர்வை ஏற்படுத்தும் முன்னோட்டம். எத்தனை பேர் ஒரு முன்னோட்டத்தைப் பார்த்தார்கள் என்பதைவிட, எத்தனை பேர் அதை ரசித்தார்கள், அதைப் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு கூடும். கிக், வேலை இல்லா பட்டதாரி படங்களின் பாடல்களும், டிரைலரும் லட்சக்கணக்கில் மக்களால் பேசப்பட்டவை.
ஒரு படத்தின் முன்னோட்டம் (முதல் விளம்பரம், டிரைலர்/டீஸர், பாடல்கள்) சினிமா ஆர்வலர்களிடையே சரியான அதிர்வை ஏற்படுத்தாவிட்டால், அப்படத்திற்குப் பெரியதொரு ஓபனிங் வசூல் கிடைப்பது கடினம். அவ்வாறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாத படம், மிக நன்றாக இருக்கும் பட்சத்தில், படத்தைப் பற்றிய நல்ல கருத்துகள் வெளிவந்து, பிக்அப் ஆகும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அது மிகப்பெரிய வசூல் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட படம் வெளிவந்த ஒரு வாரத்தில், மேலும் பல புதுப்படங்கள் வந்துவிடும். எனவே முதல் வார வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.
எப்படி உருவாக்குவது ?
முதல் விளம்பரம் (பத்திரிக்கை, போஸ்டர்கள்):
முதல் விளம்பரப் பிரச்சாரத்தில் பரபரப்பை உண்டாக்க முடியும். சூர்யாவின் அஞ்சான் படத்தின் விளம்பரம், ஸ்டைலாகாவும், புதுமையாகவும் இருந்ததால், இந்திய அளவில் அனைவரையும் கவர்ந்தது. பில்லா, எந்திரன், ஏழாம் அறிவு, மங்காத்தா, காதலில் சொதப்புவது எப்படி, அட்டகத்தி, சூது கவ்வும், துப்பாக்கி, ஜிகிர்தண்டா, கத்தி எனப் பல படங்களின் முதல் விளம்பரங்கள் பரபரப்பை உண்டாக்கின. முதல் விளம்பரப் பிரச்சாரத்தின் மூலம் ஒரு அதிர்வை உண்டாக்க இயக்குநரும், விளம்பர நிறுவனமும், தயாரிப்பாளரும் போராட வேண்டும். ஏதாவது வகையில், படத்தின் முதல் விளம்பரக் கேம்பைன் தனித்துவத்துடன், அனைவரும் கவனிக்கும் வகையில் இருந்து, பார்வையாளர்களைக் கவர்ந்தால், உடனே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு தொடங்கிவிடும். எவ்வளவு செலவு செய்து போஸ்டர்கள் ஓட்டினார்கள் என்பதை விட, அந்தப் போஸ்டர்கள் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினவா என்பதே கேள்வி.
சமீபத்தில் அமீர் கானின் பி.கே., பிரியங்கா சோப்ராவின் மேரி கோம் படங்களின் முதல் விளம்பரப் பதிவுகள் அனைவராலும் பாராட்டப்பட்டு, பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளன.
முதல் டீஸர் / டிரைலர்:
ஒரு சிறந்த டிரைலர் இரண்டு நிமிடத்தில் படத்தின் கதையை ஏதோ ஒரு வகையில் சொல்லி, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்க வேண்டும். பார்வையாளர்கள் ஒரு படத்தின் முதல் ஒளி-ஒலிக் காட்சியை இந்த முன்னோட்டம் மூலமே காண்பதால், பிரம்மாண்டமாக அல்லது புதுமையாக, மக்கள் ரசிக்கும் வகையில், இருக்குமானால் அத்தனை வரவேற்பு படத்துக்கு உண்டாகும்.
கிக் படத்தின் முன்னோட்டத்தில், ரயில் வரும் போது, சல்மான் கான் அதை சைக்கிளில் கடக்கும் ஒரு காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. வேலை இல்லாப் பட்டதாரி பட முன்னோட்டத்தில், தனுஷின் வசனங்களும், காட்சிகளும் பெரிதும் பேசப்பட்டு, படத்தின் மேல் ஆர்வத்தை உண்டாக்கின. அஞ்சான் பட டீஸரை இன்று 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர். அப்படத்தின் மேல் உள்ள பரபரப்புக்கு இது ஒரு காரணம்.
இன்று 75 சதவீதப் பார்வையாளர்கள் 15 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில், 75 சதவீதம் இளைஞர்கள் என ஒரு ஆய்வு சொல்கிறது. இவர்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்போன்ற வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுபவர்கள். ஒரு முன்னோட்டம் நன்றாக இருக்கும் பட்சத்தில், அதை அவர்களின் நண்பர்களுடன் பகிர்ந்து, அதன் தாக்கத்தைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்பவர்கள். அதே நேரம், முன்னோட்டம் நன்றாக இல்லாத பட்சத்தில் எதிர்மறையான விளைவுகளும் அவர்களால் ஏற்படும்.
மேலே சொன்ன ஆய்வு, 83 சதவீதம் பேர் ஒரு படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களால் கவரப்பட்டு, படத்தைத் திரையரங்கில் பார்க்க வருபவர்கள் என்கிறது. எனவே, படத்தின் வெற்றிக்கு, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய டிரைலர் ஒன்று அவசியம்.
பாடல்களும் உருவாக்கமும்:
பேசும் படம் ஆரம்பித்த 1931 முதல், பாடல்கள் இல்லாமல் வந்த தமிழ்ப் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். 83 வருடம் கடந்தும், பாடல்கள் எவ்வாறு ஒரு படத்திற்குப் பெரிய தாக்கத்தை வசூலில் ஏற்படுத்த முடியும் என்று அடுத்த வாரம் பார்ப்போம்.
தொடர்புக்கு (dhananjayang@gmail.com)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT