Published : 18 Jan 2018 09:11 AM
Last Updated : 18 Jan 2018 09:11 AM
முன்னொரு காலத்தில், ஓர் ஆங்கிலேயரிடம் இருந்து ஆட்டையைப் போட்ட வைரக்கற்களை புதைத்து வைத்துவிட்டு இறந்துபோகிறார் ஒரு பொற்கொல்லர். அந்த வைரங்கள் புதைக்கப்பட்ட இடம் ‘குலேபகாவலி’ கோயில். இறந்தவர் தன் மகனிடம் இதை சொல்லிவிட்டுப் போக, அவரது பேரன் மதுசூதன் ராவ், புதையலைத் தேடும் முயற்சியில் இறங்குகிறார். நேரடியாக களமிறங்குவது கடினம் என்று 3 பேரை அந்த வேலைக்குப் பயன்படுத்துகிறார். ஒருவர், மன்சூர் அலிகான் தலைமையிலான சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த பிரபுதேவா. இன்னொருவர் தங்கைக்காக சில்லறைத் திருட்டில் ஈடுபடும் ‘பார் டான்ஸர்’ ஹன்சிகா. 3-வது நபர் பிரபல கார் திருடரான ரேவதி. இவர்களின் கடத்தலும், துரத்தலும், நகைச்சுவையும்தான் மொத்தப் படமும். கறாரான கிராமத் தலைவர் வேல.ராமமூர்த்தியையும் மீறி அந்தப் புதையலை எடுத்தார்களா? அதற்குப் பிறகு அவர்களுக்கு காத்திருந்த ஏமாற்றம் என்ன? என்பது மீதிக்கதை.
பிரபுதேவாவிடம் இன்னமும் அதே விறுவிறு சுறுசுறு. மனிதருக்கு வயதே ஆகாதோ? நடிப்பு, சண்டையில் கலக்குகிறார். அவரது நடனம் படத்துக்கு மிகப்பெரிய பலம். அதற்காகவே, அத்தனை பாடல் காட்சிகளையும், பாலிவுட் பாணியில் அதிக செலவில் எடுத்திருப்பது தெரிகிறது.
ரேவதிக்கு இது முக்கியமான படம். அவர்தான் கதாநாயகி என்றும் சொல்லலாம். அறிமுகக் காட்சியே அசத்தல். காவல் உதவி ஆய்வாளரை ஏமாற்றி, அவரது பிஎம்டபிள்யூ காரைத் திருடும் ரேவதி, அப்பாவி போலப் பேசி பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்கிறார். அவரது கதாபாத்திரம் கடைசிவரை சோடைபோகவில்லை.
கடைசி பாடலைப் படமாக்கும்போது, ஹன்சிகா ‘டயட்’டில் இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது.
மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், முனிஷ்காந்த், சத்யன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகி பாபு என்று ஏராளமான கதாபாத்திரங்கள். இதில் மன்சூர் அலிகான் - யோகிபாபு கூட்டணி கலகலக்க வைக்கிறது. கார் துரத்தல் காட்சியில், குறுக்கிடும் ரயில்வே கேட்டை ரேவதிக்கு முன்னால் கடந்துவிட வேண்டும் என்று அவர்கள் முயற்சிக்கும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. உதவி ஆய்வாளர் சத்யன், படத்தில் உள்ள அத்தனை திருடர்களாலும் ஏமாற்றப்படுகிறார். ஒவ்வொரு முறை ஏமாற்றப்படுவதும், உன்னைப் பழிவாங்காமல் விடமாட்டேன் என்று அவர் சூளுரைப்பதும் நல்ல நகைச்சுவை.
பிற்பாதியில் மொட்டை ராஜேந்திரன் பட்டையைக் கிளப்புகிறார். ஓர் எலும்புக்கூட்டை வைத்துக்கொண்டு, அவர் அடிக்கிற லூட்டி, வயிற்றைப் புண்ணாக்குகிறது. முனிஷ்காந்தும் சிரிக்க வைக்கிறார். ஆனால், படத்தின் கதையும், அவரது நடிப்பும் ‘மரகத நாணயம்’ படத்தை நினைவூட்டுகின்றன.
அந்தக் காலத்து ‘குலேபகாவலி’ திரைப்படத்தில், தந்தையின் பார்வையை மீட்பதற்காக, பகாவலி ராஜ்ஜியத்தில் உள்ள குலே புஷ்பத்தை தேடிப் போவார் எம்ஜிஆர். அதை, இன்றைய காலச்சூழலில் புதையலைத் தேடிப்போகும் கதையாக மாற்றி மாயாஜாலம் செய்திருக்கிறார் இயக்குநர் கல்யாண். படத்தில் ஆங்காங்கே தொய்வு விழுகிறது. கதாபாத்திரங்கள் கூடிக்கூடிப் பேசுகிறார்கள். சீரியஸாக ஏதோ செய்யப்போகிறார்கள் என்று பார்த்தால், மறுபடியும் காமெடி.
‘‘நல்ல நேரம் நம்பியார் மாதிரி வந்து எங்களைக் காப்பாத்துனீங்க’’, ‘‘4 சிலை வேணும்னா, 4 பேரு அடி வாங்குறதுல தப்பில்ல’’, ‘‘புதையல்னாலே தோண்டித்தான் எடுக்கணுமா? பாறை இடுக்கு, மரப்பொந்துல எல்லாம் ஒளிச்சு வெச்சா ஆகாதா?’’ என்பது போன்ற வசனங்களைப் பாராட்டலாம். மன்சூர் அலிகான் பஞ்சர் டயலாக் பேச ஆரம்பிக்கும்போது, ‘இப்பவே கண்ணக்கட்டுதே’ மாதிரி எல்லோரும் கொடுக்கும் ரியாக்சனும், கிண்டலும் சிரிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவு சிறப்பு. பிளாஷ்பேக் போவதற்காக ‘கொஞ்சம் பின்னால போய்ப் பாரு’ என்று ரேவதி சொல்லவும், ஹன்சிகா ஓவராக பின்னால் போய் டைனோசர் காலத்துக்கே போய்விடுவது என்று விஷுவலாகவும் சிரிக்கவைக்கின்றனர். பாடல்களும், விவேக் - மெர்வின் இசையும் படத்துக்குப் பலம். குழந்தைகளைக் கவர்வதற்காக ஒரு பாடல் முழுக்க யானை, புலி, போலார் கரடி, முதலை, மான், வாத்து, மிதக்கும் பாறைகள், அருவி எல்லாம் வருகின்றன.
ரேவதி கதாபாத்திரம் அளவுக்கு மற்ற கதாபாத்திர வார்ப்புகளில் இயக்குநர் கவனம் செலுத்தவில்லை. நகைச்சுவைத் தொகுப்புகளாக படம் மேலோட்டமாக நகர்கிறதே தவிர, கதையில் எந்த அழுத்தமும் இல்லை. பிரபுதேவா செல்லும் எல்லா இடங்களுக்கெல்லாம் மன்சூர் அலிகான் பின்தொடர்ந்து செல்வது எப்படி என்பது தெரியவில்லை. இதுபோல ஆங்காங்கே உள்ள லாஜிக் ஓட்டைகளை கண்டுகொள்ளாமல் விட்டால், பொழுதுபோக்கு ஜாலி.. ‘குலேபகாவலி’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT