Published : 15 Dec 2023 06:09 AM
Last Updated : 15 Dec 2023 06:09 AM

கோலிவுட் ஜங்ஷன்: டான்ஸ் டான் 2023

தமிழ் சினிமாவையும் நடனக் கலைஞர்களையும் பிரிக்கவே முடியாது. நடனக் கலைஞர்களாக சினிமாவில் நுழைந்த பலர், புகழ்பெற்ற நட்சத்திரங்களாகவும் இயக்குநர்களாகவும் மாறியிருக்கிறார்கள். என்றாலும் நடனமே அவர்களது அடையாளம். தங்களது சினிமா நடனம் வழியாகக் கோலோச்சி, நம் நினைவுகளிலிருந்து மறைந்து போன, பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவுகூரும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் ‘Dance Don Guru Steps 2003 Kollywood Awards’ என்கிற விருது விழா, கலைமாமணி ஸ்ரீதர் மாஸ்டர் தலைமையில் நடத்த இருக்கிறார்கள். இதில் எண்ணற்ற திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, டிசம்பர் மாதம் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடக்கவுள்ள இவ்விழாவில், தமிழ் சினிமாவின் முன்னணி நடன கலைஞர்களுடன், தமிழ்த்திரைத்துறையின் பல முன்னணி இயக்குநர்கள், நட்சத்திரங்களும் பங்கேற்கவுள்ளனர் என்பதை மாஸ்டர் ஸ்ரீதர் தலைமையிலான நடக் கலைஞர்கள் கூடி அறிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆலன்’ - காதலுக்காக, காவிய காலத்தின் முனிவனைப்போல் நீண்ட ஜாடா முடி, தாடி ஆகியன வளர்ந்ததைக்கூட அறியாமல் கொடைக்கானலிலிருந்து ஓர் இளைஞன் காசி, ரிஷிகேஷ் எனத் தன்னிலை மறந்து நீண்ட பயணம் புறப்படுகிறான். காதலையும் அது உருவாக்கும் உணர்வு நிலைகளையும் சித்தரிக்கும் ‘ஆலன்’ படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தை ஏற்று கதாநாயகனாக நடித்திருக்கிறார் ‘எட்டுத் தோட்டாக்கள்’ வெற்றி.

இதில் அவர் தேடிச் செல்லும் அவர் மனதை வென்ற பெண்ணாக, ஜெர்மனியைச் சேர்ந்த தபேயா மதுரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். 3 எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிவா. ஆர். தயாரித்து, இயக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை விஜய்சேதுபதி வெளியிட்டிருக்கிறார். படம் குறித்து இயக்குநர் கூறும்போது: “வாழ்வின் எதிர்பாரா நிகழ்வுகளில் காதலும் ஒன்று. அது ஒருவனை ஒரு நதியாக அடித்துச் செல்லும் பயணமாக உருமாறுகிறது. அதில் ஆன்மிகமும் இணைந்துகொள்ளும்போது அது ஆத்மார்த்தமான பயணமாக மாறிவிடும் இல்லையா? ஆலனின் பயணமும் அப்படிப்பட்டதுதான்” என்கிறார்.

கர்நாடகாவில் ‘மார்கழியில் மக்களிசை’ - தலித்திய சினிமா ஒரு போக்காகத் தமிழ்த் திரையுலகில் தொடர்வதற்கு எல்லா வகையிலும் தன்னால் இயன்ற பங்களிப்பினை அளித்து வருகிறார் இயக்குநர் பா.ரஞ்சித். சினிமாவுக்கு வெளியே தனது நீலம் பண்பாட்டு மையம் அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு மாற்று மக்கள் கலை நிகழ்வுகளை நடத்தியும் கிராமிய, புதிய கலைஞர்களை ஆதரித்தும் அவர்களை அறிமுகப்படுத்தியும் வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு டிசம்பர் மாதத்தில் சென்னையில் ‘வானம் கலை விழா’வைத் தொடங்கி சில ஆண்டுகள் நடத்தினார். அதில் ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ’ என்கிற தலைப்பில் மக்களிசைப் பாடல்களை இசைத்த கலைஞர்கள் இன்று திரையுலகிலும் தனியிசை உலகிலும் பிரபலமான கலைஞர்களாக உள்ளனர். இதற்கிடையில் இந்த ஆண்டு ‘மார்கழியில் மக்களிசை’ என்கிற தலைப்பில் ‘வானம் கலைத் திருவிழா’வைத் தமிழர்கள் அதிகமாக வசித்து வரும் கர்நாடகத்தின் கோலார் தங்க வயலிலும் ஓசூரிலும் நடத்துவதோடு சென்னையிலும் நடத்துகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x