Published : 19 Jan 2018 10:44 AM
Last Updated : 19 Jan 2018 10:44 AM
திலீஷ் போத்தன் இயக்கத்தில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’. ப்ரியர்தர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்’ என்ற தலைப்பில் உருவாகியிருக்கிறது இதன் தமிழ் மறு ஆக்கம். பகத் ஃபாசில் ஏற்றுநடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்… அவருடன் ஒரு பேட்டி..
‘மகேஷிண்ட பிரதிகாரம்’ தமிழ் மறு ஆக்கம் எப்படிச் சாத்தியமானது?
இயக்குநர் அஹ்மத் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின் சிடியை என்னிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். அப்படத்தைப் பார்த்துவிட்டு ‘சூப்பரா இருக்கு, ஆனால் தமிழுக்கு சரிப்பட்டு வருமா எனத் தெரியவில்லை’ என்று சொன்னேன். பிறகு சில மாதங்கள் கழித்து ப்ரியதர்ஷன் சார் அழைத்தார். “ ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறீயா?” என்றார். நான் ‘யார் இயக்குநர்’ என்றபோது “நான் தான்” என்றார். அவர் அப்படிச் சொன்ன அடுத்த நிமிடம் “சார்… இந்தப் படமல்ல, எந்தப் படமென்றாலும் நீங்கள் இயக்கினால் நான் நடிப்பேன்” என்றேன். இப்படித்தான் ‘நிமிர்’ தொடங்கியது.
தமிழுக்காக மாற்றங்கள் செய்திருக்கிறீர்களா?
மலையாளத்தில் படம் கொஞ்சம் மெதுவாக நகரும். தமிழுக்கு ஏற்றவாறு ப்ரியதர்ஷன் சார் சில காட்சியமைப்புகள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் என்று சேர்ந்திருக்கிறார். கேரளத்தின் இடுக்கியைச் சுற்றி கிறிஸ்தவ மதத்தின் பின்னணியில் மலையாளப் படம் இருக்கும். அதை முழுமையாக மாற்றி தென்காசியைச் சுற்றி இக்கதை நகரும்விதமாக களத்தை மாற்றியிருக்கிறார். முழுக்க ப்ரியதர்ஷன் சாரின் படத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாட்கள் கஷ்டப்பட்டேன். எனக்கு மட்டுமல்ல, படத்தில் நடித்த அனைவருக்குமே நடித்துக் காட்டுவார். அவரை அப்படியே காப்பியடித்தாலே போதும்.
கேமரா ஆன் செய்த உடனே, ஏன் நடிக்க ஆரம்பிக்கிறாய். நீ நீயாகவே இரு. நடிப்பதே தெரியக் கூடாது என்று நிறைய முறை திட்டியிருக்கிறார் ப்ரியன் சார். கண்டிப்பாக மலையாள படத்துடன் ஒப்பிடுவார்கள். அதற்கு ஒன்றுமே செய்ய முடியாது. ப்ரியன் சார் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதைச் செய்திருக்கிறேன். மலையாளப் படம் பார்க்காதவர்களுக்கு சூப்பராக இருக்கலாம், அதைப் பார்த்தவர்களுக்கு இன்னும் நன்றாக நடித்திருக்கலாம் எனத் தோன்றலாம்.
அவருடன் பேசும்போது நிறைய ஆச்சரியப்பட்டேன். எனது அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறார். ‘மிஸ்டர். உதய்’ என்று அழைக்கும் போதெல்லாம், ‘வேண்டாம் சார்.. வாடா.. போடா’ என்றே அழையுங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய இயக்குநர் என்பேன். ஆனால், கேட்க மாட்டார். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் விமான காமெடி காட்சியைப் பற்றியெல்லாம் நிறையப் பேசினார்.
எனது அனைத்துப் படங்களையுமே இந்தக் காட்சியை எப்படிச் செய்திருக்கலாம் என்று நிறைய சொல்லிக் கொடுத்தார். ப்ரியதர்ஷன் சார் - மகேந்திரன் சார் இருவருக்கும் இடையே உட்கார்ந்திருக்கும் போதெல்லாம் திருவிழாவில் காணாமல்போன குழந்தை மாதிரி ஆகிவிடுவேன். ஏனென்றால், இருவருமே ஒருவரை ஒருவர் அவ்வளவு புகழ்ந்து பேசிக் கொள்வார்கள்.
கடந்த ஆண்டில் ஜி.எஸ்.டி.யால் டிக்கெட் கட்டணம் உயர்வு உட்பட பல பின்னடைவுகளைத் தமிழ் சினிமா சந்தித்ததே?
எந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று ட்ரெய்லரை வைத்தே மக்கள் தெளிவாக முடிவு செய்து விடுகிறார்கள். சின்ன படங்கள் நல்ல கதையோடு வரும்போது மக்கள் திரையரங்கத்துக்கு வருகிறார்கள். ‘அருவி’ ஓர் உதாரணம். ஜி.எஸ்.டிக்குப் பிறகு மக்கள் திரையரங்கத்துக்கு வருவது 40% வரை குறைந்திருக்கிறது. டிக்கெட் விலையிலிருந்து மட்டுமே தயாரிப்பாளருக்குப் பங்குத் தொகை வருகிறது. கேண்டீன் மற்றும் பார்க்கிங் கட்டணம் ஆகியவற்றில் பங்குத் தொகை கிடையாது. அதை எல்லாம் வரைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க வேண்டும். இதே நிலை நீடித்தால், நீண்ட நாட்களுக்குத் தமிழ் சினிமா வாழ முடியாது.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், நட்சத்திரக் கலைவிழா என எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லையே ஏன்?
சினிமாவில் இருப்பவர்கள் அனைவருமே அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏற்கெனவே அரசியல், சினிமா இரண்டிலும் இருக்கிறேன். நான் அவர்களோடு சென்றால் தேவையின்றி சர்ச்சைகள் எழும். அதனால் எதிலுமே கலந்து கொள்வதில்லை. எனக்குப் பிடித்த வேலையில் கவனம் செலுத்துகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT