Published : 25 Jul 2014 01:07 PM
Last Updated : 25 Jul 2014 01:07 PM

ஆபத்துக்கு அருகில் ஒரு பெண் இயக்குநர்!

மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தில் இடம்பெற்ற அன்னபூரணி புருஷோத்தமன் கதாபாத்திரத் துக்காகத் தனது நீண்ட கூந்தலைத் துறந்து மொட்டையடித்துக்கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். “என் திரைவாழ்வில் திரும்பவும் கிடைக்கப்பெறாத கதாபாத்திரம்!” என்று வர்ணித்த லட்சுமி, ஒரு குறும்பட இயக்குநராக அடையாளம் பெற்று, பிறகு மலையாளத் திரையுலகின் வழியாகத் தமிழ் சினிமாவின் மேல்தட்டு வர்க்க அம்மாவாக வலம் வந்தார். திரைக்குள் நுழைந்து கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு நட்சத்திரமாக 25 படங்களைக் கடந்து பயணித்தவர், ‘யுத்தம் செய்’ படத்தின் மூலம் யார் இவர் எனத் திரும்பிப் பார்க்க வைத்தார். கடந்த 2012-ல் இவர் இயக்கிய முழு நீளத் திரைப்படமான ‘ஆரோகணம்’ ஸ்பெஷல் ஜூரி விருது பெற்றது.

இந்தப் படத்தில் ‘பைபோலர் டிஸ் ஆர்டர்’ பிரச்சினையால் அவதியுறும் ஒரு தாயின் உணர்ச்சிகரமான போராட்டத்தைக் காட்சிப் படுத்திய விதத்துக்காக விமர்சகர்கள், ரசிகர்கள் ஆகிய இரு தரப்பினராலும் பாராட்டப்பட்டவர். தனது திரை இயக்கத்துக்கு ஒரு சின்ன இடைவெளி எடுத்துக் கொண்டவர், தற்போது ‘நெருங்கிவா.. முத்தமிடாதே’ என்ற தலைப்பில் 65 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு செய்து மொத்தப் படத்தையும் முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். பெரிய ஆச்சரியம், ஆண் இயக்குநர்களே கைவைக்கத் தயங்கும் ‘ரோடு மூவி’ யாகத் தனது படத்தை உருவாக்கியிருக்கிறார்.

“இந்தப் படம் பற்றி எரியக் கூடிய ஒரு முக்கிய பிரச்சினையை மையப்படுத்தி இருந்தாலும், ஒரு க்ரைம் த்ரில்லராக இதை முழுமை யான வணிக சினிமாவாக இயக்கியிருக்கிறேன். பெண்களால் வெற்றிகரமான வணிக சினிமாவை இயக்க முடியாது என்ற மூடநம்பிக்கையை இந்தப் படம் தகர்க்கும்” என்று சொல்லும் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்தப் படத்தை ‘டிராவல் மூவி’ என்று அழைக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.

“ ஐந்து நாட்கள் முழுமை யான பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அந்த ஐந்து நாட்கள்தான் கதையின் முக்கியமான காலம். இந்த நேரத்தில் திருச்சியில் தொடங்கும் கதை தேசிய நெடுஞ்சாலைகளில் பயணித்து காரைக்காலில் முடியும். பெட்ரோல் கிடைக்காத நாட்கள் என்றால், சாலையில் ஒரு வாகனம் கூட வரக் கூடாது அல்லவா?” அதுதான் எங்களுக்கு இருந்த மிகப்பெரிய சவால் என்று சொல்லும் லட்சுமி கதையின் ஒரு பகுதியைக் கடலிலும் படம்பிடித்துத் திரும்பியிருக்கிறார். இந்தப் படத்தில் இவர் அறிமுகப் படுத்தும் சபீர் தமிழ் சினிமாவைக் கலக்கப்போகும் கதாநாயகன் என்கிறார.் பியா கன்னட நாயகி ஸ்ருதி ஹரிகரன் என்று இரண்டு கதாநாயகிகள். வெங்காய மூட்டைகள் ஏற்றிய லாரியும் கதையில் முக்கியப் கதாபாத்திரம். நா. முத்துக்குமார், செபு ஜோசப்பு என்று கடந்த ஆண்டு தேசிய விருதுபெற்ற இரண்டு கலைஞர்களை இந்தப் படத்தில் பங்கேற்க வைத்திருக்கும் லட்சுமி, “ சாலைகளில் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடந்தபோது ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனையைப் போல வேகம் காட்டினார். பலமுறை ஆபத்துக்களுக்கு அருகில் போய்விட்டு வந்தார்” என்று இயக்குநரைக் குறித்து ஆச்சரியப்படுகிறார் ஒளிப்பதிவாளர் வினோத் பாரதி. இவர் கன்னடம், மலையாளத்தில் முக்கிய ஒளிப்பதிவாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x