Published : 27 Oct 2023 06:15 AM
Last Updated : 27 Oct 2023 06:15 AM
ஓவியராகத் தன் வாழ்வைத் தொடங்கிய டிராட்ஸ்கி மருது, 1980களிலேயே தமிழ் சினிமாவில் அனிமேஷன், சிறப்புக் காட்சி அமைப்புகளை (SFX) உருவாக்குவதில் முன்னோடியாகச் செயல்பட்டவர். நாசர் இயக்கத்தில் வெளிவந்த ‘தேவதை’ தொடங்கிக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய 32 க்கும் அதிகமான படங்களுக்கு எஸ்.எஃப்.எக்ஸ் காட்சிகளை உருவாக்கியவர். இத்துறையில் இவர் பயிற்சி தந்து உருவாக்கிய மாணவர்கள் பெரும் வெற்றியாளர்களாகத் தென்னிந்திய சினிமாவிலும் பாலிவுட்டிலும் வலம் வர, இன்னொரு பக்கம் தொடர்ந்து களமாடும் ஒரு நவீன ஓவியராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்.
வெகுஜன ஊடகத்துக்கான ஓவியத் தேவைகளையும் சமரசமின்றி நிறைவேற்றி வரும் அதேநேரம், ஊதியம் பெற்றுக்கொள்ளாமல் ரவிசுப்பிரமணியன் போன்ற பல இயக்குநர்களின் ஆவணப்படங்கள், குறும்படங்களுக்கும் தனது கலைப் பங்களிப்பைத் தரமாக நல்கி வருபவர்.
ஓவியர், உலகளாவிய ஓவியச் சேகரிப்பாளர், வடிவமைப்பாளர், கணிணி வரைகலைக் கலைஞர், கலை இயக்குநர், எழுத்தாளர், பேச்சாளர் என கலைப் பரப்பின் திசைதோறும் தன் சிறகுகளை விரித்துப் பறக்கும் மருது 70ஆம் அகவையில் அடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
கணிளின் வழியான சாத்தியங்களை, ஓவியக் கலையோடு இணைத்து நீங்கள் தமிழ் சினிமாவுக்குச் செய்த முதன்மையான பங்களிப்பாக எதைக் கருதுகிறீர்கள்? - ‘டைட்டில் அனிமேஷன்’, ‘ஸ்பெஷல் எஃபெக்ட்’ போன்ற விஷயங்களைத் திரைப்படங்களில் முதலில் நண்பர்களுக்காகச் சிறு சிறு அளவில் செய்யத் தொடங்கினேன். முழுமையாக டிஜிட்டல் காட்சிகளில் பணியாற்றியது நாசரின் ‘அவதாரம்’ திரைப்படத்தில்தான். ஆனால் அதையும் அப்போது முழுவீச்சில் செயல்படுத்த முடியவில்லை.
காலத்துக்குச் சற்று முன் பிறந்துவிட்டோமென நினைக்கிறேன். இருக்கட்டும். இருந்தும் நம் தமிழின் மரபார்ந்த கலையை, அனிமேஷனை, தந்திரக் காட்சிகளை நவீனத்தோடு கணினியின் டிஜிட்டல் ஃபார்மெட்டோடு புனைந்து தென்னிந்திய சினிமாவில் முதல் முறையாகச் செய்து பார்த்தேன் என்கிற நியாயமான பெருமிதம் எனக்கு உண்டு.
பங்களித்தவர் என்பதைத் தாண்டி, இத்துறை யில் பலரையும் பயிற்றுவித்தவர் என்கிற முறையில் உங்களது மாணவர்களும் சாதித்து வருகிறார்கள் இல்லையா? - ஆமாம்! கலை பயிற்றுவிக்கப்படும்போதுதான் அதன் தொடர்ச்சியும் வளர்ச்சியும் பரிசோதனை முயற்சிகளும் அதை வாழ்விக்கின்றன. என்னிடம் படித்த மாணவர் வெங்கி, இயக்குநர் ஷங்கருடைய படங்களுக்கு அனிமேஷன் வேலைகளைச் செய்தார். அப்போது இந்தத் துறையில் நிறைய வேலைகள் இருந்ததனால் ஆர்வமுள்ள ஓவியக் கல்லூரி மாணவர்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்துப் பயிற்சியளித்து வளர்த் தெடுத்தோம்.
கூடவே வேலைவாய்ப்புகளுக்கு வழிகாட்டினோம். என்னிடம் பயிற்சி பெற்ற 60 பேர் இன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்கிறார்கள். உண்மையில் தமிழ்நாடுதான் இந்தத் துறையின் ‘ஹப்’பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் நிலத்தை விட்டு மும்பை, ஹைதராபாத் என்று இந்தத் துறை இடம்பெயர்ந்து போனதற்குக் காரணம் அந்தக் காலத்தில் இத்துறையில் இயங்கிய சில பெரும் நிறுவனங்கள் செய்த செயல்கள்தான். இல்லையெனில் அனிமேஷன் துறைக்கும் தமிழ்நாடு மைய கேந்திரமாக விளங்கி இருக்கும்.
எஸ்.எஃப்.எக்ஸ் - வி.எஃப்.எக்ஸ், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன் போன்றவை இந்திய சினிமாவில் பிரபலமடையாத 80களிலேயே இத்துறையில் முன்னோடியாகச் செயல்பட வேண்டும் என்று உங்களைத் தூண்டியது எது? - எண்பதுகளின் நடுவில் தற்செயலாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘How’ என்கிற பத்திரிகை கிடைத்தது. அதில் வெளியாகியிருந்த ‘கம்ப்யூட்டர் - ஓவியர்களின் நண்பன்’ என்கிற கட்டுரையையும் அதில் உள்ள செய்முறை விளக்கப் படங்களையும் பார்த்ததும் படித்ததும் எனக்குப் பிரமிப்பைத் தந்தது.
அக்கட்டுரை வாசிப்பு இத்துறையில் இறங்க எனக்கொரு திறப்பாக அமைந்தது. அது பற்றித் தொடர்ந்து தெரிந்துகொள்ள முற்பட்டு, புரியாத கோடிங் புத்தகங்களையும்கூட வாங்கி படிக்க முற்பட்டேன். தொடர்ச்சியான தேடலுக்குப் பின் நானும் கம்ப்யூட்டரோடு இணைந்து என் கலைப் பணியைச் செய்யத் தொடங்கினேன்.
வெகு விரைவாக அக்கலை வசப்பட்டதும் என்னை அப்டேட் செய்துகொள்வதிலும் நேரம் செலவிட்டேன். எந்த அளவுக்கு என்றால் அந்தக் காலத்தில் நான் கணிப்பொறிக்காகச் செலவழித்த பணத்தில் இரண்டு கிரவுண்ட் சென்னையில் இடம் வாங்கி இருக்கலாம். அந்த அளவுக்குப் பணத்தை நான் அதில் செலவழித்தேன். சக கலைஞர்கள் நான் வரைவதை கம்ப்யூட்டர் வரைவதாக கேலி பேசிக் கொண்டிருந்த காலத்தில், நான் கணிப்பொறியில் பேனாவால் வரைந்து கொண்டிருந்தேன்.
அதை அப்போது அவர்களுக்குப் புரியவைக்க முடியவில்லை. பத்திரிகைகளுக்கு படத்தை வரைந்து நேரில் கொண்டு போய் ஓவியர்கள் கொடுத்த காலத்தில், சதுரமான பிளாப்பி டிஸ்குகளிலும் மின்னஞ்சலிலும் நான் படங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். முதலில் விகடனில் எனது இல்லஸ்ட்ரேஷன் வந்தபோது இது முழுக்க முழுக்க கணினி கொண்டு வரையப்பட்ட சித்திரம் என்கிற குறிப்போடு அச்சாகியது.
ஒரு முழுநேர ஓவியர் திடுதிப்பென எப்படி உங்களுக்குத் தொடர்பில்லாத திரைத் துறைக்குள் நுழைந்தீர்கள்? - திரைத் தொடர்புங்கறது என் பால்ய காலம் முதல் என் கூடவே வருகிறது. நான் சிறு வயதில், அதாவது ஐம்பதுகளில் நான் பார்த்த திரைப்படங்களும் காமிக்ஸ் புத்தகங்களும் மதுரை ரீகல் டாக்கீஸ் திரையரங்குக்கு என் தந்தையார் என்னை அழைத்துச் சென்று காண்பித்த முழு நீள அனிமேஷன் படங்களும்தான் அன்று விதையாக இருந்த எனக்குள் பெய்த நல்மழை. இன்னொரு பக்கம் நாடக உலகிலும் திரைப்படங்களிலும் அன்று இயங்கிவந்த கார்மேகம், எம்.எஸ். சோலைமலை ஆகியோர் எனது தாத்தாக்கள்.
நாடகங்களிலும் திரைப்படங்களில் அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய எஸ்.எஸ். ராஜேந்திரன், எனது ஒன்றுவிட்ட சகோதரர். அதனால் படப்பிடிப்புகளுக்குச் செல்வதும் நடிகர் நடிகைகளைப் பார்ப்பதும் அந்த வயதில் எனக்கு எளிதாக நிகழ்ந்தது. இந்த பின்னணியிலிருந்தும்தான் நான் வந்தேன்.
திடுதிப்பென்று நுழையவில்லை. தவிர, அப்போது சென்னையில் ஒரு பன்னாட்டு விளம்பர நிறுவனம் விளம்பர அனிமேஷன் படம் செய்ய வேண்டும் என என் மீதும் எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் மகன் சாரங்கன் மீதும் நம்பிக்கை வைத்து அழைத்து, யோசிக்காமல் அந்த வேலையை எங்களிடம் கொடுத்துவிட்டது. அந்த இரண்டு நிமிடப் படத்துக்கு நான் மூன்று மாதங்களுக்கு மேல் வேலை பார்த்தேன்.
இந்தத் தோற்றுவாய் வழியாகத்தான் நான் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தேன். என் ஓவியங்களை அசைய வைத்துக் காண்பித்துவிட வேண்டுமென்பதில் இருந்த ஒரு தீராத மோகம்தான் சினிமாவில் மாய தந்திரக் காட்சிகளைக் காண்பிக்க என்னை இழுத்துக் கொண்டுவந்தது என்று சொல்லலாம்.
இன்று எல்லாப் படங்களுக்கும் ‘கிராஃபிக்ஸ்’, ‘விஷுவல் எஃபெக்ட்ஸ்’ அவசியத் தேவை யாக இருக்கிறதா? - என்னுடைய படங்களில் கிராஃபிக்ஸுக்கு இடமில்லை என்று இதையே பாரதிராஜா என்னிடம் வேறு மாதிரியாகச் சொன்னார். சார். மாய தந்திரக் காட்சிகளுக்கு வேண்டுமானால் உங்கள் படங்களில் இடமில்லாமல் இருக்கலாம் ஆனால், காதலியும் காதலனும் அமர்ந்திருக்கும் போது உங்களுக்கு நிலா வேண்டுமென்றால் அதை எங்கள் அனிமேஷன்தான் காட்சியின் சட்டகத்தில் கலையழகுடன் ஒட்டித் தரவேண்டும் என்று சொன்னேன்.
அதனால், எல்லாப் படங்களுக்கும் கிராஃபிக்ஸ், வி.எஃப்.எக்ஸுக்கு இடமில்லை என்று சொல்லிவிட முடியாது. கற்பனைக்கு எல்லைகள் ஏது? இயக்குநர் நினைத்ததை அதற்கும் மேலாக ‘எலிவேட்’ செய்து காட்டுவதே இத்துறையின் பலம். இதனால் பார்வையாளருக்குக் காட்சி அனுபவம் மேம்பட்ட உணர்வைக் கொடுக்கிறது. ஆனால், பெரும்பாலான இயக்குநர்களுக்கு இந்தத் துறையின் முழு வீச்சு குறித்த சரியான புரிதல் இல்லை என்பதுதான் உண்மை. ‘Game of thrones’, ‘Lord of the rings’, ‘vikings’ போன்ற பல ஐரோப்பியப் படைப்புகள் அனிமேஷனில் எட்டிய உயரங்களைப் பார்த்து நாமும் அதை எட்டமுடியும் என்பதைக் காட்ட வேண்டும்.
அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் என்பது சினிமாவில் மட்டுமல்ல; இன்றைக்கு மருத்துவம், கல்வி என நமது அன்றாட வாழ்க்கையில் அனைத்தோடும் உறவாடத் தொடங்கிவிட்டது. அன்றைக்கு ஒரு அனாடமி படம் வரைந்தோ அல்லது நேரில் பார்த்தோதான் மனித உறுப்புகளை அதன் செயல்பாட்டை அறிந்துகொள்ள முடியும். இன்று அனிமேஷன் அதை நுணுக்கமான விளக்கக் காட்சிப் படமாக உங்கள் கண் முன் வைக்கிறது.
அன்றைக்கு ஒரு கட்டிடம் எப்படி இருக்கும் என்று நீங்கள் கற்பனையில்தான் பார்க்க முடியும். ஆனால் இன்று ஒரு கணிப்பொறியாளர் அந்த கட்டத்துக்குள்ளேயே உங்களைப் பயணிக்க வைத்து விடுகிறார். கல்வி மேம்பாட்டுக்கு இந்தத் துறை செய்திருக்கிற காரியங்கள் கற்பனைக்கு எட்டாதவை. இத்தனை ஆண்டு அனுபவத்திலிருந்து எல்லாக் கலைஞர்களுக்குமே ஒன்றே ஒன்றுதான் சொல்லுவேன்.
உங்களை அன்றாடம் புதுப்பித்துக்கொள்ள ஒரு நதியைப் போல் நகர்ந்துகொண்டே இருங்கள். மறுத்தால் காலம் உங்களை நினைவுச் சின்னமாக்கிவிட்டு அப்பால் நகர்ந்து போய்விடும். பழைய தொழில்நுட்பத்தை மறக்க வேண்டாம், அதற்காகப் புதிய தொழில்நுட்பத்தை ஒதுக்க வேண்டாம். மரங்களைப் பாருங்களேன். அன்றாடம் தேவையற்றதை உதிர்த்தும் புதிதாய் துளிர்த்தும் காற்றுக்கும் அசைந்து களி கொள்வதில்லையா? இதைவிட என்ன பாடம் வேண்டும் நமக்குச் சொல்லுங்கள்.
- jesudoss.c@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT