Published : 15 Dec 2017 10:48 AM
Last Updated : 15 Dec 2017 10:48 AM
இ
யக்குநரும் நடிகருமான ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் கனடிய - இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நேத்ரா’. ‘துப்பறிவாளன்’ படத்தில் வில்லனாக நடித்துக் கவர்ந்த வினய், தமன்குமார், சுபிஷா உட்படப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கனடா நாட்டின் டொரண்டோ நகரில் நடந்தது. இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கும் ஸ்ரீகாந்த் தேவா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நடிகர் தமன்குமார் உட்படப் படக்குழுவைச் சேர்ந்த பலர் டொரண்டோவுக்கு வருகை தந்திருந்தனர். படத்தின் முதன்மைத் தயாரிப்பாளர்களான ஸ்வேதா சினி ஆர்ட்ஸ் எஸ். பரராஜசிங்கமும் - நிரோதினியும், ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழுவின் இயக்குநர்களில் ஒருவரான எழுத்தாளர் அ.முத்துலிங்கம் முன்னிலையில் இசைத்தட்டை வெளியிட்டனர்.
சில்வியா ஃபிரான்சிஸின் அக்னி வாத்தியக்குழு இசைக்க, ஸ்ரீகாந்த் தேவாவும் சூப்பர் சிங்கர் புகழ் ஜெஸிக்காவும் படத்தில் இடம்பெற்ற பாடல்களை மேடையிலேயே பாடி அசத்தினார்கள். “ ‘நேத்ரா’ திரைப்படம் திரையரங்குகளில் பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கிறது. அப்போது ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு எங்கள் படக்குழு கணிசமான தொகையை நன்கொடை வழங்க இருக்கிறது” என்று பார்வையாளர்களின் பலத்த கரவொலிக்கு நடுவே அறிவித்தார் தயாரிப்பாளர்.
படத்தில் நடித்த 27 கனடிய நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி கூறிப் பேசினார் இயக்குநர் வெங்கடேஷ். அப்போது “ நான் ஒருமுறை கடுமையான பனிக்காலத்தில் கனடாவில் வந்து இறங்கினேன். அப்போது நான் சந்திக்க வேண்டியவர் இருபது நிமிடம் தாமதமாக வந்தார். அந்தக் கடுங்குளிரில் விமான நிலையத்துக்கு வெளியே நான் நடுங்கிக்கொண்டு நின்றபோது இக்கதை உருவானது. கதை காரைக்குடியில் ஆரம்பிக்கிறது. காதலர்கள் ஊரை விட்டுக் கிளம்பி ரகசியமாக கனடாவுக்குப் போகிறார்கள். குளிர் காலத்தின் உச்சத்தில் டொரண்டோ விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்தபோது இவர்களுக்கு உதவி செய்வதாகச் சொன்ன நண்பன் வரவேயில்லை. இந்த இடத்திலிருந்து கதை திரில்லர் ஆக மாறுகிறது” என்று சஸ்பென்ஸ் வைத்துப் பேசினார்.
பரராஜசிங்கம் - கனடாவில் பிரபலமான ரத்தினக்கல் வர்த்தகர். இதற்கு முன்னர் ‘மெதுவாக உன்னைத் தொடு’, ‘மலரே மௌனமா’ ஆகிய இரு படங்களைத் தயாரித்தவர். இவருடைய மனைவி நிரோதினி புகழ்பெற்ற நிரோ டான்ஸ் கிரியேஷன்ஸ் நிகழ்கலைக் குழுவின் இயக்குநர். இருவரும் பொதுநல சேவையிலும் ஈடுபாடுள்ளவர்கள்.‘நேத்ரா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குக் கவனம் கிடைக்கும் விதமாக நடத்தினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT