Published : 01 Dec 2017 11:15 AM
Last Updated : 01 Dec 2017 11:15 AM

குடும்பத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டேன்! - நிவின் பாலி பேட்டி

லையாளப் படவுலகைத் தாண்டி தென்னிந்திய சினிமா மொத்தமும் கவனிக்கப்படும் நாயகனாக உருவாகியிருக்கிறார் நிவின் பாலி. ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான அவர் ‘பிரேமம்’ தந்த புகழின் வழியாக இருமொழிப் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதில் ஒன்று அவரது நடிப்பில் தற்போது வெளியாகவிருக்கும் ‘ரிச்சி’. “வழக்கமாக எல்லா மொழிப் படங்களும் நிறையப் பார்ப்பேன்.

இங்கே விஜய் சேதுபதி வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’ படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றத்தைப் பார்த்தபோது மிரண்டேன். இந்த மாதிரியான படங்களில் நாம் எப்போது நடிக்கப் போகிறோம் என நினைத்தேன். எனக்கும் அதுபோல அமையத் தொடங்கியிருப்பது எதிர்பாராத ஆச்சரியம்” என்று வியப்பு கலந்த தொனியுடன் பேசத் தொடங்கினார் நிவின் பாலி.

‘ரிச்சி’ படத்தை எதற்காகத் தேர்வு செய்தீர்கள்?

இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் ‘உலிதாவாரு கண்டந்தே’ (Ulidavaru Kandanthe) என்ற கன்னடப் படத்தின் டி.வி.டியைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். தமிழில் மறு ஆக்கம் செய்யப் போகிறேன், நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். மலையாளத்தில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை. வில்லத்தனம் கலந்த ரவுடி கதாபாத்திரம் என்பதால் ஒப்புக்கொண்டேன். இப்படத்துக்கு நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மறு ஆக்கம் என்றால் பெரிய மெனக்கெடல் இருக்காதே?

‘உலிதாவாரு கண்டந்தே’ கன்னடப் படத்தைவிட இன்னும் சிறப்பாகச் செய்துவிட முடியாது. அந்தப் படத்தின் இயக்குநர் ரக்‌ஷித்தின் பாணி என்பது எல்லாவிதத்திலும் வித்தியாசமானது. இருந்தாலும் அப்படியே காட்சிக்குக் காட்சி மறு ஆக்கம் செய்யவில்லை. தமிழுக்கு ஏற்ப முழுமையாக மாற்றியிருக்கிறோம். ரக்‌ஷித் இப்போது இந்தப் படத்தைப் பார்த்தால் புதுப்படம் போல்தான் தெரியும். சில இடங்களில் மட்டுமே கன்னடப் படத்தின் சாயல் இருக்கும். ஒரு கதாபாத்திரத்தை இரண்டு நடிகர்களிடம் கொடுத்து நடிக்க வைத்தால் எப்படி வேறுபடுகிறது என்று ‘ரிச்சி’யில் பார்க்க முடியும்.

தமிழ்த் திரையுலகம் பற்றி உங்கள் கருத்து என்ன?

திரையுலகில் அறிமுகமானபோது, தமிழில் நடிக்க வேண்டும் என எண்ணினேன். கேரளத் திரையுலகிலிருந்து காணும்போது, தமிழ்த் திரையுலகம் பெரியது. திறமைசாலிகளை வரவேற்பார்கள். இப்படித்தான் ஒரு படம் இருக்க வேண்டும் என்ற எந்தவொரு கட்டுப்பாடும் இருக்காது. மற்ற மாநிலக் கதாநாயகர்கள் தமிழில் நடித்தால் அவர்களை வரவேற்கும் நல்ல உள்ளங்கள் கொண்டவர்கள் தமிழ்ச் சகோதரர்கள். அவர்களிடமிருந்து என்னை நான் பிரித்துப் பார்க்கவில்லை. இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனோடு இணைந்து ‘நேரம்’ படத்தைக் கொடுத்தேன். தமிழில் நூறு நாட்கள் ஓட வேண்டும் என நினைத்தோம். ஆனால், அது நடக்கவில்லை. இரண்டாவதாக இணைந்த ‘பிரேமம்’ தமிழ்நாட்டில் சில திரையரங்குகளில் இருநூறு நாட்கள் ஓடியது. எதையுமே நாங்கள் திட்டமிடவில்லை.

பொறியாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த உங்களுக்கு நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தது?

கடந்த 2008-ம் ஆண்டுவரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். தினமும் ஒரே மாதிரியான வேலை ஒரு கட்டத்தில் போரடிக்கத் தொடங்கியது. எனது வாழ்க்கை அப்படி இருக்கக் கூடாது என நினைத்தேன். இது என் வாழ்க்கை அல்ல என்ற முடிவோடு மென்பொருள் உருவாக்கும் வேலையைத் தூக்கி எறிந்தேன்.

பிறகு இரண்டு ஆண்டுகள் சும்மா இருந்தேன். அப்போதுதான் நடிப்பைப் பற்றி நண்பர்களோடு பேசத் தொடங்கினேன். அதற்கு முன்பாக, எனக்கும் நடிப்பு ஆசை இருந்தாலும் அதுவொரு ஓரமாக இருந்தது. குறும்படங்கள், சிறு முதலீட்டுப் படங்கள் எனப் பயணித்தே இவ்வளவு தூரம் வந்துள்ளேன்.

சினிமாவுக்காக வேலையை விட்டது பற்றி வீட்டில் எதுவும் சொல்லவில்லையா?

குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டே யாராவது நாயகனாக நடிக்க அழைத்தால் மாறலாம் என்ற எண்ணத்தோடு சுற்றிக் கொண்டிருந்தேன். கடவுளின் ஆசீர்வாதத்தால் நாயகனாக நடித்த முதல் படத்துக்கே நல்ல வரவேற்பு கிடைத்தது. குடும்பத்தினர் ‘சினிமாவா’ என்று முதலில் தயங்கினார்கள். சினிமாவில் முயற்சி செய்து பார்க்கிறேன். எதுவும் சரிவரவில்லை என்றால் மீண்டும் வேலைக்குச் சென்றுவிடுகிறேன் எனக் குடும்பத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டுதான் கேமரா முன்பாக நின்றேன். சினிமா என்னைக் கைவிடவில்லை.

இங்கே நெருங்கிய நண்பர்கள்?

சிவகார்த்திகேயன் எனக்கு நெருங்கிய நண்பர். அவரோடு தொடர்ச்சியாகப் பேசுவேன். விக்ரம் சார், ஜெயம் ரவி, தனுஷ், த்ரிஷா, மஞ்சிமா மோகன் எனப் பலர் இருக்கிறார்கள். சென்னை வரும் போதெல்லாம் யாரெல்லாம் இருக்கிறார்களோ பார்த்துப் பேசுவேன். ‘பிரேமம்’ படத்துக்குப் பிறகு நான் என்ன செய்யப் போகிறேன் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ‘பெங்களூர் டேஸ்’, ‘1983’ போன்ற படங்கள் வெளியானபோது இங்குள்ள நண்பர்கள் கூறும் கருத்துகளைக் காதுகொடுத்துக் கேட்டேன். அதே போன்று ‘ரிச்சி’ பற்றியும் அவர்கள் கூறவுள்ள கருத்துகளுக்காகக் காத்திருக்கிறேன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x