Published : 21 Dec 2017 07:40 PM
Last Updated : 21 Dec 2017 07:40 PM
“தெ
லுங்கில் பேய்ப் படத்தில் நடித்திருக்கிறேன், தமிழில் இதுவே முதல்முறை. ‘பலூன்’ படத்தின் கதையைக் கேட்டவுடன் நடிக்க வேண்டும் என்று தோன்றியது” என உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் அஞ்சலி.
படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் இருந்தாலும் அதில் நீங்கள் நடிக்கத் தயங்குவதில்லையே ஏன்?
நமக்கான சவால் இக்கதையில் என்ன இருக்கிறது, அதைச் செய்துவிட முடியுமா என்றுதான் பார்ப்பேன். படம் முடிந்தவுடன், நாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறோமா என்று யோசிப்பேன். இப்போதுவரை அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நியாயம் செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்.
அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் ராம், சுந்தர்.சி ஆகியோருடன் பணிபுரிந்திருக்கிறீர்கள். புது இயக்குநர்களின் படத்தில் நடிக்கும்போது இருக்கும் சவால் என்ன?
புது இயக்குநர்களின் படத்தில் நடிக்கும்போது, அவர்களுடைய காட்சி அணுகுமுறை புதிதாக இருக்கும். அதன்மூலம் நானும் கற்றுக்கொள்ள முடியும். ஆகவே, புது இயக்குநர்கள் நல்ல கதையோடு வந்தால், இவரால் செய்ய முடியுமா என்று எல்லாம் யோசித்துத் தயங்கியதே இல்லை.
இடையில் கொஞ்ச காலத்துக்கு தெலுங்கில் அதிக கவனம் செலுத்தினீர்களே. அதற்கு ஏதும் தனிக் காரணம் உண்டா?
ஒரே நேரத்தில் தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடிக்க முடியவில்லை. தமிழ்ப் படத்துக்கான படப்பிடிப்பு சென்னையிலும் தெலுங்குப் படத்துக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் நடக்கும். தெலுங்குப் படத்தை முடித்துவிட்டு, தமிழில் நடிக்கத் தொடங்குவேன். ‘பலூன்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது கிடைத்த இடைவெளியில் இரண்டு தெலுங்குப் படங்களை முடித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த மாதிரி கதைகள் அமையும்போது, படங்களை ஒப்புக்கொண்டு பணிபுரிவதில் எனக்குத் தயக்கமில்லை. மீண்டும் தமிழில் நிறைய படங்கள் ஒப்புக்கொள்ள இருக்கிறேன்.
‘கற்றது தமிழ்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ என இயக்குநர் ராம் உங்களுக்கான கதாபாத்திர வடிவமைப்பில் அதிக முக்கியத்துவம் அளிப்பதை எப்படி உணர்கிறீர்கள்?
சினிமா என்றால் என்ன, கேமரா முன்னால் எப்படி நிற்க வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக் கொடுத்தவர் ராம் சார். ‘கற்றது தமிழ்’ படத்துக்கு முன்னால் எனக்கு எதுவுமே தெரியாது. அப்படத்துக்கு டப்பிங் செய்யும்போதுதான், முழுமையாகத் தமிழில் பேசவே கற்றுக்கொண்டேன். ராம் சார் மீது பெரும் மரியாதை உண்டு. குருநாதர் என்பதைத் தாண்டி, அவர் பணிபுரியும் விதம் ரொம்பப் பிடிக்கும். ‘தரமணி’யில் எனக்குச் சின்ன கதாபாத்திரம் என்றாலும், எல்லா விமர்சனங்களிலும் என் பெயர் இடம்பெற்றது. அதற்கு ராம் சாருடைய கதாபாத்திர உருவாக்கம்தான் காரணம். ‘பேரன்பு’ படமும் புதிதாக இருக்கும். அஞ்சலியை யாருமே அப்படிப் பார்த்திருக்க மாட்டார்கள் என்ற வகையில் வடிவமைத்திருக்கிறார்.
உங்களுடைய கதாபாத்திரங்களை எப்படி உள்வாங்கிக்கொள்கிறீர்கள்?
கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் எப்போதுமே நடிக்கக் கூடாது, முடிந்தவரை கதாபாத்திரமாகவே வாழ வேண்டும் என்று நினைப்பேன். இப்போதும் அதைத்தான் பின்பற்றுகிறேன். ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரம் வெவ்வேறாக இருந்தாலும், அஞ்சலி நடித்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் நான் நடிக்கும் படங்கள் இருக்கும். எனது குணாதிசயங்களைக் கதாபாத்திரங்களுக்குள் புகுத்தாமல், கதாபாத்திரங்களுக்குள் நான் சென்றுவிடுவேன். அதுதான் எனது தனித்தன்மை என்று நினைக்கிறேன்.
நடிப்புக்காக ஒரு படம், வணிகப் படத்தில் கதாநாயகி, இன்னொரு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் என வெவ்வேறு வகைகளில் பணிபுரிவது கஷ்டமாக இல்லையா?
சினிமாவில் ஒரு அங்கமாக எப்போதுமே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால், அஞ்சலி நன்றாக நடித்திருக்கிறார் என மக்கள் மனதில் பதிவேன். அந்தக் கதாபாத்திரங்களை ரசித்து நடிப்பேன். கமர்ஷியல் படங்களில் மக்களை மகிழ்விக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இரண்டு படங்களில் மட்டுமே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறேன். அதில் எந்தத் தவறும் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது.
உங்களைப் பற்றிய சர்ச்சைக்குரிய செய்திகள் வரும்போது, அவை அந்த நாளையே பாதிக்குமா?
ஆரம்ப கட்டத்தில் தவறான செய்திகள் வரும்போது மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போது அவற்றை எப்படிக் கையாள்வது என்று தெரியாது. நாளாக ஆகப் பழகிவிட்டது. தவறான செய்திகள் வந்தால் நான் வருத்தப்படுவேன் என்பதற்காக யாரும் எழுதாமல் இருப்பதில்லையே. அச்செய்திகளில் உண்மையிருந்தால்தானே நான் வருத்தப்படுவதில் அர்த்தம் இருக்கும். பிறகு ஏன் நான் கவலைப்பட வேண்டும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT