Published : 08 Sep 2023 06:20 AM
Last Updated : 08 Sep 2023 06:20 AM
ஆண்டு முழுவதும் பல பட விழாக்களைச் சந்தித்து வரும் நகரமாக சென்னை மாறியிருக்கிறது. டிசம்பர் மாதம் நடைபெறும் ‘சென்னை சர்வதேசப் படவிழா’ கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், ‘சென்னை உலக சினிமா விழா’ (Chennai World Cinema Festival) என்கிற தலைப்பில் கடந்த 1 முதல் 3 ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்குப் புதிய உலகப் படவிழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது.
இப்பட விழாவை ஏற்பாடு செய்து, ஒருங்கிணைத்து நடத்தியிருப்பவர், திரை ஆர்வலர்கள் நன்கறிந்த உலக சினிமா பாஸ்கரன். படவிழாவுக்குப் பின் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
சென்னைக்கு மேலும் ஓர் உலகப் படவிழாவுக்கான தேவை இருப்பதாக ஏன் நினைத்தீர்கள்? - சென்னை சர்வதேசப் படவிழா, ஆர்.பி.அமுதன் ஒருங்கிணைத்து வரும் சர்வதேச ஆவணப் படவிழா, தமிழ் ஸ்டுடியோ நடத்தும் சுயாதீன திரைப்பட விழா, குறும்பட விழாக்கள் என்று சென்னையில் நடைபெறும் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் தனித்தன்மை கொண்டவை. வெவ்வேறு லட்சியங்கள் உண்டு.
நான் ‘சென்னை உலக சினிமா விழா’ தொடங்க நினைத்தற்கான காரணம், கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெறும் முக்கிய பன்னாட்டு உலகப் பட விழாக்களுக்கு இடைவிடாமல் பயணித்து வருவதுதான் காரணம். கோவா, கேரளா, புனே ஆகிய நகரங்களில் நடைபெறும் சர்வதேசப் படவிழாக்கள் சற்று அதிகமாகவே மதிக்கப்படுவதற்குக் காரணம், அந்தப் படவிழாக்களின் தரம், படங்களின் தேர்வு, சர்வதேசப் போட்டிப் பிரிவு, சினிமா ரசனைக்கான பயிற்சிப் பட்டறைகள், சுயாதீனப் படங்களை விற்பனை செய்ய சினிமா பஜார் என்று பல அம்சங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படி அவற்றில் உள்ள சிறப்புகளைத் தொகுத்து, அவற்றுக்கு இணையாக சென்னையில் ஓர் உலக சினிமா விழாவை நடத்த வேண்டும் என்று நினைத்தோம். அதையொட்டியே இந்த முதல் முயற்சி.
எப்படி நடத்த வேண்டும் என்பதைத் தாண்டி, உலகத் திரைப்பட விழா ஒன்றை ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கான ஊக்கமும் அனுபவமும் எங்கிருந்து கிடைத்தன? - கடந்த கால அனுபவம்தான் காரணம். மாநிலம் முழுவதும் பல நகரங்களில் நடந்த புத்தக் காட்சிகளில் உலக சினிமாவுக்கென்றே தனி அரங்கம் அமைத்து வெற்றிகரமாக நடத்தினேன். அதன் தொடர்ச்சியாக லாபத்தைக் கவனத்தில் கொள்ளாமல் கோயமுத்தூரில் உலக சினிமா டிவிடி கடை ஒன்றைத் தொடங்கி நடத்தினேன்.
அதன் நீட்சியாகக் கோவை திரைப்பட இயக்கம் தொடங்கி வாரம்தோறும் சிறார் உலக சினிமாக்களையும், பெரியவர்கள் மட்டும் காண வேண்டிய உலக சினிமாக்களையும் திரையிட்டுக் காண்பித்தோம். அந்தச் செயல்பாடே அங்கே மூன்று சிறார் உலகப் படவிழாக்களையும் இரண்டு உலகப் படவிழாக்களையும் நடத்துவதற்கான ஆர்வத்தை வழங்கியது. விழாவை நடத்த தனியார் கல்வி நிறுவனங்கள் அரங்கமும் கோவை ஆனந்தா உணவக உரிமையாளர்கள் நிதியும் அளித்தார்கள்.
பின்னர், சென்னைக்குப் புலம்பெயர்ந்த பிறகு, நண்பர்களுடன் இணைந்து ‘சென்னை முறைசாரா திரைப்பட இயக்கம்’ தொடங்கினேன். வாரந்தோறும் உலக சினிமா திரையிடலைத் தொடர்ந்தேன். தமிழ் சினிமாவில் உலக சினிமா தரத்தில் வெளிவந்த ‘விசாரணை’, ‘கடைசி விவசாயி’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘பரியேறும் பெருமாள்’, ‘டூ லெட்’, ‘சில்லுக்கருப்பட்டி’ தொடங்கிப் பல படங்களின் படைப்பாளிகளுக்குப் பாராட்டு விழா எடுத்தோம். கரோனா பெருந்தொற்று காலத்தில் எங்கள் செயல்பாடுகள் அறவே நின்று போயின.
உலகின் எந்த மொழியிலும் வெளியாகும் உலக சினிமாக்களை விஞ்சும் அளவுக்குத் தமிழில் உலக சினிமாக்கள் பெருக வேண்டும், வணிக சினிமாவைக் கொண்டாடும் அதே ரசிகர்கள், தமிழில் வெளியாகும் உலக சினிமாக்களையும் ஆதரிக்க வேண்டும் என்றால், அதற்கு சினிமா ரசனைப் பயிற்சியைத் தரும் சமகால உலக சினிமாக்களை இன்றைய படைப்பாளிகளும் மாணவர்களும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. அதைச் செய்யவே ‘சென்னை உலக சினிமா விழா’வை முன்னெடுக்க வேண்டிய தேவை உருவானது.
இன்று ஓடிடி தளங்களிலும் பிரத்யேக செயலிகள் வழியாகவும் உலக சினிமாவைக் காண முடியும். அதிலிருந்து சினிமா ஆர்வலர்களை எப்படி ஈர்க்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? - உலக சினிமா பார்க்கும் அனுபவத்தைத் திரைப் படவிழாக்கள் உருவாக்கித் தரும் விதமே அலாதியானது. ஒத்த ரசனையுடைய படைப்புகள், படைப்பாளிகள், பார்வையாளர்கள் ஒன்றுகூடுவது உலகப் பட விழாக்களில் மட்டும்தான். பக்தர்களுக்கு சபரி மலை, திருப்பதி போன்ற இடங்களுக்கு ஆண்டுதோறும் போனாலும் சலிக்காது.
அந்தப் பயணத்துக்காக ஆண்டு முழுக்க எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். என்னைப் போன்ற சினிமா பக்தர்களும் திரைப்பட விழாக்களுக்குச் செல்வதற்குத் தவமிருந்து செல்வோம். எனவேதான் அறிவியலும் தொழில்நுட்பமும் இணையம் வழியாக சினிமாவைக் கொண்டு வந்து குப்பைபோல் குவித்தாலும் வேறு எங்கும் காண முடியாத படைப்புகளுக்கான மேடையாக விளங்கும் திரைப்பட விழாக்களின் வசியம் குறையவில்லை. ஓடிடியிலும் செயலிகளிலும் 5 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த உலக சினிமாக்களில் வெகு சிலவற்றைத்தான் காண முடியும். பிரிமியர்களைக் காணவே முடியாது.
அதேபோல், நாங்கள் நடத்திய ‘சென்னை உலக சினிமா விழா’வின் தலைமைப் பொறுப்பில் உள்ள அனைவரும் எப்போதும் போல் ஆடையணிந்து காட்சி தந்தோம். பார்வையாளர்களிடமிருந்து எங்களை விலக்கி வைக்காமல் நெருக்கமாக உணர வைத்தோம். லுங்கி அணிந்து தயக்கத்துடன் வந்த பார்வையாளரை கை நீட்டி வரவேற்று இருக்கை அளித்தோம். அரங்கில் அமர்ந்து பார்க்க, மது அருந்தியிருக்கக் கூடாது என்பது மட்டுமே கட்டாய நிபந்தனையாக இருந்தது.
சென்னையைத் தாண்டி உலகத் திரைப்பட விழாக்கள் சிறு ஊர்களுக்கும் செல்வது எப்போது? - அந்தக் காலம் வந்துவிட்டது. வரும் காலத்தில் தமிழ்நாட்டின் சிறிய ஊர்களிலும் திரைப்பட விழாக்கள் நடக்கும். அப்போது மக்களுக்காகப் படைக்கப்பட்ட சினிமாக்கள் மக்களைச் சென்றடையும். மாஸ் மசாலா படம் பார்த்து நுனிப்புல் மேய்பவர்களால் தரமான சினிமாக்களை அடையாளம் கண்டு கொள்ள இயலாது.
அதனால்தான் உலகப் பட விழாக்களின் எண்ணிக்கை கூடவேண்டிய தேவை ஏற்படுகிறது. ‘ரன் லோலா ரன்’ படம் வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழ் சினிமாவில் ‘மாநாடு’ போன்ற ஒரு படத்தை எடுக்க முடிந்தது. கேரளாவில் உள்ள பெரும்பாலான படைப்பாளிகளில் உலக சினிமாக்கள் தாங்கி வரும் உன்னத படைப்பாக்கத்தால் தாக்கம் பெற்று தரமான படங்களைத் தந்து வருகிறார்கள்.
’சென்னை உலக சினிமா விழா’ முதல் பதிப்பின் சிறப்புகள் பற்றிக் கூறுங்கள்.. அது மிகப்பெரிய பட்டியல். முதல் திரையிடல் பெண் இயக்குநர் படைப்பாக இருக்க வேண்டும் என முடிவுசெய்து இயக்குநர் நித்யா கோபாலகிருஷ்ணன் உருவாக்கிய ‘டூ வேர்ல்ட்’ எனும் குறும்படத்தைத் திரையிட்டோம். ‘பெஸ்டிவல் வெர்ஷன்’ என்கிற பிரிவில் ‘வெள்ளிமலை’ என்கிற 120 நிமிடங்கள் ஓடக்கூடிய படத்தை 61 நிமிடங்களாகச் செதுக்கி விருதுகளைப் பெறும் வடிவத்தில் திரையிட்டோம். எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் தலைவர் திரைக்கலைஞர் ராஜேஷ் தொடக்க விழாவுக்குத் தலைமை ஏற்றார். முறைசாரா திரைப்பட நட்சத்திரம் ஷீலா ராஜ்குமார் கலந்துகொண்டார்.
முழுநீள ‘ஓபனிங் பிலிம்’ஆக ‘நாடு’ என்கிற படத்தை ‘வோர்ல்ட் ப்ரீமியர்’ பிரிவில் திரையிட்டோம். சிறுவர் உலக சினிமா வரிசையில் திரையிடப்பட்ட ‘முகிழ்’, ‘சிறுவன் சாமுவேல்’ ஆகிய படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன. ‘கற்பரா’, ‘கூழாங்கல்’ போன்ற சர்வதேச அளவில் விருது பெற்ற நம் படங்களின் உருவாக்கத்தில் உழைத்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் விக்னேஷ் குமுளை, ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத் ஆகியோர், ‘குறைந்த செலவில் நிறைவான திரைப்படங்களை உருவாக்குதல், திரைப்பட விழாக்களின் தன்மை, முக்கியத்துவம்’ என பல அம்சங்களை விளக்கி பயிற்சி பட்டறை நடத்தினார்கள். ஈழத்தமிழர் படைப்பு என்கிற பிரிவில் இயக்குநர் மதி சுதா இயக்கத்தில் வெளிவந்த ‘வெந்து தணிந்தது காடு’ திரையிடப்பட்டது.
அப்படத்தின் திரையிடலில் எழுத்தாளர் ஷோபா சக்தி கலந்துகொண்டு படம் முடிந்ததும் பாராட்டிப் பேசும்போது உடைந்து அழுதார். தொடர்ந்து பேச முடியாமல், படம் ஏற்படுத்திய தாக்கத்தால் அழுதபடியே அமர்ந்துவிட்டார். இரவுக்காட்சியில், கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் அவரது திரைக்கதை, வசனத்தில் உருவான ‘இருவர் உள்ளம்’ படத்தைத் திரையிட்டோம். இப்படி நிறைய.. குறிப்பாகப் படவிழாவுக்கு தங்களது அதிநவீன 4கே திரையரங்கை வழங்கிய சென்னை தேவி கருமாரி திரையரங்கினரின் ஆதரவை இங்கே நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
அந்தப் படவிழாக்களின் தரம், படங்களின் தேர்வு, சர்வதேசப் போட்டிப் பிரிவு, சினிமா ரசனைக்கான பயிற்சிப் பட்டறைகள், சுயாதீனப் படங்களை விற்பனை செய்ய சினிமா பஜார் என்று பல அம்சங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT