Last Updated : 22 Dec, 2017 11:14 AM

 

Published : 22 Dec 2017 11:14 AM
Last Updated : 22 Dec 2017 11:14 AM

தரணி ஆளும் கணினி இசை 13: இசைக்குத் தேவைப்படும் இறுதி ஒப்பனை

எகிப்தின் பூர்விக இசை, அதன் பாரம்பரிய வாத்தியங்கள் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கமும் பரவலும் பற்றிப் பெரிய ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதலாம். எகிப்தில் கி.மு.முதல் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஏழாம் கிளியோபாட்ராவை அழகுக்கும் அலங்காரத்துக்கும் அதிபதி என்கிறார்கள். கிளியோபாட்ரா குறித்து நமக்குக் கிடைக்கும் வாய்மொழி வரலாற்றுச் சித்திரத்தை ஒட்டுமொத்தமாக நம் மனக்கண் முன் கொண்டுவரும் மிகப்பழமையான வாத்திய இசைகள் இன்றும் எகிப்தில் பிரபலமாக இருக்கின்றன. கிளியோபாட்ரா என்று யூடியூபில் தட்டினால் வந்துவிழும் வாத்திய இசைத்துண்டுகளைக் கேட்டுப்பாருங்கள்.

கிளியோபாட்ரா, இசையறிவு, வானியல், ஏழு அயல்மொழிகளைக் கற்றுத்தேர்ந்தது உட்படப் பல கலைகளிலும் உடற்கல்வியிலும் விற்பன்னராக இருந்திருக்கிறார். இந்தக் கலைகள் எல்லாவற்றையும்விட அழகுக்கலையில் அவர் மிகச்சிறந்த நிபுணர். ஏழுவகையான வாசனை திரவியங்களைத் தயாரித்து உடலில் பூசிக்கொள்ளும் கறுப்பு அழகியான கிளியோபாட்ரா, தினமும் பாலில் குளித்து, சீனப் பட்டாடை அணிந்து, கண்களுக்கு மை தீட்டி, உதட்டுக்குச் சிவப்புச் சாயம் பூசாவிட்டால் அவரது அழகு முழுமையாக வெளிப்படாது, ஒப்பனையின்றி அவளைக் காணும் யாருக்கும் கிளியோபாட்ரா என அடையாளம் தெரியாது.

அவள் ஒப்பனையின்றியே ரகசிய நகர்வலம் வருவதை வழக்கமாக வைத்திருந்தாள் என வாய்மொழிக் கதைகள் கூறுகின்றன. மிகச்சிறந்த மெட்டும் வரிகளும் சிறந்த குரலும் ஒரு பாடலுக்கு அமைந்துவிட்டாலும் தேர்ந்த மிக்ஸிங், திறமையான மாஸ்டரிங் ஆகிய இரண்டு ஒப்பனைகள் இருந்தால்தான் அரசவையில் ஆண்டனிக்கு அருகில் முழு அலங்காரத்துடன் அமர்ந்திருக்கும் கிளியோபாட்ராபோல ரசிகருக்கு நெருக்கமானதாக ஒரு பாடல் உருமாற்றம் அடையும்.

மிக்ஸிங் மந்திரம்

இசையமைப்பாளர் பாடலையும் பின்னணி இசைக்கோவையையும் கம்போஸ் செய்து முடித்துவிட்டார். பின்னர் கீபோர்டில் சீக்குவென்ஸும் செய்துமுடித்துவிட்டார். அடுத்து‘லைவ்’ வாத்தியங்களையும்சேர்த்துவிட்டார். பாடகர்களும் வந்து பாடிவிட்டார்கள், என்றால் ஒரு பாடலுக்குத் தேவையான அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.

இதன்பிறகுதான் ஒரு பாடலுக்கு மிக்ஸிங் என்ற ஒப்பனை நடக்கிறது. இதற்காக இசையமைப்பாளரும் மிக்ஸிங் இன்ஜினீயரும் உட்கார்ந்து எந்த இசைக்கருவியின் ஒலிக்கு எவ்வளவு வால்யூம் தேவை என்பதை பிக்ஸ் செய்ய வேண்டும். அடுத்து எந்த இசைக்கருவிக்கு என்ன எஃபெக்ஸ்ட் கொடுக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு செய்வார்கள். உதாரணமாகப் புல்லாங்குழல் என்றால் அதற்கு ரிவேப் எஃபெக்ட்ஸ்((Reverb Effect) கொடுக்க வேண்டும். ஒரு தாளவாத்தியம் என்றால் அதை இறுக்கி, கட்டுக்குள் (Compresser Plug in) வைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அது மற்ற முக்கியமான ஒலிகளை டாமினேட் செய்துவிடும். வேவ்ஸ் நிறுவனம், ரெக்கார்டிங், மிக்ஸிங், மாஸ்டரிங் ஆகிய பணிகளுக்கு எண்ணற்ற பிளக்-இன் மென்பொருட்களைச் சந்தையில் விட்டிருக்கிறது. இப்போது ஒருபாடலில் இடம்பெறும் இசைக்கோவைக்காக கிட்டார் இசையைப் பதிவுசெய்துவிட்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை வேவ்ஸின் கிட்டார் ஆம்ஸ் பிளக் – இன் மென்பொருளில் உள்ளிட்டு, அதன் ஒலியைப் பளிச்சென்று தெளிவாக ஒலிக்கச் செய்வது மட்டுமல்லாமல், எலெக்ட்ரிக் கிட்டார், அக்குஸ்டிக் கிட்டார் என எந்த கிட்டாரின் ஒலியாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

ஒரு பாடலின் இசைக்கோவையில் கிட்டார் இசையானது ஒரேமாதிரியான ஒலி வடிவத்தில்(பேட்டர்ன்) திரும்பத் திரும்ப வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். லைவ் கிட்டார் வாசித்த வாத்தியக் கலைஞர் தொடக்கத்திலோ நடுவிலோ கடைசியிலோ எதாவது ஒரு இடத்தில் அவர் வாசித்ததில் எது கச்சிதமாக இருக்கிறதோ அதையே மற்ற எல்லா இடங்களுக்கும் காப்பி செய்து வைத்துவிடுவார் திறமையான மிக்ஸிங் இன்ஜினீயர். இதுபோல் ஒவ்வொரு வாத்தியத்தின் ஒலிக்கும் ஒப்பனை செய்யலாம்.

குவாண்டைஸ் ஆச்சரியம்

அதேபோல் இணைகோடாக வரும் சில ஒலிகளை குவாண்டைஸ் (Quantize) செய்வதும் மிக்ஸிங் பணியில் மிக முக்கியமானது. உதாரணத்துக்கு இரு தாள வாத்தியங்கள் நண்பர்களைப்போலத் தோளில் கைபோட்டுக்கொண்டு இணைந்து வருகின்றன என வைத்துக்கொள்ளுங்கள். அந்த இரண்டில் ஒன்று தள்ளி பதிவாகியிருக்கலாம். அப்படித் தள்ளியிருப்பதை குவாண்டைஸ் செய்வதன் மூலம் அந்த வாத்தியங்களின் ஒத்திசைவை இன்னும் துல்லியமாகத் துலங்கச் செய்ய முடியும். தாள வாத்தியங்களுக்கு மட்டுமல்ல, குரல்களுக்கும் இசைக்கோவைக்குமான ஒத்திசைவையும் கூட குவாண்டைஸ் செய்யும் வசதி வந்துவிட்டது. இன்று குரலுக்கும் குவாண்டைஸ் வந்திருப்பது மிக ஆச்சரியமான விஷயம்.

ஒலிகளுக்கான அலங்காரம் முடிந்ததும் அடுத்து பாடகரின் குரலைக் கையில் எடுப்போம். குரலுக்கு ரிவேப், டிலே ஆகிய எஃபெக்டுகள் தேவைப்பட்டால் சேர்க்கலாம். இதைவிடமுக்கியமானது பாடகரின் குரலைத் துல்லியமாக்குவது. பாடகரின் குரல் மற்றும் அவரது சுவாசத்திலிருந்து தேவையற்ற உபரி ஒலிகள் இயற்கையாக வெளிப்பட்டு பிசிறுகளாகப் பதிவாகியிருக்கும். அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு, குரலை மிகத் துல்லியமாகத் துலங்கச்செய்வது மிக்ஸிங்கில் நடக்கும் வேலைதான். இசைக்குச் சம்பந்தமில்லாமல் ஒலிப்பதிவில் பதிவான இதுபோன்ற உபரிகளை எல்லாம் நீக்குவது மிக்ஸிங் இன்ஜினீயரின் அடிப்படையான பணி.

பாடகரின் குரலைப் பொறுத்தவரை ஸ்ருதி பிசகியிருக்கிறது என்றால் மெலடைன் அல்லது ஆட்டோ டியூன் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி, அதைச் சரியான அளவில் இழுத்து வைப்பார்கள். இதுவும் மிக்ஸிங்கில் நடப்பதுதான்.

மாஸ்டரிங் எதற்காக?

மிக்ஸிங்கில் செய்ய வேண்டிய ஒப்பனைகள் எல்லாம் முடிந்த பிறகு பாடல் முழுமையடைந்துவிடுகிறது. அப்படியிருக்கும்போது அடுத்து மாஸ்டரிங் என்ற ஒன்று எதற்காக என்ற கேள்வி வருகிறது இல்லையா? ஒலிப்பதிவுக் கூடத்தில் மிக்ஸிங் முடிந்து தயாராகிவிட்ட இறுதி வடிவத்தை அங்கே கேட்கும்போது, அதை உருவாக்கிய இசையமைப்பாளருக்கும் ஒப்பனைகள் செய்த மிக்ஸிங் இன்ஜினீயருக்கும் சரியாகவும் தெளிவாகவும் இருப்பதுபோல் தோன்றும்.

ஆனால், மாஸ்டரிங் செய்யாமல், மிக்ஸிங் மட்டும் முடித்த பாடலை வெளியே கொண்டு சென்று ஒரு ஸ்மார்ட் போனிலோ, அல்லது கார் ஸ்டிரீயோ, பொது இடங்களில் உள்ள ஒலிபெருக்கி உள்ளிட்ட வேறு ஆடியோ சாதனங்களில் பிளே செய்து கேட்கும்போது, ஒலிப்பதிவுக் கூடத்தில் கேட்டதிலிருந்து மாறுபட்டு ஒலிக்கும். மாஸ்டரிங் செய்யாமல் பொதுப் பயன்பாட்டுக்கு அதை ஒரு இசைத் தயாரிப்பாக வெளியிடும்போது, அது ஒரு சாதனத்தில் நன்றாகவும் மற்றொன்றில் வேறுவிதமாகவும் ஒலிக்கும். இந்தப் பிரச்சினையைக் களைந்து எறிவதுதான் மாஸ்டரிங்.

மாஸ்டரிங் செய்யும் ஒலிப் பொறியாளர் பத்துக்கும் மேற்பட்ட வித விதமான ஸ்பீக்கர்களைத் தனது பதிவுக்கூடத்தில் வைத்திருப்பார். தொலைக்காட்சிப்பெட்டி ஸ்பீக்கர்களில் ஒலித்தால் எப்படியிருக்கும், வானொலிப்பெட்டியில் எப்படி ஒலிக்கும், லவ்டு ஸ்பீக்கரில் எப்படி ஒலிக்கும், ஸ்டிரியோ ஸ்பீக்கர்களில் எப்படி ஒலிக்கும் என்று, பொதுப்பயன்பாட்டில் எத்தனை விதமான ஸ்பீக்கர்கள் இருக்கின்றனவோ அது அத்தனையிலும் ஒலிக்கச் செய்து பார்ப்பார்கள்.

அப்போது உணரப்படும் வேறுபாடுகளைக் களைய, எல்லாம் தெளிவாக ஒலிக்கும்படி அட்ஜெஸ்ட் செய்வார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் தொலைக்காட்சியிலும் சிறந்த ஒலி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரத்தியேகமாக டி.வி மாஸ்டரிங் செய்வார். சமீபத்தில் எனது ஆல்பம் ஒன்றை மாஸ்டரிங் செய்யக் கொடுத்தேன். முன்னணி இசையமைப்பாளர்கள் பலருக்கும்.

ஹெச்.எம்.சிவசங்கர்தான் மாஸ்டரிங் இன்ஜினீயர். இந்தத்துறையில் கடந்த 20வருடங்களுக்கு மேலாக மாஸ்டரிங் விற்பன்னராக இருக்கிறார். அவரிடம் நான், ‘ இன்று மக்கள் அதிகம் கேட்கும் சாதனம் எது எனக் கேட்டேன். அதற்கு அவர் “இன்று கையடக்க கருவிகளாகிய ஸ்மார்ட் போன்களில்தான் அதிக மக்கள் கேட்கிறார்கள். ஸ்மார்ட் போன்களில் ஹெட்போன் போட்டு கேட்கும் ரசிகர்களுக்கு இணையாக, ஹெட்போன் இல்லாமல் கேட்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருப்பதால் இன்று போன்களிலும் நான் மாஸ்டரிங் சோதனையைச் செய்துவிடுகிறேன்” என்று கூறியபோது வியந்துபோனேன்.

22chrcj_Tajnoor தாஜ்நூர் right

அவர் போனில் மாஸ்டரிங் செய்வதைப் பார்க்கச் சென்றபோது ஆச்சரியமான காட்சியைக் கண்டேன். சந்தையில் மிக மலிவான ஹெட்போன்கள் முதல் விலை உயர்ந்தவை வரை அத்தனையிலும் பாடலை ஒலிக்கவைத்து அவற்றுக்கு ஏற்ப ஒலியின் தரத்தைச் சமப்படுத்தினார்.

இந்த இடத்தில் திரையரங்குகளில் டி.டி.எஸ் , டால்பி போன்ற சரவுண்ட் சவுண்ட் ஒலியமைப்பு அமைத்திருக்கிறார்களே அவற்றுக்குச் செய்யப்படும் மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங் இதிலிருந்து வேறுபடுகிறதா எனக் கேட்கலாம். அதற்கான விளக்கத்தை அடுத்தவாரம் விரிக்கிறேன்…

தொடர்புக்கு tajnoormd@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x