Last Updated : 18 Jul, 2014 09:30 AM

 

Published : 18 Jul 2014 09:30 AM
Last Updated : 18 Jul 2014 09:30 AM

சினிமா சொல்லும் செய்தி

சித்திரை தொடங்கி பங்குனி வரையிலான பன்னிரண்டு மாதங்களில் ஆடி மாதத்தையும் மார்கழி மாதத்தையும் திருமணம் போன்ற நற்செயல்கள் செய்வதற்கு ஏற்ற மாதமில்லை என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அவ்விரு மாதங்களும் இறை வழிபாட்டுக்குப் புகழ் பெற்ற மாதங்கள். இவற்றில் ஆடி மாதம் இறை வழிபாட்டோடு விவசாயத்துக்கும் உகந்த மாதமாகப் போற்றப்படுகிறது. ஒரே நேரத்தில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் உதாரணமாக ஆடி மாதம் விளங்குவது விளங்கிக்கொள்ள முடியாத ஒரு நகைமுரண்.

ஆடி மாதம் என்றால் அம்மன் மாதம் என்றானதால் ஆடி வெள்ளி, ஆடி விரதம் போன்ற படங்கள் தொண்ணூறுகளில் வந்தன. அதற்கு முன்பாக 1962-ல் ஆடிப் பெருக்கு என்றொரு படம் வந்திருக்கிறது.

இவற்றைத் தாண்டி ஆடியின் பெரை வைத்துத் திரைப்படங்கள் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. ஆடியின் பெயரை வைத்துக்கொள்ளாவிட்டாலும் ஆடி மாதங்களில் வெளியிடுகிற மாதிரி நிறைய அம்மன் படங்கள் வந்திருக்கின்றன.

ஆடிக் காற்றிலும் அசையாத நம்பிக்கை

ஆடிப்பட்டம் தேடி விதை என்று புகழ் பெற்ற முதுமொழி இருந்தாலும் ஆடி மாதத்தில் எதையும் தொடங்குவதில்லை. விவசாயத்தை மட்டும் தொழிலாகக் கொண்டிருந்த அக்காலத்தில் ஆடியில் விவசாய வேலைகள் இருப்ப தால் மற்ற செயல்களில் கவனம் செலுத்திக்கொண்டிருக்க முடியாது என்பதால் இந்தமுறை தோன்றியிருக்கலாம்.

நம்பிக்கைகள் சார்ந்த நடவடிக்கைகளுக்குப் பேர்போன திரைப்படத் துறையில் ஆடியில் புதிதாகத் தொடங்குவதில்லை என்பது எழுதப்படாத விதி. உதவி இயக்குநர்களிடம் கதை கேட்டு அதைப் படமாக்கலாம் என்று உறுதியும் கொடுத்துவிட்டு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லித் தள்ளிப்போடுகிறவர்கள் ஆடி முடியட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவிடுவார்கள். நம்ம பொழப்பே ஆடிக் கெடக்குது இதுல இந்த ஆடி வேற என்று பல உதவி இயக்குநர்கள் புலம்புவதைக் கேட்க முடியும்.

படப்பிடிப்பு முடிவடைந்து குரல் பதிவு தொடங்க வேண்டும் என்கிற நிலையிருந்தால்கூட அதை ஆடி மாதத்தில் தொடங்க மாட்டார்கள். எல்லாப் பணிகளையும் ஆனி மாதத்தின் இறுதியில் உள்ள ஒரு நல்ல நாளில் பெயருக்குத் தொடங்கிவிடுவார்கள்.

அந்தப் படத்தின் நாயகன், இன்னொரு படத்தின் படப்பிடிப்புக் காகப் போக வேண்டியிருந் தாலும் ஆடிக்கு முன்னாடி தொடங்கணும் இன்னிக்கு வந்து ஒரு வார்த்தை மட்டும் பேசிட்டுப் போயிடுங்க என்று அழைப் பார்களாம். மற்ற எல்லா விஷயத்திலும் முரண்டு பிடிக்கிறவர்கள்கூட இந்த விஷயத்தில் மறுப்பு சொல்லாமல் வந்து போவார் கள்.

ஆடி மாதத்தில் பிறந்த வர்கள் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள் என்று சோதிடங்கள் சொல் கின்றன. ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு ஆகாது என்றும் சொல்லப் படுகிறது. ஆடி மாதத்தில் தம்ப தியர் இணைந்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும் என்றும், சித்திரையில் பிறந்தால் ஆகாது என்றும் சொல்லி ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரைப் பிரித்துவைக்கும் வழக்கமும் சமூகத்தில் உள்ளது.

பாக்யராஜ் இயக்கி நடித்த எங்க சின்ன ராசா படத்தில் அவருக்கும் ராதாவுக்கும் திருமணம் நடந்த பின்பும் பாக்யராஜின் தாயார், மகனுக் குக் குழந்தை பிறக்கக் கூடாது என்பதற்காகத் தம்பதியினரைப் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து பிரித்துவைப்பார். அவற்றில் ஒன்றாக ஆடி மாதத்தையும் சொல்வார்.

நாயகி ராதா, ஆடியில் கூடினால் சித்திரை யில் குழந்தை பிறக்கும் என்பதற்காகத்தான் இந்த முறையைக் கொண்டு வந்தார்கள். ஆனால் எம்மாதத் தில் கூடினாலும் குழந்தை உண்டாகாது. அதற்கு இது இருக் கிறது என்று ஆணுறையை எடுத்துக்காட்டுவார்.

ஆடியும் இன்றைய சினிமா உலகும்

இன்றைக்கு முன்னணி நடிகையாகவும் இயக்குநர் விஜயின் மனைவியாகவும் ஆகிவிட்ட அமலா பால் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான படம் விகடகவி. அந்தப் படத்தின் மையக் கதையே ஆடி மாதத்தை மையப்படுத்தியதுதான்.

அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் ஜி. கிருஷ்ணன், ஒரு ஊரில் ஐந்து குழந்தைகள் ஆடிமாத்தில் பிறக்கின்றன. ஆடியில் பிறக்கிறவர்களால் அந்த ஊர் என்ன பாடு படுகிறது என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆகாது என்ற மூடநம்பிக்கையை முறியடிக்கும் விதமாகக் காட்சிகளையும் வசனங்களையும் வைத்திருகிறேன். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததே ஆடி மாதத்தில்தான் என்கிற பாடலையும் வைத்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

பாரம்பரிய பழக்க வழக்கங்களை விட்டுவிட்டால் குடும்பத்துக்கு ஆகாது என்று பாமர மக்கள் இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். படித்த அறிவியல் தொழில்நுட்பங்களின் துணையோடு இயங்கிக்கொண் டிருக்கிற திரைத்துறையினரும் இந்த விஷயத்தில் அப்படியே இருக்கிறார்கள். சென்டிமென்டை மீறாத தமிழ் சினிமாவுக்கும் ஆடி மாதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு இப்படி உணர்வுபூர்வமானதாகத்தான் இருக்கிறது.

(‘தி இந்து’ தமிழ், ஆடி மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரையின் சுருக்கமான வடிவம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x