Last Updated : 01 Dec, 2017 10:57 AM

 

Published : 01 Dec 2017 10:57 AM
Last Updated : 01 Dec 2017 10:57 AM

விடைபெறும் 2017: கழுத்தை இறுக்கும் கண்ணி!

ணிக்கைக் குழுவில் இடம்பெறும் பெரும்பாலான உறுப்பினர்களுக்குத் திரைப்படக் கலை பற்றிய பார்வை எதுவும் இல்லை என்னும் விவாதம் எல்லாம் தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. தற்போது, ‘படத்துக்கான தணிக்கைச் சான்றிதழை அதனிடமிருந்து பெறுவதுதான் பெரும் சவாலான ஒன்றாக மாறியிருக்கிறது’ என கோடம்பாக்கம் புலம்பித் தீர்த்துவருவதால் 2017-ல் தமிழ்த்திரை உலகம் எதிர்கொண்டுவரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகத் தணிக்கை மாறியிருக்கிறது.

புதிய நடைமுறை

நல்ல கதை, தேர்ச்சிபெற்ற இயக்குநர், திறமையான தொழில்நுட்பக் குழு, ரசிகர்களுக்குப் பரிச்சயமான நடிகர்கள் எனப் பார்த்துப் பார்த்துப் படக் குழுவை ஒருங்கிணைத்து, எப்படியாவது குறைந்தபட்ச வெற்றிப்படத்தை எடுத்துவிட வேண்டும் என்றே எல்லாத் தயாரிப்பாளர்களும் நினைக்கிறார்கள். நடிகர்கள் சம்பளம், கடனுக்கான வட்டி இரண்டும் மிரட்ட, ஏதோ ஒரு வகையில் முழுப் படமும் தயாராகிவிட்டால், கையோடு தணிக்கையை முடித்துவிடலாம் என்பதுதான் தயாரிப்பாளர்களின் தவிப்பாக இருக்கிறது.

தணிக்கை முடிந்துவிட்டால், நல்ல முறையில் வியாபாரம் செய்து சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒரு படத்தைத் தணிக்கை செய்ய கடைப்பிடிக்கப்பட்டு வந்த எளிய நடைமுறைகள் அனைத்தும் ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றப்பட்டதால் முன்பு 20 நாட்களில் முடிந்த தணிக்கை, தற்போது 60 நாட்களை எடுத்துக்கொண்டுவிட்டது என்கிறார்கள்.

தணிக்கைத் துறையின் தற்போதைய புதிய நடைமுறையின்படி, அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் தணிக்கைச் சான்று கோரும் படங்களின் தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஏழு நாட்கள், படத்தைப் பார்க்கும் ஆய்வுக்குழு அமைக்க பதினைந்து நாட்கள், ஆய்வுக்குழு படம் பற்றிய அறிக்கையைத் தணிக்கை வாரியத் தலைவருக்கு அனுப்ப பத்து நாட்கள், விண்ணப்பதாரருக்கு அவரது படம் என்ன சான்றிதழ் பெறத் தகுதி கொண்டிருக்கிறது, அதைப் பெற என்னென்ன திருத்தங்கள் (வெட்டுகள், சவுண்ட் மியூட்கள்) என்பதைத் தெரியப்படுத்த மூன்று நாட்கள், திருத்தங்களில் நீக்கப்பட்ட காட்சிகள் இருந்தால் தயாரிப்பாளர் அவற்றைத் தணிக்கைக் குழுவிடம் ஒப்படைக்க பதினான்கு நாட்கள், நீக்கப்பட்ட காட்சிகளை ஆய்வுசெய்ய பதினான்கு நாட்கள், அதன் பின்னர் சான்றிதழ் வழங்க ஐந்து நாட்கள் என சுமார் அறுபது நாட்கள் கால அவகாசம் ஆகும் என்கிறது தணிக்கை வாரியம்.

வழக்குகள் அல்ல

இந்த முறையில் இடைத்தரகர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது என்றாலும் படத் தயாரிப்புச் செலவின் ஒரு பகுதியை வட்டிக்கு வாங்கிப் படமெடுக்கும் சிறுபடத் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை 60 நாள் வட்டி ஒரு பெரும் சுமை என்கிறார்கள். “ திரைப்படங்கள் ஒன்றும் வழக்குகள் அல்ல. தணிக்கை செய்ய இரண்டு மாதம் ஆகுமெனில், வட்டி யார் கட்டுவது, கலைஞர்கள் வாழவே கூடாதா?” வெடித்திருந்தார் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி .

தணிக்கை எனும் கண்ணி

பெரும்பான்மையாக இருக்கும் சிறு படத் தயாரிப்பாளர்களின் குரலை இயக்குநராகிய இவர் பிரதிபலித்திருந்தாலும், இன்னொரு பக்கம், இயக்குநர்களுக்கும் தணிக்கைக் குழுவுக்கும் இடையிலான பாடு பெரும் திண்டாட்டமாக மாறியிருக்கிறது என்பதற்குக் கடந்த சில மாதங்களில், ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ ‘விக்ரம் வேதா’, ‘நிபுணன்’, ‘உள்குத்து’ ‘தரமணி’ ‘ஒரு பக்கக் கதை’ என சென்சாரில் சிக்கி அல்லோலப்பட்ட படங்களின் பட்டியல் நீளமானது எனத் தெரியவந்திருக்கிறது.

சிறு முதலீட்டில் தயாரான ‘உள்குத்து’ படத்தின் இயக்குநர் கார்த்தி ராஜுவின் அனுபவமே பெரும்பாலான சிறுபட இயக்குநர்களின் அனுபவமாக இருக்கிறது. “ எனது படத்துக்கு முதலில் யு/ஏ சான்று வழங்கினார்கள். எதற்காக இந்தச் சான்று எனக் கேட்டபோது, ‘சண்டைக் காட்சிகள் அதிகம்’ என்றார்கள். இந்த ஆண்டில் வெளியான ஒரு பெரிய நடிகரின் படத்தைக் கூறி எதன் அடிப்படையில் அந்தப் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கினீர்கள், அதில் பல மடங்கு வன்முறை இருந்ததே என்று கேள்வி எழுப்பினேன்.

அவ்வளவுதான், ‘உன் படத்தை மறுதணிக்கை செய்து வாங்கிக்கொள்’என்று தணிக்கை அதிகாரி தன் பேச்சைப் பட்டென்று முடித்துக்கொண்டு என் நியாயமான கேள்விக்குப் பதில் தராமல் எழுந்து சென்றுவிட்டார். மறுதணிக்கைக்காக மேலும் இரண்டு மாதங்கள் அலைந்தது தண்டனையாக இருந்தது. பல சிறு படங்களுக்கு இதுதான் நடக்கிறது. தணிக்கை திரைப்படங்களுக்கு ஒரு கண்ணிபோலவே ஆகிவிட்டது” என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

‘விக்ரம் வேதா’ படத்தின் இயக்குநர்களில் ஒருவரான புஷ்கர் “தணிக்கையில் ஏற்பட்ட தாமதத்தால் 45 நாட்கள் படத்தைத் தாமதமாக வெளியிட்டோம். ஆன்லைன் தொழில்நுட்பம் என்பதே பணிகளை விரைவாகச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், அது இன்றைய நடைமுறையில் இல்லை. இது மாறியே ஆக வேண்டும்” என்கிறார்.

நடைமுறைகளில் இருக்கும் கால தாமதச் சிக்கல்கள், சிறுபடங்கள் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மை இரண்டுமே களைப்பட வேண்டுமானால் தயாரிப்பாளர் சங்கம் நேரடியாகத் தணிக்கைக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கம் வேறு பல வேலைகளைக் கவனிப்பதிலேயே ஆர்வம் காட்டி வருவதால் தணிக்கைப் பிரச்சினை கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது.

01chrcj_s ve sekarடோல்கேட் அல்ல

தணிக்கைச் சிக்கல் பற்றி மத்திய திரைப்படத் தணிக்கைத் துறை முன்னாள் உறுப்பினர், நடிகர், இயக்குநர் எஸ்.வி.சேகர் என்ன சொல்கிறார்.

“ மஞ்சளில் குளித்து மாலைபோட்டுக்கொண்டு நிற்கும் பலி ஆடு மாதிரி தணிக்கையில் போய் உட்காராதீர்கள். இது உங்கள் படம். திரைக்கதையாக இருக்கும்போதே விவாதித்து என்ன சான்றிதழ் வேண்டுமோ அதற்கு உண்டான படமாக அதை எடுக்க முயலுங்கள். அப்படி எடுத்திருந்தால் அதைத் தணிக்கைக் குழுவிடம் விவாதித்து வாங்குவதற்கான உரிமை பூரணமாக உங்களிடம் இருக்கிறது. கடைசி நேரத்தில் ஏன் பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறோம் என்றால் ரிலீஸ் தேதியை வைத்துக்கொண்டு நாம் தணிக்கைக்குச் செல்கிறோம். சென்சார் போர்டு என்பது திண்டிவனம் டோல் கேட் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். அந்தப் பக்கம் தாண்டிச் செல்லக் காசு கொடுத்தால் கதவைத் திறந்து விட்டுவிடுவார்கள். ஆனால், தணிக்கை அப்படி இல்லையே.

ஆறுமாதம் முன்பே கதை தயார் செய்கிறோம். மூன்று மாதம் படப்பிடிப்பு நடத்துகிறோம். பின் தயாரிப்பு வேலைகள் இரண்டு மாதம் எடுத்துக்கொள்கிறோம். ஆனால், தணிக்கைக்கு மட்டும் ஒரு வாரம் அவகாசம் கேட்டால் எப்படி? அது ஒரு அரசு இயந்திரம். அதற்கு உண்டான வேகம் இருக்கத்தான் செய்யும். அதை நாம் அவசரப்படுத்த முடியாது. இதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

அதே போல் தயாரிப்பாளர் தன்னுடைய பான் அட்டை, ஆதார் அட்டையைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். வேறு யார் பெயரிலும் இனி பினாமியாக இருந்து படம் தயாரிக்க முடியாது. ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாக சினிமா மாற வேண்டுமானால் இந்த நடைமுறைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். கறுப்புப் பணம் ஒழிந்தாலே சினிமா உருப்பட்டுவிடும்” என்கிறார் எஸ்.வி. சேகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x