Published : 08 Dec 2017 11:04 AM
Last Updated : 08 Dec 2017 11:04 AM
2017
-ம் ஆண்டில் தமிழ் சினிமாவை அசைத்துப் பார்த்த பிரச்சினைகளில் ஜி.எஸ்.டி. முறையின் அமலாக்கம் முக்கியமானது. ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவான ஜி.எஸ்.டி. தமிழகத்தில் திரையரங்க டிக்கெட் விலை அதிகரிப்புக்குக் காரணமாகியிருக்கிறது.
இயக்குநரின் கண்ணீர்
முதலில் சினிமா டிக்கெட்கள் ஜி.எஸ்.டி.யின் கீழ் பாவச் சரக்குகள் என்று சிகரெட், மது உள்ளிட்ட பொருட்களோடு வகைப்படுத்தப்பட்டு 28% என்ற அதிகபட்ச வரி விதிக்கப்படுவதாக இருந்தது. கமல் ஹாசன் உள்ளிட்ட திரைத் துறைப் பிரபலங்கள் இதைக் கடுமையாக எதிர்த்ததை அடுத்து ரூ.100-க்குக் குறைவான டிக்கெட்களுக்கு 18% என்ற தளர்வு தரப்பட்டது. இதையடுத்து எதிர்ப்பு ஓய்ந்தது.
ஆனால், ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்குச் சில நாட்களுக்கு முன் தமிழக அரசு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது. ஜி.எஸ்.டி.யைத் தவிர தமிழக அரசுக்கு 30% கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி.-ல் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கொடுக்கப்பட்ட விதிவிலக்கு மூலம் இந்தக் கூடுதல் வரி சுமத்தப்பட்டது. எனவே, ஒரு சினிமா டிக்கெட்டுக்கு 50-60% வரியாகவே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதை எதிர்த்து தமிழகத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இதனால் பலியானது அப்போது வெளியாகியிருந்த ‘இவன் தந்திரன்’. ஜூன் 30 அன்று படம் வெளியானது. அதற்கு முந்தைய நாள் ஊடகர்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுப் பரவலான பாராட்டுகளுடன் படம் வெளியானது. ஜூலை 3-ல் இருந்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளும் மூடப்பட்டன. இதனால் அந்தப் படம் அடைந்திருக்கக்கூடிய வெற்றி பெரிதும் பாதிக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குநர்கள் சங்கங்களின் தலையீட்டைக் கோரி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் சிந்திய கண்ணீர் பலரை உலுக்கியது.
பேச்சுவார்த்தைக்கான குழுவைத் தமிழக அரசு அமைத்ததை அடுத்து சில நாட்களில் போராட்டம் கைவிடப்பட்டது. தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் தற்போது தமிழ்ப் படங்களுக்கு 8%, பிறமொழி இந்தியப் படங்களுக்கு 15% மற்றும் வெளிநாட்டுப் படங்களுக்கு 20% கேளிக்கை வரி விதித்துள்ளது. அதோடு வரிக்கு முந்தைய டிக்கெட் விலையை (base rate) ரூ.150 வரை வைத்துக்கொள்ளவும் தமிழக அரசு அனுமதித்தது. இதனால், சென்னை போன்ற நகரங்களில் டிக்கெட்களின் விலை அதிகரித்துள்ளது.
ஆனால், படத்தின் உள்ளடக்கம் நன்றாக இருந்தால் மக்கள் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பார்கள் என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஸ்ரீதர். “ஜி.எஸ்.டி-யால் டிக்கெட் விலை ஏறியிருப்பதால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்திருப்பதாகச் சொல்ல முடியாது. படம் நன்றாக இருந்தால் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள். ‘விக்ரம் வேதா’, ‘மீசைய முறுக்கு’, ‘அறம்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற படங்களுக்குக் கூட்டம் கூடுகிறது.
அதே நேரம் படம் நன்றாக இல்லை என்றால் யாரும் வர மாட்டார்கள். ‘விவேகம்’ உட்பட இந்த ஆண்டு வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் தோல்வியே. ‘மெர்சல்’ படத்தின் வெற்றிக்கு அதைச் சுற்றி ஏற்பட்ட சர்ச்சை முக்கியமான காரணம்.” என்கிறார். இருந்தாலும் இவர் தற்போது ரூ.100-க்குக் கீழுள்ள விலையிலான டிக்கெட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யை 18%-ல் இருந்து 12% ஆகக் குறைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார்.
குழப்பங்கள் அதிகரித்துள்ளன
“திரையரங்கத்துக்கு மக்கள் வருவது குறைந்திருப்பது உண்மைதான் என்றாலும் டிக்கெட் விலையேற்றம் மட்டும்தான் காரணம் எனச் சொல்ல முடியாது. படம் நன்றாக இருந்தால் வருகிறார்கள். ‘மெர்சல்’ மிகப் பெரிய வெற்றியடைந்திருக்கிறது. பொதுவாகவே பெரிய நாயகர்கள் படம் வரும்போது உடனடியாக மக்கள் வருகிறார்கள். மற்ற படங்கள் நன்றாக இருந்ததாகக் கேள்விப்பட்டால் வருகிறார்கள்.” என்கிறார் தயாரிப்பாளர் சி.வி. குமார். இவர் ஜி.எஸ்.டி.-யால் ஏற்பட்டுள்ள வேறு சிக்கல்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
“ஜி.எஸ்.டி. என்பது டிக்கெட் விலையை மட்டும் பாதிக்கவில்லை. இதற்கு முன்பு மொழிமாற்ற உரிமை தொலைக்காட்சி உரிமை ஆகியவற்றுக்கு 5% வாட் வரி இருந்தது. சினிமாத் துறை நலிந்துவருவதால் அதற்கு விலக்களித்தனர். திரையரங்க உரிமை விற்பனைக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இப்போது அனைத்துக்குமே ஜி.எஸ்.டி உள்ளது. இதனால் ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள படங்களை விற்பதில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன” என்கிறார் அவர்.
இவர் 28%, 18% வரிவிதிப்பு என்பதும் அதிகம் என்றே கருதுகிறார். “சினிமா என்பது ஆடம்பரம் அல்ல. தமிழ்நாட்டில் இன்னும் நிறைய பகுதிகளில் சினிமா மட்டுமே கேளிக்கைக்கான வாய்ப்பாக இருக்கிறது. மேலும், சினிமா என்பது பெரிதும் அமைப்புசாராத் தொழிலாகவே உள்ளது. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்து வரியை 5%ஆகக் குறைத்தால் நன்றாக இருக்கும்.” என்கிறார் குமார்.
கூட்டம் குறைந்துள்ளது
டிக்கெட் விலை ஏற்றத்தால் திரையரங்குக்கு வருபவர்களில் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்கிறார் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான கேபிள் ஷங்கர். “ஜி.எஸ்.டி-ஆல் டிக்கெட் விலை ஏறியிருப்பது படம் பார்க்க வரும் மக்களைப் பாதித்துதான் உள்ளது. தமிழக அரசின் வரி கூடுதல் சுமையாகச் சேர்ந்துகொண்டது. குறிப்பாக, பிறமொழிப் படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. மக்கள் தேர்ந்தெடுத்துப் படம் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
அதனால் வசூல் குறைந்துதான் இருக்கிறது. ‘மெர்சல்’ பெரிய படம் என்பதால் பெரிய வசூல் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு வந்த படங்கள் பரவலாகப் பாராட்டைப் பெற்றாலும் சென்னை. செங்கல்பட்டு, கோயம்பத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் பெரிய அளவில் வசூல் இல்லை என்றுதான் சொல்கிறார்கள்.” என்கிறார் அவர்.
மேலும் “டிக்கெட் ரேட் ஏற்றியது தவறில்லை. குறிப்பாக, மல்டிபிளெக்ஸ்களில் அந்த விலைக்கேற்ற வசதிகள் உள்ளன. இருந்தாலும், அதிகபட்ச வரியை 18%ஆகக் குறைப்பதும் தமிழக அரசின் கேளிக்கை வரியை நீக்குவதும் தமிழ் சினிமா தழைக்க உதவும்.” என்கிறார் அவர்.
அதேநேரம் ஜி.எஸ்.டி-யால் விளைந்துள்ள நன்மையையும் சுட்டிக்காட்டுகிறார் ஷங்கர். “ஜி.எஸ்.டி-ன் மூலம் ஒரு படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்ற உண்மையைத் தெரிந்துகொள்ள வழி பிறந்துள்ளது. கேரளாவில் இருப்பது போல் டிக்கெட் விற்பனையைக் கணினிமயமாக்கி மையப்படுத்திவிட வேண்டும். அதன் மூலம் ஒரு படம் ஒரு குறிப்பிட்ட திரையரங்கில் எவ்வளவு வசூல் செய்தது என்ற உண்மையான கணக்கைத் தயாரிப்பாளர்கள் தெரிந்துகொள்ள முடியும். இது அவர்களுக்குப் படங்களைத் திட்டமிடப் பெரும் உதவியாக இருக்கும்” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT