Published : 26 Dec 2017 09:49 AM
Last Updated : 26 Dec 2017 09:49 AM
விளிம்புநிலை மக்கள் வசிக்கும் குப்பத்தைச் சேர்ந்த படித்த இளைஞர் சிவகார்த்திகேயன். குப்பத்து மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி அவர்களைத் தனது பிடியில் கூலிப்படையாக வைத்திருக்கும் ரவுடி பிரகாஷ்ராஜ். அவரது கட்டுப்பாட்டில் இருந்து மக்களை மீட்டு அவர்களை நேர்மையான வழிக்கு திருப்ப வேண்டும் என்பது சிவகார்த்திகேயனின் நோக்கம். அதற்காக அந்தக் குப்பத்துக்கு மட்டுமே கேட்கும் சமுதாய வானொலியை நடத்துகிறார். பிரகாஷ்ராஜ் குறுக்கீட்டால் வானொலி நிறுத்தப்படுகிறது. பிறகு கார்ப்பரேட் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்குச் சேருகிறார் சிவகார்த்திகேயன். அங்கு தனக்கு மேலே பணியாற்றும் விற்பனை அதிகாரி பகத் பாசிலை சந்திக்கிறார். அவர் கற்றுத்தரும் விற்பனைத் தந்திரங்களில் கைதேர்ந்தவராக மாறுகிறார். ரவுடி தனது சுயலாபத்துக்காக குப்பத்து மக்களை கூலிப்படையாக வைத்திருப்பதற்கும், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தனது லாபவெறியால் தொழிலாளர்களையும், மக்களாகிய நுகர்வோரையும் ஏமாற்றுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை புரிந்துகொள்கிறார். பெரு நிறுவனங்களின் அலட்சியப் போக்குக்கு சிவகார்த்திகேயன் எப்படி பாடம் கற்பித்தார் என்பது மீதி கதை.
நட்சத்திர நாயகனாக உயர்ந்துவிட்ட நடிகரைக் கொண்டு நுகர்வோர் விழிப்புணர்வை முன்னிலைப்படுத்தும் ஒரு கதைக் களத்தை துணிந்து கையாண்ட இயக்குநர் மோகன் ராஜா, பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்த நிலையில் இதுபோன்றதொரு கனமான கதையில் நடிக்க முன்வந்த கதாநாயகன் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
குப்பம் எப்.எம். தொடங்கி அம்பேத்கர், விவேகானந்தர், நம்மாழ்வார் படங்களை வரிசையாக ஒட்டி வைத்து இளைஞர்களை திருத்த அறிவுப்பூர்வமாக பேசுகிறார் சிவகார்த்திகேயன். பின்னர் தன் தந்தை சார்லி, நாயகி நயன்தாரா, நண்பர்கள், தொழிலாளர்கள் என அனைவரிடமும் வரிசையாக பேசிக்கொண்டே இருக்கும் சிவகார்த்திகேயன் பார்வையாளர்களையும் விட்டுவைக்கவில்லை. வழக்கமான காமெடி, காதல், குறும்பு உடல்மொழிகள் இல்லாத குப்பத்து இளைஞராகவும், பொறுப்புள்ள தொழிலாளராகவும் நடித்திருக்கிறார் .
தமிழில் அறிமுகமாகியுள்ள மலை யாள நடிகர் பகத் பாசில் பிரித்து மேய்ந்திருக்கிறார். தமிழிலும் திருத்தமாகப் பேசி அசத்துகிறார். தொடக்கத்தில் தன் நுட்பமான உடல்மொழியால் வசீகரிக்கிறார். போகப் போக, ஸ்கோப் செய்ய வாய்ப்பு இல்லாததால், வெறுமனே கடந்து போகிறார்.
நயன்தாராவை ஆர்ப்பாட்டமாக அறிமுகப்படுத்திவிட்டு, கதாநாயகனின் ஆறுதலுக்கும் அணைப்புக்குமான கருவேப்பிலையாக பயன்படுத்தியதில் ஏமாற்றம். கதையில் நயன்தாராவைவிட கனமான கதாபாத்திரம் என்பதால், அதை உணர்ந்து நடித்திருக்கிறர் சினேகா. பிரகாஷ்ராஜ், சதீஷ், ரோபோ சங்கர், ஆர்ஜே பாலாஜி, காளி வெங்கட் என பலர் இருந்தாலும், தந்தையாக வரும் சார்லியும், நண்பனாக வரும் விஜய் வசந்தும் கவனிக்க வைக்கின்றனர். ‘நாம வேலைக்குத்தான் விசுவாசமா இருக்கணும், வேலை குடுக்குற முதலாளிக்கு இல்ல’, `நாம பொருளை விற்கலை, பொய்யை விக்குறோம்' என அடுத்தடுத்து வரும் வசனங்கள் நச். செட் என்று எந்த இடத்திலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு குப்பத்தை உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குநர் முத்துராஜ்.
குப்பத்தின் உயிரோட்டம், மாநகரின் உயிரோட்டம் இரண்டையும் தனது பறவைப் பார்வையால் காப்பாற்றுகிறது ராம்ஜியின் ஒளிப்பதிவு. அனிருத்தின் பாடல்கள், பின்னணி இசை இரண்டிலுமே இளமைத் துள்ளல்.
கீழ் நிலையில் உள்ள பணியாளரால் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தை பேசியே மாற்றிவிட முடியுமா? 6 மூட்டைக்குப் பதில் 3 மூட்டை மூலப் பொருட்களைப் போட்டால் பாக்கெட் உணவுகள் நல்லதாகிவிடுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. நல்ல கருத்தை சொல்ல வந்த இயக்குநர், அதை மேலும் அழுத்தமான கதைக் களம், விறுவிறுப்பான திரைக்கதை, வலுவான கதாபாத்திரங்கள் மூலம் திரையில் படரவிட்டிருந்தால், மனதை தொட்டிருப்பான் வேலைக்காரன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT