Published : 18 Aug 2023 06:14 AM
Last Updated : 18 Aug 2023 06:14 AM
‘விக்ரம்’ படத்துக்கு முன்னர் தொடங்கி, படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தால் நிறுத்தப்பட்டது ‘இந்தியன் 2’. அதை ஒருவழியாக விட்ட இடத்தி லிருந்து இயக்கி முடித்துவிட்டார் ஷங்கர். தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தில் இந்தியன் தாத்தா ‘சேனாபதி’ கதாபாத் திரத்தில் கமலின் புதிய தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டிருக்கிறது.
அதில் முதல் பாகத்தில் பார்த்த சேனாதிபதியைவிட சற்று முதுமை கூடிய தோற்றத்தில் இருக்கும்விதமாக கமல் சித்தரிக்கப் பட்டுள்ளார். இப்படத்தில், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் பின்னணி இசைப் பணிகளைக் கவனித்து வருகிறார்.
நவீன் சந்திராவின் ‘லெவன்’ - கடந்த 2014இல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘சரபம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நவீன் சந்திரா. அதன் பின்னர், ‘சிவப்பு’, ‘பிரம்மன்’ ஆகிய படங்களில் நடித்திருந்த இவர், தற்போது இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’, கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய இரண்டு முக்கியமான படங்களில் நடித்துவருகிறார். இவற்றுக்கிடையில் தற்போது, தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகும் ‘லெவன்’ என்கிற புலனாய்வு திரில்லர் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘செம்பி’ ஆகிய தரமான படங்களைத் தயாரித்த ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் அஜ்மல் கான் - ரியா ஹரி ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். சுந்தர்.சியின் உதவியாளர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கும் இப்படத்துக்கு இசை டி. இமான். பாலிவுட்டில் தற்போது பிரபலமாக இருக்கும் கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. படத்தொகுப்பு செய்கிறார்.
‘டெமன்’ மனிதர்கள்! - கடந்த ஜனவரியில் வெளியான ‘பிகினிங்’ திரைப்படத்தின் மூலம் விமர்சன ரீதியாகப் பாராட்டைப் பெற்றவர் நடிகர் சச்சின். அதேபோல் வசந்தபாலன் இயக்கிய ‘ஜெயில்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அபர்னதி. இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘டெமன்’. வசந்தபாலனின் உதவியாளர் ரமேஷ் பழனிவேல் இயக்கியிருக்கும் இப்படத்தை, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.சோமசுந்தரம் தயாரித்துள்ளார்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இதில் “குடும்ப, காதல் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். நிஜ வாழ்க்கையில் மனிதர்களே பெரும்பாலான நேரங்களில் பேய் போல் நடந்துகொண்டால் என்னவாகும் என்பதை அன்றாட நிகழ்வுகளின் பின்னணியில் ஒரு காதலை வைத்துக் கூறியிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர். சச்சின் - அபர்னதி ஜோடியுடன் கும்கி அஸ்வின், ரவீனா தாஹா, ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம், செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
உண்மை இனிக்கும்! - “பள்ளி வாழ்க்கையைக் கதைக் களமாகக் கொண்ட படங்கள் அவ்வப்போது வந்துகொண்டிருந்தாலும் எதிலும் உண்மை என்பதே இல்லை; ரீல்தான் அதிகமாக இருக்கிறது என்று ரசிகர்களுக்குத் தெரியும். அவர்களை உண்மைக்கு அருகே அழைத்து வரும் ஒரு ஜாலியான முயற்சிதான் ‘ரங்கோலி’. உண்மை கசக்கும் என்பார்கள். இந்தப் படத்தில் எனது வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் கதாநாயகனுக்கான கதாபாத்திரமாக உருவாக்கியிருக்கிறேன்.
இந்த உண்மை இனிக்கும்” என்கிறார் படத்தை எழுதி இயக்கியிருக்கும் வாலி மோகன் தாஸ். இவர் இயக்குநர் வசந்த் சாயிடம் உதவியாளராகப் பணி புரிந்தவர். அரசுப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவனை, அவனது தந்தை தனியார் பள்ளியில் சேர்ப்பதால் உருவாகும் சிக்கல்கள்தான் கதை. ஹமரேஷ் நாயகனாக அறிமுகமாகிறார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கான ஒளிப்பதிவை மருதநாயகம் கவனித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT