Published : 11 Jul 2014 04:22 PM
Last Updated : 11 Jul 2014 04:22 PM
கவிஞர் வாலி முதலாண்டு நினைவு: ஜூலை 18
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த பாபா பட வேலைகள் கிண்டி கேம்பாகோலா வளாகத்தில் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அந்தப் படத்திற்கு எழுதிய ‘மாயா மாயா’ என்ற பாடலோடு அங்கே வந்தார் வாலி.
படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே நின்றிருந்த டெல்லி கணேஷிடம் பேசிவிட்டு “உமக்கும்தான் கவிதை ஆர்வம் உண்டேயப்பா வாரும் உள்ளே போகலாம்” என்று டெல்லி கணேஷையும் அழைத்துக்கொண்டு அந்த வளாகத்தில் ரஜினிக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குப் போகிறார் வாலி.
வாலியைப் பார்த்ததும் ஜிலீர் முக மலர்ச்சியுடன் அவரை வரவேற்கிறார் ரஜினி. மூவரும் உட்காருகிறார்கள். பாடல் வரிகளை வாலி படித்துக்காட்ட ஆரம்பிக்கிறார். அப்போது உள்ளே வந்த ஒருவர் ரஜினியின் காதில் ஏதோ சொல்ல “அண்ணே ஒரு நிமிஷம்” என்றபடி ரஜினி அறையை விட்டு வெளியே செல்கிறார்.
வெளியே கவிஞர் வைரமுத்து! அவரை வரவேற்று அங்கிருந்த மற்றொரு அறையில் உட்காரவைத்துவிட்டு மீண்டும் உள்ளே வந்த ரஜினி, “அண்ணே சிங்கமும் புலியும் சந்திக்கப் போகுது” என்று சிரித்துக் கொண்டே வாலியிடம் சொல்கிறார்.
உடனே வாலி கேட்டாராம் “என்னய்யா வைரமுத்து வந்திருக்கிறாரா?”என்று. வியந்துபோய் ரஜினி வாலியைப் பார்க்க... “அது சரி! சிங்கமும் புலியும் சந்திக்கப் போகுது என்றால் இதில் யாரு சிங்கம்? யாரு புலி?” என்று வாலி கேட்க, இந்தக் கேள்வியை எதிர்பாராத ரஜினி சரியான பதிலுக்காகச் சில நொடிகள் யோசிக்க, வாலியோ தனக்கே உரிய வேகத்துடன் “நா சொல்லட்டுமாய்யா...” என்றபடி “நான்தான் சிங்கம்.வைரமுத்து புலி” என்றதும் ரஜினியும் டெல்லி கணேஷும் வாலியையே பார்த்திருக்கிறார்கள்.
உடனே வாலி தன் வெண்தாடியைத் தடவிக்கொண்டே சொன்னராம். “என்னய்யா பார்க்கிற!? நான்தானய்யா தாடி வச்சிருக்கேன். அதனால நான் சிங்கம்” என்று கம்பீரமாகச் சொல்ல, வாலியின் ‘டைமிங் சென்ஸை’ப் பார்த்துத் தனக்கே உரிய அட்டகாசமான சிரிப்பை உதிர்த்தாராம் சூப்பர் ஸ்டார். இந்தச் சம்பவத்தில் உடனிருந்த டெல்லி கணேஷ் இதை நினைவுகூர்ந்திருக்கிறார்.
- நெல்லை ஜெயந்தா தொகுத்தளித்த ‘வாலி 100’ புத்தகத்திலிருந்து...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT